Sunday, August 06, 2006

15 : உறவும் பிரிவும்!

அன்று நல்ல மழை, அடுப்படியிலிருந்து வெங்காய பஜ்ஜி வாசனை, முறுகலாய் வந்துகொண்டிருந்தது. ரேடியோவில் பொருத்தமாக மழைப்பாடலொன்று அன்றைய தினத்திற்கு ரம்மியம் சேர்த்துக் கொண்டிருந்தது. அப்பாவின் TVS-50 சத்தத்தை எப்படித்தான் அம்மா கண்டுபிடிக்கிறார்களோ, அம்மா வாசலுக்கு ஓடுவதற்கும் அப்பா வருவதற்கும் சரியாக இருந்தது.

வண்டியில் இருந்த சாமான்களை வாங்குவதற்கு நானும் வாசல் விரைந்தேன். காய்கறி பைகளை அம்மாவிடம் கொடுத்து விட்டு, என்னிடம் ஒரு சிறுகூடையை கொடுத்தார் சற்றே குறும்பான புன்னகையுடன். புரியாமல் வாங்கி பார்த்த நான் அதிர்ச்சியில் கீழே போட்டாலும் போட்டிருப்பேன். உள்ளே கண்கள் கூட இன்னும் திறக்காத நிலையில் ஒரு நாய்க்குட்டி இருந்தது, பாலைவன மணல் நிறத்தில்.

என் தந்தை கணக்கெழுதும் இடத்தில், மழைக்கொரு நாய் ஒதுங்கி இரண்டு குட்டிகளை ஈன்றிருக்கிறது, முதலாளியின் உறவினர் ஒருவர் தாயையும் ஒரேயொரு குட்டியை மட்டும் எடுத்துக் கொண்டாராம். மிச்சமிருக்கும் ஒரு குட்டியை என்ன செய்வதென்று தெரியாதவர் என் தந்தையிடம் கொடுத்து எங்காவது காட்டில் விட்டுவிடச் சொல்லியிருக்கிறார். மழையில் அந்தக்குட்டி என்ன செய்யும் என்றெண்ணி எங்கள் வீட்டுக்கு எடுத்து வந்து விட்டார்.

இந்த இடத்தில் என்னையும் என் அம்மாவையும் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும், எங்களுக்கு நகரும் உயிரினங்கள் எதைப் பார்த்தாலும் மயிற்கூச்செரியும், முக்கியமாக பூனை மற்றும் எலி. அவைகளை பார்த்தால் போதும் நடுமுதுகுத் தண்டில் மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு நிமிடம் நடுங்கி அடங்கும். கல்லூரிக்கு செல்லும் வயது வந்தும், நாய்கள் மீது அப்படி ஒரு பயம் இருந்தது எனக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.

முதலில் அதன் அருகில் செல்லக்கூட எங்களுக்கு தயக்கமாக இருந்தது, அப்பாதான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். மிக லேசான வேஷ்டித்துணியை பாலில் முக்கி அதன் வாயருகில் வைக்க, கண்ணைக்கூட திறக்காமல், மிகச்சிறிதாய், மிக மிகச்சிறிதாய் வாய் திறந்து சுவைத்த அழகு இருக்கிறதே... வானவில் உதயமாகிக் கொண்டிருக்கும் தருணத்தில் மிகச் சரியாய் வானம் பார்க்கின்ற அழகுக்கு ஈடு அது! அப்பாப்பா...நானுப்பா என்று நான் பாலூட்டினேன், எதேச்சையாய் அதன் மெல்லிய உதடுகள் என் விரல் தொட அந்த மின்சார அதிர்வில் என் பயமனைத்தும் விலகியது. அதன்பின் அது கண் திறந்த நாள், மெலிதாக விசிலடிப்பது போல் சத்தமெழுப்பிய நாள், நடந்த கணம், ஓடிய தினம், மாடிப்படியேறிய மாலை எல்லாமே நாட்குறிப்பில் ஏறியது.



