Wednesday, August 16, 2006

19 : தொட்டால் பூ மலரும்

Photobucket - Video and Image Hosting

இந்த கதையின் கதாநாயகன் சேகரைப் பார்த்ததும் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று நெற்றி நீவுவீர்கள். அப்படிப்பட்ட அடுத்த வீட்டுப் பையன் முகம் அவனுக்கு. பிடித்தவைகளுக்காக எதையும் செய்யும் ஃபெவிகால் அன்புக்கு சொந்தக்காரன்.

அதே சமயம் அவர்கள் இன்னதைத்தான் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கும் ரகம். இவன் வாங்கி கொடுக்கும் வெற்றிலையை மட்டுமே அவன் பாட்டி மெல்ல வேண்டும். வேறு யாரோ வாங்கி கொடுத்தார்கள் என்றோ, அல்லது தாமதமாகி விட்டது என்று பாட்டியே வாங்கி மென்று கொண்டிருந்தார்களோ கெட்டது கதை. வாயிலிருப்பதை துப்ப வைத்துவிட்டு, வாய் கொப்புளித்து இவன் வாங்கி வந்ததை மெல்லும் வரை விடமாட்டான்.

கல்லூரி சென்ற முதல் வருடம் இவன் மொபெட் கேட்க பைக்கே வாங்கி நிறுத்தினார் இவன் தந்தை. இருப்பினும் இவன் கேட்ட மொபெட் கிடைக்காததால் அந்த பைக்-கை தொட மறுத்த கதையை கண்ணீரோடு மூக்கை சிந்திக்கொண்டு இன்றும் சொல்வார் இவன் அம்மா. நாள் தோறும் இவன் தலைகோதி தூங்க வைக்க வேண்டும். சர்க்கரை தூக்கலாக காஃபி இவன் படுக்கையறைக்கே வர வேண்டும். வீட்டுநாய் நாளைக்கு ஒருமுறைதான் நுகர வேண்டும். இப்படி ஏகப்பட்ட நல்லதும் கெட்டதுமான வட்டங்களுக்குள் வாழ்பவன். அவன் எதிர்பார்ப்பில் ஓரிரு சதவீதம் கூட நான் ஈடு செய்வதில்லை எனினும் என்னையும் ஏதோ ஒரு காந்தி கணக்கில் சேர்த்து நட்பு பாராட்டுபவன்.

சேகர் கொஞ்சம் கவிதைகள் எழுதுவான். தப்பித்தவறிக்கூட ஒன்றுமே பிரசுரமானதில்லை, அதற்காக துவளுகிற வம்சமுமில்லை நம் கதாநாயகன். பிரசுரமாகாவிடினும் எதுவும் திரும்ப வருவதில்லை என்ற மட்டிலேயே கர்வப்படுகிறவன். போதிய தபால்தலை இணைப்பதில்லை என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை உங்களுக்கு. வெள்ளைக்காகிதத்தில் கவிதையொன்றை எழுதி, மூன்றாக மடித்து, கவரில் திணித்து, எவ்வளவு பசையிருந்தாலும் எச்சிலால் மட்டுமே ஒட்டி, தபால்தலையை நாக்கில் ஊறவைத்து பின் ஒட்டி அஞ்சல் செய்யும் அழகை காண கண் கோடி வேண்டும்.

நாளொரு சிந்தனையும், பொழுதொரு கவிதையுமாக திரியும் அதுபோன்றதொரு சுபயோக சுபதினத்தில்தான், சேகர் பாஷையில் சொல்வதானால், தென்றல் க்ராஸ் ஆகியிருக்கிறது. தென்றலின் துப்பட்டா காற்றில் கலைய அதை சரி செய்யும் வேளையில் கையிலிருந்த காகிதங்கள் காற்றில் பறந்து நம் கதாநாயகனின் கனிமுகத்தில் கட்டிமுத்தம் (எத்தனை 'க' சே!) இட்டிருக்கிறது. காகிதங்களை எடுத்து கொடுக்கும் போது, அதில் கவிதை இருந்ததை, விரல்கள் உரசி மின்சாரம் பாயும் தருவாயில் கூட கவனித்துவிட்டான் க.க.சேகர்.

க.க. என்றால் என்ன என்று யோசிப்பவர்களுக்கு "தங்கவேட்டை" பாணியில் ஒரு கேள்வி.
க.க. என்றால்....
அ) கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ஆ) கதையின் கதாநாயகன்
இ) கழுகு கண்ணன்

இ) என சரியான விடையளித்தவர்கள் மட்டும் உங்களுக்கு நீங்களே க.க.க.போ சொல்லிக்கொண்டு மேலே தொடருங்கள், என்னது க.க.க.போ என்றால் என்னவா?...இல்லங்க உங்களுக்கும் எனக்கும் சரிப்படாது தயவுசெய்து வேறு பக்கம் போய்விடுங்கள்!

