Monday, December 18, 2006

58 : என் தங்கை கல்யாணி - தேன்கூடு போட்டி

குறும்பு

"அம்மா அம்மோவ்... இன்னிக்கோட ஸ்கூல் முடிஞ்சது இன்னும் ரெண்டு மாசத்துக்கு லீவுதான்" குதியாட்டம் போட்டுக்கொண்டு வந்தேன்.

"என்னடா மணி பதினொன்னரைதானே ஆகுது... பரிட்சை ஒழுங்கா எழுதினியா இல்லியா... தங்கச்சிப் பாப்பா எங்கடா"

"அவள மிஸ் பன்னிரெண்டரைக்குத்தான் அனுப்புவேன்னு சொல்லிட்டாங்க... எனக்கு இன்னிக்கு கணக்குப் பரிட்சைதானம்மா... அதெல்லாம் ஒழுங்கா எழுதிட்டேன்"

"இருந்து அவளயும் கூப்ட்டு வரவேண்டியதுதானே... இங்க என்னத்த அள்ளிமுடிக்கிறதுக்கு ஓடியாந்த"

இந்த அம்மா எப்பவும் இப்படித்தான் எதயாவது சொல்லி என்ன திட்டிக்கிட்டே இருப்பாங்க ஆனா தங்கச்சி பாப்பான்னா மட்டும் நல்லா கொஞ்சுவாங்க... "பசிச்சது அதான் வந்துட்டேன்" கொஞ்சம் கோபமாகவே சொல்லிவிட்டு செருப்பை மூலையில் உதறித்தள்ளிவிட்டு வீடு அதிர அதிர உள்ளே நுழைந்தேன்.

சற்றுநேரம் பொறுத்து உள்ளே வந்த அம்மா, "என்ன தொரைக்கு கோவமா? தங்கச்சிய கூட்டியாரச்சொல்லி உங்கப்பன் கிட்ட சொல்லிட்டுவாரேன்... விளையாட எங்கயும் ஓடிப்போயிராத அடுப்புல சாம்பார கொதிக்க வச்சுருக்கேன், அப்பப்ப கிண்டி விட்டுக்கிட்டு இரு நல்லா கொதி வந்ததும் நிறுத்திரு என்ன... இந்தா இந்த பிஸ்கட்ட சாப்டு, ரெண்டு மட்டும் எடுத்துக்கிட்டு மிச்சத்த தங்கச்சிக்கு வச்சிரு."

ஹைய்யா பால் பிஸ்கட், சந்தோஷத்துடன் எழுந்து ஓட நினைத்தாலும் கோப-முறுக்கை அவ்வளவு சீக்கிரமா விட்டுக்கொடுப்பது, "ம்...சரி சரி" என்று மட்டும் முடித்துக்கொண்டேன். நமக்கு ஒரு டம்ளர் நிறைய தண்ணீரும் ஒரு கட்டு பிஸ்கட்டும் குடுத்துட்டாங்கன்னா போதும் உலகத்துல வேற என்ன நடந்தாலும் தெரியாது. ஒவ்வொரு கடியாய் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கடைசி பிஸ்கட் இருக்கையில் தங்கை ஞாபகம் வந்தது, சரி இந்த ஒண்ணு மட்டும் வச்சுருவோம். என்ன இருந்தாலும் ஸ்கூல்ல எனக்கும் கோபிக்கும் நடக்கற சண்டைய அவ அம்மாகிட்ட சொல்லாம காப்பாத்தறால்ல, அதுக்காகவாவது.

"மூதேவி... கருகற வாசனை தெருமுனை வரைக்கும் வீசுது எங்கடா தொலைஞ்சுபோன"

அய்யய்யோ சாம்பார கிண்டிவிட மறந்துட்டனா? ஓடுறா ராசு.