மற்றுமொரு சுபமுகூர்த்த மழைநாளில் அதற்கு 'மணி' என பெயர் சூட்டுவிழாவும் நடந்தேறியது. என் ஓய்வு மணித்துளிகள் அனைத்தையும் மணியுடன் செலவிட எங்களுக்குள் இயல்பாய் ஓர் உறவு மலர்ந்தது. ஹட்ச் இணைப்பு போலே எங்கு சென்றாலும் எனைப் பின் தொடர்ந்தது மணி. என்னுடன் மாடிப்படிகளில் விரைவாக ஏறி இறங்குவது, பந்து விளையாடுவது என்று சரிக்கு சரி போட்டி போடும். மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு மணியுடன் கதைப்பது, என் அன்றாட நிகழ்வில் ஒன்றாகிப் போனது. இதற்குள்ளாய் என் அம்மாவின் உற்ற தோழியாகவும் மாறி விட்டிருந்தது மணி.

தோழி என்றா சொன்னேன், ம்... சரிதான். அது பெண் நாய் என்பதை வெகு நாட்களுக்கு பின்தான் கண்டு கொண்டோம், பெயரை மாற்றி விடலாமா என்று கூட யோசித்தோம். அம்மாதான், "மணிமேகலை, மணியம்மைன்னு எதையாவது நெனச்சுக்கடா... மணின்னே கூப்பிடுவோம்" என்று அந்த யோசனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். மணி பெண்ணாயிருப்பதில் எங்களுக்கு ஒன்றும் வருத்தம் இருக்கவில்லை, அந்த ஒரு பிரச்னை வரும் வரையில்.

திடீரென்று, நிறைய நாய்கள் எங்கள் வீட்டைச்சுற்ற ஆரம்பித்தன, முக்கியமாக இரவுகளில். குறைப்புச் சத்தங்களும், அவைகளூடே நடக்கும் சண்டைகளும் தங்களை தூங்கவிடாமல் செய்வதாய் அக்கம் பக்கமிருந்து புகார்கள் வர ஆரம்பித்தன. நானும் என் அப்பாவும் ஆச்சரியப்படும் வகையில், மணிக்காக வரிந்து கட்டிக்கொண்டு அம்மா எல்லோரிடனும் சண்டையிட்டார். நாங்கள் பொறுமையின்றி சலித்துக் கொள்ளும்போது கூட எங்களைத்தான் அதட்டுவார்.

நாங்கள் ஆச்சரியப்படும் வகையில் இரண்டொரு வாரங்களில் சத்தம் சுத்தமாக குறைந்து விட்டது, இப்போதெல்லாம் மணி தட்டில் வைக்கும் சாதத்தை நொடிப் பொழுதில் தின்று தீர்த்தது. "எம்மா மணிக்கு பானை வயிறாய்டுச்சும்மா.. சாதம் வச்சுட்டு இப்டின்றதுக்குள்ள சாப்ட்டு முடிச்சுடுது" என்றதுக்கு என் அம்மா சொன்னதுதான் சில பல விஷயங்களை விளக்கியது, "ச்சீ சும்மா இருடா... அது மாசமா இருக்கு"!

அடுத்தடுத்த மூன்று வாரங்களில் சாப்பிடுவதை வெகுவாக குறைத்துவிட்டது, எதையாவது மென்று கொண்டேயிருக்கும் ஆனால் வைத்த சாதம் அப்படியே இருக்கும். நானோ என் தம்பியோ முட்டை சாப்பிட்டு வந்தாலே முகம் சுளிக்கும் என் அம்மா, அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து எலும்புத்துண்டை போடச் செய்தார்கள். பின் வந்த மூன்று வாரங்கள் கொஞ்சம் இறைச்சியும் கிடைக்குமாறு பார்த்துக் கொண்டோம். நாய் வளர்ப்பைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அந்த கருத்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டது. மணியை துரத்திவிடுவதில் அக்கறையாய் இருந்த அண்டை வீட்டார்கூட, கர்ப்பமுற்றிருந்த மணியின் மேல் பாசம் காட்டினார்கள்.

இடி முழங்கி, மின்னல் வெட்டி, மழை பொழியாத, நான் கல்லூரி சென்று திரும்பும் மிகச் சாதாரண தினம் முக்கியமானதாகியது. எங்கள் வீட்டில், ரேஷன் கார்ட் நீங்கலாக உறுப்பினர் எண்ணிக்கை ஒன்று அதிகமாகியது. நாய்கள் விஷயத்தில் ஒரேயொரு குட்டி ஈனுவது கொஞ்சம் ஆச்சரியகரமான விஷயம்தான் எனினும் ஒரு குட்டிதான் ஈன்றது மணி. இம்முறை பால் கொடுப்பதற்காக எந்த வேஷ்டியும் கிழியவில்லை. மணி அதன் குட்டியை விட்டு எங்கும் நகரவில்லை, நாங்கள் அதனருகில் வந்தால் கூட கொஞ்சம் சந்தேகத்துடன்தான் பார்த்தது. அவையிரண்டும் போடும் ஆட்டங்களில் எங்கள் வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பானது.