பிறகென்னங்க... சரி சரி நம் கதைக்கு வருவோம், அப்படியே கவிதை பற்றி கொஞ்சம், 2 ரூபாய் அரிசி, சிதம்பர ரகசியம் முடிவு, சிவாஜி ரஜினி, உனக்கும் எனக்கும் (something something சொல்லலாமா கூடாதா) த்ரிஷா, என்று கடலை வறுத்துவிட்டு வந்தவனுக்கு, துப்பட்டா சரி செய்வதும், கவிதை காகிதம் பறந்து வந்து க.மு.வில் க.மு இட்டதும், சிரிப்பிடையே தேங்க்ஸும் படத்திலெல்லாம் வருவது போல் வந்துவந்து போயிற்றாம்.

அடுத்தடுத்த சந்திப்புகளில் செடி வளர்ந்திருக்கும் போல, "செட்டாயிருச்சு மச்சி ஆனா கன்ஃபர்ம் பண்ணனும்" என்று என்னை ஆச்சரியப்படுத்தினான்.

அன்பே சிரிக்கும்போது
கையால் மறைத்துக்கொள்
தாயின் தலைமகன் நான்
மின்னலைப் பார்க்கக் கூடாதாம்!

என்ற கவிதையில் (?!) வரி ஒவ்வொன்றையும் இரண்டுமுறை படித்துவிட்டு கண்கள் அகல 'எப்படியிருக்கு' என்பது போல பார்த்தான். 'சூப்பர் மச்சி, உன் காதலையும் ஒரு கவிதையாய் எழுதி ஒரு ரெட் ரோஸும் வச்சுக் கொடுத்தன்னு வையு பத்திக்கும்டா' என்று திரி கிள்ளிப் போட்டு வந்துவிட்டேன்.

Photobucket - Video and Image Hosting
இரண்டு நாட்களாக ஆளைக் காணவில்லையாதலால் வீட்டுக்கே போனேன், 'மேல மாடியிலதாம் கெடக்கான், என்ன ஆச்சுன்னே தெரியல' என்று விலகினார் இந்த தலைமகனைப் பெற்ற தாய். அவன் அறையெங்கும் கசக்கியெறியப்பட்ட காகிதப் பந்துகள், நடுவே நம் கவிஞர். நான் கிள்ளிப்போட்ட திரிதான் புகைந்து கொண்டிருந்தது. தமிழில் பெண்ணைப் புகழும் அத்தனை வார்த்தைகளையும் கொட்டி ஒரு கவிதை தயாரித்திருந்தான்.

'டேய் நாளைக்குத்தான் என் 'லவ்'வ சொல்லப் போறேன், நீயும் எங்கூட வர்ற' என்று போட்டான் ஒரு 'பொக்ரான்'. திமிறி தப்பிக்க முயன்ற என்னை தாஜா அத்தனையும் செய்து சம்மதிக்க வைத்தான். என்னை உட்கார வத்து கவிதையின் வரி ஒவ்வொன்றையும் இரண்டு முறை வீதம் வழக்கம்போல் கவிதை வாசித்தான். அதில் எந்த வரிகளின் போது இவன் காதலி வெட்கப்படுவாளென்றும் அதை மூன்றாவது முறையாக வாசிக்க உத்தேசித்திருப்பதாகவும் கூறிக்கொண்டே போனான்.

'உன் காதலை ஏற்க மறுத்தால் என்னடா செய்வ' தயங்கியவாறே வந்த என் கேள்வியையும் என்னையும் புழுவினும் துச்சமாய் பார்த்தான், இத்தனை நாள் பழக்கத்தில் அவளை இவன் நன்றாகவே எடை போட்டிருப்பதின் அடிப்படையில் (ஹைஹீல்ஸ், டம்பப்பை சேர்த்து 53 கிலோ என்பது உட்பட) கூறியதாவது, அவளுக்கு இவன்மேல் ஒரு 'இது' இருப்பது கண்கூடு அதனால் மறுக்கவெல்லாம் மாட்டாளாம், ஆனால் ஆணான இவனுக்கே காதலை வெளிப்படுத்த இத்தனை நாட்கள் ஆகியிருப்பதால் அவளுக்கு இதைவிட பயமும் தயக்கமும் அதிகமாகவே இருக்கக்கூடும், கூடுமென்ன கூடும்... அதிகமாகவே இருக்கும். ஆனால் அதற்கு அவன் கவிதையிலேயே சமாதானம் இருப்பதையும் சுட்டிக்காட்டி, மறுநாள் இதுவன்றி வேறெதுவும் நிகழாது என தீர்மானம் நிறைவேற்றிய நேரம் நள்ளிரவு மணி 12.