ஒரு ரெண்டு மணிக்கா மெதுவா வீட்டுக்குள்ள எட்டிப் பார்த்தேன், தங்கச்சி சிட்டி-சாமான்லாம் வச்சுக்கிட்டு விளையாண்டுகிட்டு இருந்தா, அம்மா கொஞ்சம் சந்தோஷமா தெரிஞ்சாங்க, துணிமணியெல்லாம் பெட்டில எடுத்து வச்சுக்கிட்டு இருக்காங்க

"ஐ அம்மா நம்மெல்லாம் லீவுக்கு ஊருக்கு போறமா", ஒண்ணுமே தெரியாதவன் போல ஓடிப்போய் காலைக் கட்டிக்கொண்டேன்.

சொத் சொத் என முதுகில் ரெண்டு விழுந்தது, "ஏண்டா தீமக்காரப் பயலே சாம்பார கருக விட்டுட்டு எங்க போன... முழு பிஸ்கட் பாக்கெட்டயும் தின்னு... தாந்தின்னிப் பயலே"

"எம்மா எம்மா அடிக்காதீங்கம்மா... பிஸ்கட் சாப்ட்டுட்டே மறந்துட்டேன்", இந்த தங்கச்சி கழுத நான் அடி வாங்கறத பாத்துட்டு சிரிக்குதா இருக்கட்டும் அப்புறம் வச்சிக்கறேன்.

"நீ என்ன சொன்னாலும் சரி உன்ன லீவுக்கு பேரையூருக்கு கூட்டிட்டுப் போகல, நானும் தங்கச்சி பாப்பாவும் மட்டும்தான் போறோம். ஊர்ல மாமா எல்லாம் விரதமிருந்து பூமிதிக்கிறாங்க... உன்ன கூட்டிட்டு போனா என்னென்ன சேட்டை செஞ்சு தீமவேல செய்வியோ"

"எம்மா எம்மா... நான் நல்ல பையனா நடந்துக்கறம்மா, என்னயும் கூட்டிட்டுபோங்கம்மா"

"இல்லல்ல நீ உங்கப்பனுக்கு உதவியா கடகண்ணிக்கு போய்ட்டு வந்திட்டு இரு"

அம்மா எதோ சிரிச்சுக்கிட்டு விளையாட்டா சொல்ற மாதிரி இருக்கு, இருந்தாலும் எதுக்கும் கெஞ்சி வைப்போம், "எம்மா எம்மா... நம்புங்கம்மா, நான் சேட்டையே பண்ண மாட்டேன் நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்"

"அப்படியா சரி, தெருமுக்குல இருக்ற பைப்ல தண்ணி அடிச்சு, உள்வாசல்ல இருக்ற அண்டாவ ரொப்பு, கூட்டிட்டுப் போறேன்."

ச்சே... 'என்ன சொன்னாலும்'ன்னு சொல்லியிருக்க கூடாது, அந்த பீம குண்டாவல்ல நிறைக்க சொல்லிட்டாங்க, இனி எவ்வளவு கெஞ்சினாலும் நடக்காது அம்மா பிடிவாதம் அந்த மாதிரி... கரெக்டா பதினாலு குடம் தண்ணி ஊத்தினா போதும் அண்டா நிறைஞ்சுரும். சரி ஆரம்பிப்போம்.

நாலு குடம் ஊத்தினதும், தங்கச்சிக்கு இரக்கம் வந்திருக்கும்னு நினைக்கிறேன். நானும் போறம்மான்னு அடம்பிடிச்சு அவளும் சின்னதா ஒரு குடத்த தூக்கிட்டு வந்துட்டா. "அப்பத்தாண்டா சீக்கிரம் நிறையும்"னு சிரிச்சுக்கிட்டே சொல்றா...இனி சப்பைமூக்கிக்கு கூட ரெண்டு பிஸ்கட் வச்சிட்டுதான் சாப்பிடணும்.