வெகு சீக்கிரம் ஜூனியர் மணியும் என்னுடன் விளையாடும் அளவு வளர்ந்து விட்டது. அதையும் மணியென்றே அழைத்தோம், மணியென்ற அழைப்புக்கு இரண்டும் ஓடிவரும் காட்சி, ஒரு அற்புதம். அப்போது மீண்டும் அதே பிரச்சினை தலை தூக்கியது. மறுபடியும் நாய்கள் எங்கள் வீட்டை வட்டமிட ஆரம்பித்தன. இம்முறை அக்கம் பக்கமிருந்தும் மிகக் கடுமையாக நெருக்கடிகள் வர ஆரம்பித்தன. மேலும், பக்கத்து வீட்டுக்காரர், எங்கள் வீட்டு உரிமையாளரிடம் புகார்கூற நெருக்கடி அதிகமானது. பலமணி நேர விவாதத்திற்கு பின் குட்டியை வைத்துக் கொள்வதென்றும், மணியை மட்டும் எங்காவது விட்டுவிட்டு வந்து விடுவதென்றும் முடிவு செய்தோம்.

அந்த ஞாயிற்றுக்கிழமை மிகக் கொடுமையாக விடிந்தது. எனக்கோ அப்பாவுக்கோ இதை செய்வதில் கொஞ்சமும் இஷ்டமில்லை. ஆனாலும் அக்கம் பக்கம், வீட்டு உரிமையாளர் என எல்லோருக்கும் சொல்லியாயிற்று, அதை வேடிக்கை பார்க்க வேறு கூட்டமும் சேர்ந்து விட்டது, இனி பின் வாங்க முடியாது. "சாக்குல கட்டி கொண்டுபோய் ஊருக்கு வெளில இருக்ற காட்டுல விட்டுருங்க இல்லன்னா திரும்பி வந்துரும்" கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் ஆலோசனை கூறினார். "இதுக்கு மட்டும் வந்துருங்கய்யா" என மனதில் நினைத்துக்கொண்டேன்.

மறுநாள் கல்லூரியில் கவனமேயில்லை. அப்படியொரு காரியத்தை எப்படித்தான் செய்தோமோ தெரியவில்லை. அந்த பாவத்தின் சுமை மிகவும் தாங்க முடியாததாய் இருந்தது. வீட்டுக்கு திரும்பும் வழியில் நெடுஞ்சாலையில் அடிபட்டு இறந்துபோன நாயொன்று கண்ணில்பட்டு இம்சித்தது.

தனிமை ஆறுதல் தரலாம் என்றெண்ணி மொட்டை மாடி வந்தேன், எனை உரசிக்கொண்டு முன்னே ஓடிச்செல்லும் மணி சற்றென்று நினைவில் வந்து சென்றது. மணி எங்கேனும் காட்டில் அதற்கு பிடித்த உணவு உண்டு, அதன் விருப்பத்திற்கு வாழ்ந்து கொண்டிருக்கும் என்று சமாதானப்படுத்திக் கொண்டாலும் ஆற்றுப்படுவதாயில்லை என் மனம். திடீரென்று கால் விரல்களுக்கிடையில் வெதுவெதுப்பாய் உணர்ந்தேன். ஜூனியர் மணி என் கால் நக்கி வாலாட்டிக் கொண்டிருக்கிறது.

இக்கதை இங்கு முடிகிறது! உண்மைதான், தயவுசெய்து ஒரு அடி கூட அடுத்து படிக்காதீர்...

தன் தாயிடமிருந்து பிரித்த எங்களிடமும் அன்பைப் பொழிகிறதே, நன்றி கொன்ற மாந்தர்க்கும் நன்றி காட்டும் 'வள்'ளுவப் பண்பை எங்கு கற்றிருக்கும் இந்த ஜீவன்! - என்று தத்துவ விசாரணையுடன் முடித்திருக்கலாம்.