இரவெல்லாம் எனக்கு கனவு மேல் கனவு. அவள் கத்தி ஊரைக் கூப்பிடுவது போலவும், ஊரே கூடி மாத்து மாத்தென்று மாத்துவது போலவும்... வியர்வைக் குளியலில் நெஞ்சப் படபடப்பு எத்தனை நீவியும் அடங்கவில்லை. கொசுக்களின் ரீங்காரம் வேறு சங்குபோல் ஒலித்து தொலைத்தது. ஏதோவொன்றை சொல்லி தப்பிக்கலாம் என்று அவன் வீட்டுக்கு போனால் கேட்கிற நிலையில் நம் ஹீரோ இல்லை.

அலமாரியிலிருக்கும் துணிமணிகள் வீடெங்கும் இறைந்து கிடக்க 'எதடா போடறது' என்றான். நானும் பொறுப்பாக சந்தனநிற சட்டையும் வெள்ளைநிற பேண்ட்-ஐயும் கொடுத்து 'மாப்ள மாதிரி இருக்கும், போடுறா' என்றதும் வெட்கத்தை பார்க்கணுமே... 'உதை நிச்சயம்டா மச்சி' என்று பட்சியின் குரல் மூலை(ள)யில் ஒலித்தது.

கேவலமான காம்பினேஷன் ஆனாலும் 'மாப்ள மாதிரி' என்றதற்காகவே போட்டிருப்பான் என்பது என் கணிப்பு. பீச்சுக்கு போகும் வழியில் பூக்காரபெண்ணிடம் சிவப்பு ரோஜா ஒன்றை வாங்கி, 50 ரூபாய் கொடுத்து, 'கீப் த சேஞ்ச்' என்றதில் ஆங்கிலப் புலமையை பூக்காரிக்கும், அவன் காதலின் ஆழத்தை எனக்கும் ஒருசேர புரிய வைத்தான்.

என்னை அறிமுகப்படுத்திய பின், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஏற்பாட்டின்படி நான் பஞ்சுமிட்டாய் வாங்கி வருவதாய் சொல்லி படகுக்கு பின்னால் மறைந்து கொண்டேன். எதிர்பாரா திருப்பமாய் அவளே ஆரம்பித்தாள். சேகரை அவள் காதலிக்கும் விஷயத்தை துப்பட்டா நுனி திருகாமலே தைரியமாய் சொல்லி முடித்தாள்.

Photobucket - Video and Image Hosting'நானும்தான்' என்று அணைத்திருக்க வேண்டும் நமது ஹீரோ, இந்த சிச்சுவேஷனுக்கு பீச்சாக இருப்பதால் ஒரு டூயட் கூட வைக்கலாமென்று நான் யோசிக்கும் வேளையில் திருப்பத்திற்கு மேல் திருப்பம். 50 ரூபாயை கசக்கி கீழெறிந்து மிதித்து, கவிதையையும் கிழித்து எறிந்துவிட்டு என்னையும் கூப்பிடாமலே, கோபமாய் கிளம்பி விட்டான். எனக்கோ பாட்டி-வெற்றிலை, அப்பா-பைக் என சகலமும் ஞாபகத்திற்கு வர தென்றலை தேற்றும் முயற்சியில் ஈடுபட்டேன். தேம்பித் தேம்பி அழுதபடி என் தோள் சாய்ந்தது தென்றல். ஆறுதல் சொல்ல வந்தவனுக்கு "ஹையோ பத்திக்கிச்சு".

டிஸ்கி : இந்த கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள், கதாபாத்திர குணநலன்கள் அனைத்தும் கற்பனையே, இவை எவையும் என் உதவாக்கரை நண்பர்களையோ, உயிருக்குயிரான எதிரிகளையோ குறிப்பிடுபவன அல்ல!

5 comments:

Anu said...

ha ha ha ha..
ippa purinjudu patchi sollium kooda nee edukkaga sekar kooda ponannu...;)

Anonymous said...

I expect the climax...But you impressed more in disclaimer.
Karvendan

கதிர் said...

அட சாமீ,

எத்தனை படத்தில பாத்திருக்கோம் இந்த முடிவை. காதலை சொல்றவன் தனியாதான் போய் சொல்லணும், இல்லனா இந்த கெதி தான்.

ராசுக்குட்டி said...

அனிதா-> உண்மையனைத்தும் அறிந்தும் 'உள்'குத்தா?

கார்வேந்தன் -> நல்ல பெயர், என்னுடைய கெட்ட பழக்கங்களில் இதுவும் ஒன்று!

தம்பி -> சேகர் முடிவுக்கு அப்புறம்தானே, அந்த பொண்ணு முடிவெடுக்குது... நண்பன் வந்ததாலதான்றது ???!

U.P.Tharsan said...

haha! parthen rasitheen