"ஏலேய் மரவதம் மவனே நான் ஒத்தக்குடம் பிடிச்சுக்கறண்டா... அண்ணனும் தங்கச்சியுமா, அப்புறம் ரொப்புவீங்களாம் அண்டாகுண்டா எல்லாம்" என்று சுப்பக்கா தண்ணீர் பம்ப்-ஐ பிடித்துக் கொண்டார்கள். எதிர்க்க வந்த தங்கச்சியக்கூட "கொஞ்சம் இருடி என் சின்ன சக்களத்தி உன் மாமன் குளிக்கறதுக்குதான் தண்ணி பிடிக்க வந்திருக்கேன்" என்று வாயடைத்து விட்டார்கள்."

எங்க ஊர் அடிபம்ப்-ல கைப்பிடி மேலபோய் வரும் வழியாகவும் சற்று தண்ணீர் வெளிவரும், கைப்பிடி மேல்போய் கீழ் வருவதற்குள் அந்த இடத்தில் இருக்கும் தண்ணீரை ஒற்றை விரலால் தள்ளிவிடுவது எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. "ஏலேய் கைய நச்சுக்கப் போறல" என்று யாராவது எச்சரித்தால் கூடுதல் மகிழ்ச்சியுடன் செய்வேன்.

சுப்பக்கா தண்ணீர் அடித்துக்கொண்டு இருக்கும்போது கூட அப்படித்தான் விளையாண்டு கொண்டிருந்தேன். "ஏலேய் கைய நச்சுக்கப் போற" என்று சொல்லிப் பார்த்தார்கள். "அதெல்லாம் நச்சுக்க மாட்டேன் நீங்க சீக்கிரம் முடிச்சுட்டு குடுங்க" என்று தெனாவட்டாக சொன்ன நேரத்தில் சாமி சிரித்திருக்க வேண்டும்.

கவனக்குறைவாக இருந்த ஒரு நொடியில் "நச்"னு ஒரு சத்தம். பைப்-ல "டங்"னுதானே சத்தம் வரணும் அதென்ன 'நச்'னு யோசிக்கிறீங்களா நீங்க நினைக்கிறது மிகச் சரி, என்னுடைய ஆள்காட்டி விரல் நுனிதான், அம்மியில் இடிச்ச இஞ்சி போல் மாறி ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. "உ....ம்ம்ம்ம்ம்" னு அழுதுகிட்டே வீட்டுக்குப் போறேன். எங்கம்மாவும் திட்டிக்கிட்டே வீராச்சாமி டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க.

"என்னடா எப்பவும் முட்டிய ஒடச்சிக்கிட்டு வருவ இன்னிக்கு என்ன கையா... அய்யய்யோ என்னடா இப்படி நச்சுக் கொண்டாந்துருக்க, பையன கவனமா பாத்துக்க வேணாமாம்மா... லீவெல்லாம் விட்டாச்சா...பரிட்சையெல்லாம் முடிஞ்சதா... உங்க அப்பன எங்க...", இப்டி என்னென்னமோ கேட்டுக்கிட்டு நைந்து தொங்கிய பகுதியை வெட்டி எடுத்துவிட்டு, தையல் போட்டு, கட்டு போட்டு ஒரு ஊசியையும் போட்டு விட்டாரு டாக்டர். அவர் பையன் வினோத் வேற நான் அழுகுறத பாத்துட்டான். ஸ்கூல் ஆரம்பிச்சதும் என்ன மாதிரியே அழுது காமிச்சு வேற கேலி பண்ணுவான். சாமி அதுக்குள்ள எப்படியாவது இந்த விஷயத்த அவன் மறந்துடனும்.