மறுநாள் காலை பழக்கமான குரலுக்கு விழித்தெழுந்தேன், வாசலில் இன்ப அதிர்ச்சி, மணி நின்றிருந்தது! எப்படியோ வீட்டை கண்டுபிடித்து வந்திருந்தது. சந்தோஷத்தில் குதித்து வீட்டை இரண்டாக்கினேன், தெருவே மணியை "தேவர் பிலிம்ஸ்" ஜீவனாக பார்க்க, அதன் பின் கதாநாயகி அந்தஸ்துடன் ஊரை வலம் வந்தது மணி - என்று சுபம் போட்டிருக்கலாம்.

இக்கதையை எழுதிக் கொண்டிருக்கும்போது குரைத்த பக்கத்து வீட்டு நாயை கொலை செய்ய முடிந்தால் தேவலை - என்று ஒரு வரி சேர்த்து, படித்துமுடித்ததும் வாசகனை அதிர்வுக்குள்ளாக்குவதே 'எளக்கியம்' என்றிருக்கலாம்.

பெண் நாய் எனுமிடத்தில் வெறுமனே பெண் என்று வாசித்து, ஒற்று நோக்கி இக்கதைக்கு நீங்களே ஒரு அர்த்தம் கொடுத்துக் கொள்ளாதீர்கள் - என்று ஒரு டிஸ்கி போட்டு சமூகப் பார்வையை உள் வைத்திருக்கலாம்.

இது எதுவுமே நிகழாததால், என் கால்விரல்கள் ஈரமான பொழுதையே கதை முடிந்த கணமாய் பாவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

23 comments:

நாமக்கல் சிபி said...

ராசுக் குட்டி அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்! சொல்ல முடியாத ஏதோ உணர்வுகளை எங்கள் உள்ளத்திலும் ஏற்றி வைத்து விட்டீர்கள்.

//திடீரென்று கால் விரல்களுக்கிடையில் வெதுவெதுப்பாய் உணர்ந்தேன். ஜூனியர் மணி என் கால் நக்கி வாலாட்டிக் கொண்டிருக்கிறது//

:(


இதோடு கதையை முடிப்பதுதான் நன்றாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

ராசு, இதுவும் இயல்பான முடிவுதான்.
இயற்கையான கதை. வெற்றி பெற வாழ்த்துகள்.

ராசுக்குட்டி said...

//இதோடு கதையை முடிப்பதுதான் நன்றாக இருக்கிறது.//

சிபி -> அங்கேதானே முடித்திருக்கிறேன் ;-)

வள்ளி -> நன்றி, வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும். காண்டேகர் புத்தகமிருக்கும் மிகச்சில வீடுகளில் உங்களுடையதும் ஒன்று!

வல்லிசிம்ஹன் said...

அப்பாவின் பைக் சத்தம் அம்மா கண்டுபிடிப்பது யுகாந்தரமாக நடக்கிறது ராசு.

ரோடில் எந்த வண்டி போனாலும் நம்ம வீட்டு வண்டிக்கு சத்தம்
வித்தியாசமாகத் தெரியும்.
இது எல்லா (அன்பான) மனைவியர்க்கும் உள்ளம் கொடுக்கும் காது.
மீண்டும் நன்றி நல்ல படைப்புக்கு.

ராசுக்குட்டி said...

//உள்ளம் கொடுக்கும் காது.//
மனு -> அருமை

Anu said...

idhu unmai sambavama..
atleast kadaiyilayavadu senior and junior mania settu vechudungalen

Boston Bala said...

excellent

கப்பி | Kappi said...

இயல்பாக, அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் ராசுக்குட்டி..வாழ்த்துக்கள்..

நாமக்கல் சிபி said...

ராசுக்குட்டி,
கதை அருமை.

மிக இயல்பாக இருந்தது. போட்டுயில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Unknown said...

ராசு உங்கள் பதிவு எனக்குள் சில ஞாபகத் தூறல்கள் போட்டது நிஜம். வெற்றி பெற வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

அருமையான கதை.

வாழ்த்துக்கள் ராசுக்குட்டி.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

அப்படி முடித்திருக்கலாம் இப்படி முடித்திருக்கலாம் என்று பல முடிவுகளை சொல்லீட்டீங்க நல்லா இருந்தது போட்டிக்கு வாழ்த்துக்கள்.

ராசுக்குட்டி said...

அனிதா -> உங்களுக்காகத்தான் அந்த "தேவர் பிலிம்ஸ்" பிரிவு அத்த இன்னோர்க்கா படிச்சுக்கங்க!