"அய்யா டாக்டரய்யா... யோவ் கண்ணுசாமி டாக்டரய்யா இருக்காரா... வலி உயிர்போகுதே"

"யாருயாது இந்தக் கத்து கத்தி வாரது... நீங்க உள்ள போயி மருந்த வாங்கிக்கம்மா ஏலேய் இன்னிக்கு முழுசும் விரல தூக்கியே வச்சுருக்கணும் கீழே தொங்க விடப் படாது அப்புறம் இன்னும் வலிக்கும் ரத்தம் கொட்டும்" என்று எங்களை உள்ளே அனுப்பிவைத்துவிட்டு வெளியே போனார் டாக்டர்.

"என் மண்டைய உடச்ச கைய அடுப்புல வைக்க..." என்று ஆரம்பித்து என் அம்மா என் காதைப் பொத்தும் அளவுக்கு மிகப் பயங்கரமாய் அர்ச்சனை போய்க் கொண்டிருந்தது. எங்கேயோ மிகப் பழகிய-கேட்ட குரல் என்று வெளியே போய்ப் பார்க்க ஆர்வம் தூண்டினாலும் அம்மாவுக்கு பயந்து அவர்கள் கூடவே நின்றிருந்தேன். சீக்கிரமே சத்தமும் நின்று விட்டது.

வெளியே வந்து பார்த்தால் சுப்பக்கா அமர்ந்திருந்தார்கள், பார்த்ததுமே அர்ச்சனைக்கும், சத்தம் நின்றதற்குமான காரணம் புரிந்து போனது. தலையை சுற்றி தாடையோடு சேர்த்து ஒரு பெரிய கட்டு போட்டு உக்கார்ந்திருந்தார்கள். என்ன, எப்படி, எங்கே, ஏன் நடந்தது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையிலேயே விடையும் கிடைத்து விட்டது.

என் தங்கச்சியா, எப்பப் பார்த்தாலும் சண்டைபோடுபவளா, சின்னதா கிள்ளுனாலும் அம்மாகிட்ட காட்டி கொடுத்து அடி வாங்கி குடுப்பவளா... இனி அவளுக்கு குடுத்துட்டுதான் எல்லாம் சாப்பிடணும், அவகிட்ட இருந்து புடுங்கிகிட்ட விளையாட்டு சாமான்லாம் திரும்ப குடுத்துரணும். தினமும் அவளுக்கு பால் ஐஸ் வாங்கி குடுக்கணும், இனிமேல் அவகூட சண்டையே போடக்கூடது என்று ஓடிக்கொண்டே தீர்மானித்துக் கொண்டிருந்தேன்.

என்னாது ஏன் ஓடிக்கிட்டு இருக்கேனா? நல்லா கேட்டீங்க போங்க, "என்னடியாத்தா புள்ள வளர்த்துருக்க... இவன் வேணும்னு கையவிட்டுக்கிட்டதுக்கு, எங்கண்ணன் கைய ஏண்டி ஒடச்சன்னு ரோட்ல கிடந்த கருங்கல்லெறிஞ்சு எம்மருமவ மண்டைய ஒடச்சுப்புட்டா ஒம்மவ. இப்படி வெளமெடுத்தவளாவா வளர்த்து வச்சுருப்ப..." அப்படின்னு சுப்பக்கா மாமியார் கிருஷ்ணம்மா சொல்லிக்கிட்டு இருந்தப்ப "அதவிடுங்க கிருஷ்ணம்மா, இப்ப உங்களுக்கு சந்தோஷம்தானே"ன்னு நான் கேட்டதுக்கு, சுப்பக்கா தொரத்திட்டு இல்ல ஓடி வர்றாங்க. நல்லவேளை தாடையோடு சேர்த்து கட்டுப் போட்டார்கள், இல்லைன்னா அர்ச்சனையும் சேர்ந்து வந்துருக்கும். இன்னொரு சமயம் மத்த சேட்டைகளை சொல்றேன்.

இப்போதைக்கு வ்வ்வ்வ்வர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா....

Friday, December 08, 2006

57 : திருவரங்கத்தில் பெரியார் சிலை! - என் இரண்டனா

Photobucket - Video and Image Hosting

அட இதப்பார்றா!