பாலா -> நன்றி... ஆமா தேன்கூடு போட்டிக்கு பேர் போட்டு படைப்புகளை அனுப்புறதயே வேணாம்னு சொல்லிகிட்டு இருக்காங்க... நீங்க என்னடான்னா கருத்துக் கணிப்பே வெளியிடுறீங்களே!

கப்பிப்பய, வெட்டிப் பயல் -> நன்றி... நீங்க ரெண்டு பேரும் சகோதரர்களா?

தேவ் -> நன்றிகள் பல...ஞாபகப்படுத்தினனா... நல்ல விஷயங்களைத் தானே சந்தோஷமா இருக்கு

துபாய் ராஜா -> புது மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள், வருகைக்கு நன்றி!

குமரன் எண்ணம் -> ஒரு ஆ.கோ. தான்!

மொத்தத்துல வந்தவுக எல்லாத்துக்கும் வந்தனம்...

கதிர் said...

ராசுக்குட்டி,

கலக்கிட்டிங்க ராசு.
இதே அனுபவம் எனக்கும் இருந்தது.
இந்த வலி எப்படி இருக்குதுன்னு பாருங்களேன்.
உங்க அள வுக்கு இல்லைனாலும் ஏதோ எழுதி இருக்கேன் பாருங்க.
http://umakathir.blogspot.com/2006/06/blog-post_114969068905750148.html

ராசுக்குட்டி said...

நன்றி தம்பி!
உங்க படைப்பும் அருமையாகவே இருந்தது!

ராசுக்குட்டி said...

நன்றி RVM, என் முதல் ரசிகரே... வலைப்பூவுக்கு வர இவ்வளவு தாமதமா?

G Gowtham said...

தேன்கூடு போட்டியில்
பரிசுக்குரிய படைப்பை படைத்தமைக்கு
மனமார வாழ்த்துகிறேன்
தொடரட்டும் உங்கள் எழுத்துக்களும் வெற்றிகளும்
அழியா அன்புடன்
ஜி.கௌதம்

துளசி கோபால் said...

எப்படியோ உங்க இந்தக் கதை(?) படிக்க விட்டுப்போச்சு. நியாயமா இதுதான்
என் கண்ணுலே மொதல்லே பட்டுருக்கணும். அந்தப் படங்களும் அருமை.
சூப்பரா எழுதி இருக்கீங்க.
நாய் , பூனை இன்னும் எந்த மிருகக்குட்டியின்னாலும் மனசு அப்படியெ குழைஞ்சுரும்
நம்ம வீட்டுலே.

வெற்றி பெற்றதற்கு வாழ்த்து(க்)கள்.

VSK said...

வெற்றி பெற்ற கதையை மறுபடியும் படித்தேன்! இயல்பாகச் சொல்லி, 'டிஸ்கி'களும் போட்டு கலக்கியிருக்கிறீர்கள்!
வாழ்த்துகள்!

அந்த, 'எங்கள் அம்மாவைப் பற்ரியும் சொல்லவேண்டும்' என்னும் இடத்தில் ஏதோ குறைந்த மாதிரி இருக்கிறதே!

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் ராசுக்குட்டி!

ILA (a) இளா said...

vaazhtukkaL waNpare

ராசுக்குட்டி said...

கௌதம் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். நண்பர்களை பிரிவதே வேதனை தரும் ஒன்று, அதும் இப்படி ஒரு நண்பரை... என் ஆறுதல்களும்!

துளசியக்கா நீங்களே படிக்கலயா... இந்த தப்பு நடந்துரக்கூடாது அப்டின்னுதான் பிரச்சாரம்லாம் செய்தோம்... அப்படியும் :-(

SK-> இப்போது குஷியில் குறையேதும் தெரிவது போல் இல்லை, இருந்தாலும் நீங்கள் சொல்வதை பிறகு கவனிக்கிறேன்.

சிபி -> நன்றி, தொடரும் உங்கள் நட்பு & வாழ்த்துக்களுக்கும்

இளா -> நன்றி, வாழ்த்துக்களுக்கும்
;-) கடுகினும் குறைந்த இடைவெளியில் என்னை முன்னே விட்டதற்கும்!

Maraboor J Chandrasekaran said...

parisukku migavum etra padaippu, good narration, congrats!