Tuesday, October 17, 2006

54 : கோவையில் வலைப்பதிவர் சந்திப்பு

Photobucket - Video and Image Hosting

இதுனால கோயம்புத்தூரு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் சுத்துவட்டாரத்துல இருக்ற 18 பட்டிகள்ள இருக்ற வலைப்பதிவர்களுக்கும் சொல்லிக்கறது என்னன்னா....

வலைப்பதிவர் உலகில் கோவை மண்ணிலிருந்து நிறைய படைப்பாளிகள் இருக்கிறார்கள் ஆனால் பெரிய அளவில் சந்திப்புகள் எதுவும் நடந்ததாக தகவலில்லை. (நடந்து என் கவனத்தில் வராமலும் போயிருக்கலாம் அப்படி இருந்தால் - மன்னிக்க!)

இந்த முறை தீபாவளி விடுமுறையை ஒட்டி ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தால் என்ன என்று வெகுநாட்களாய் சிந்தித்து வந்ததில் விளைந்த பதிவு இது.

விடுமுறைக்கு நிறைய பேர் தங்கள் சொந்த ஊருக்கு வருவார்கள் என்பதால் நிறைய பேரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது கூடுதல் அனுகூலம்.

விசாரித்த வரையில் இன்னொரு பெருங்கூட்டமும் இருக்கிறது அதுதான் நம்மூரு அம்மணிகளை (தங்கமணி) மணந்திருக்கும் கூட்டம். எனவே மாமனார் வீட்டுக்கு வந்திருப்போரும் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது ;-)

சந்திப்புக்கு வர ஆர்வமிருப்போர் ஆஜர் என்று ஒரு பின்னூட்டமிட்டால் மகிழ்வேன் - வோம்! எண்ணிக்கையை பொறுத்து இடத்தை முடிவு செய்து கொள்ளலாம், அக் 22, 2006 ஞாயிற்றுக் கிழமை... மிக மந்தமான நேரமான மாலை 3 - 5 க்குள் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என்பது திட்டம்.

வடை-போண்டா என்று குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து கோவை புகழ் 'பேக்கரி'கள் ஏதாவதொன்றில் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம். அல்லது வேறெதுவும் சுவாரசியமான இடங்களை/பதார்த்தங்களை பரிந்துரைக்கலாம்.

தற்போதைய திட்டம்
===================
இடம் : லாலி ரோடு - அரோமா பேக்கரி
நாள் : அக், 22, 2006
நேரம் : காலை 10 - 12

கோவையை சேர்ந்த சில நண்பர்கள் இப்போதே விடுமுறை எடுத்துக்கொண்டு பிரயாணங்களில் ஈடுபட்டிருக்கலாம்... அல்லது இந்தப் பதிவு அவர்கள் கவனத்திற்கு வராது போகலாமென்பதால்... இப்பதிவை பார்ப்போர் சம்பந்தப் பட்டவர்களுக்கு தெரியச் செய்யுங்கள்.

அலை கடலென திரண்டு, அனைவரும் வாரீர்... ஆதரவு தாரீர் (ஓ தேர்தல்-லாம்தான் முடிஞ்சுருச்சே). சீக்கிரமே சந்திப்போம், அதுவரை உங்கள் மேலான ஆலோசனைகளை எதிர்நோக்கி...

நண்பர்களே இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

Monday, October 16, 2006

53 : விடுதலைப் போராளிகள்

Photobucket - Video and Image Hosting

"எங்க பரம்பரையில ஆம்பளைங்க கூட இம்புட்டு படிப்பு படிச்சதில்ல, எம்பேத்தி எட்டு ஜில்லாவுக்கும் கலெக்டராகப் போறா", பார்ப்போரிடமெல்லாம் சொல்லி சொல்லி மாய்ந்த பாட்டி "மாப்ள சொல்றத கேட்டு நடந்துக்க தாயி" என்றதில் காலம் காலமாய் பெண்கள் கையில் போடப்பட்டிருந்த விலங்கு என் கையிலும் அலங்காரமாய் ஏறியது.

"அம்மா நான் இன்னும் படிக்கணும்" என்றதற்கு "சும்மா கிடடி, நீ படிச்சிருக்ற படிப்புக்கு மாப்ள தேடறதுக்கு முன்னாடி நாக்கு தள்ளுது... இன்னும் படிக்கப் போறாளாம் படிக்க..." அவள் காலைச் சுற்றியிருந்த சங்கிலியின் கண்ணிகள் என் கால்களையும் இணைத்துக் கொண்டது.

"அம்மாடி கல்யாணி, அப்பா இந்த வருஷத்தோட ரிடையர்ட் ஆகப்போறேன், வர்ற பணத்துல உன் கல்யாணத்தை பண்ணி வைச்சுட்டன்னா என் கடன் தீர்ந்துரும்"
"இல்லப்பா, நான் வேலைக்கு போறேன், அப்படியே நான் ஆசப்பட்ட ஆராய்ச்சிப் படிப்பையும் படிச்சிடறேன்ப்பா...அதுக்கப்புறம் கல்யாணத்த பத்தி யோசிக்கலாமே?"
"இல்லம்மா அதெல்லாம் சரிவராது, வயசாச்சி...நாலுபேர் நாலு விதமா பேசிடுவாங்க", என்று தலைகோதி சொன்னதில், முகம் தெரியாத சமூகத்தின் போலி சட்டதிட்டங்கள் முன் என் நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் தலைகுனிய வேண்டியதாயிற்று.

அதுவும் அமெரிக்க மாப்பிள்ளை என்றதும் என் பேச்சைக் கேட்க ஆளே இல்லை, "ஏங்க நான் மேற்கொண்டு இங்க படிக்கட்டுமா..." கேள்வி முடியுமுன்னரே "அதெல்லாம் காசுக்குப் பிடிச்ச கேடு... படிச்சு என்ன செய்யப் போற... ஆச்சு, அடுத்த வருஷமெல்லாம் குழந்தை குட்டின்னு, உனக்கு வீட்ட பாத்துக்கறதுக்கே நேரமில்லாமல் போய்டும் பாரேன்". எனக்கிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் தீய்ந்து போனது அவனுக்கெப்படி தெரியும்.

"ஏய் அடுப்புல ஏதோ தீஞ்சு கருகுது பார்... கவனமெல்லாம் எங்க இருக்கு", ஆதிக்க உணர்வின் கோரவிரல்களில் நகங்கள் படுவேகமாக வளர்ந்தன. வலுக்கட்டாயமாய் உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டு ரசித்து ரசித்து சமைத்துப் போட்டாலும், டி.வியில் ஒரு கண் வைத்துக்கொண்டே பொங்கலா, கிச்சடியா என்றுகூட தெரியாமல் சாப்பிட்டுப் போகையில், சமைக்கும்போது பட்ட தீக்காயம் இன்னும் கொஞ்சம் எரிகிறது.

இதோ, இன்று அடிவாங்காத குறையும் தீர்ந்துவிட்டது. எவ்வளவு முயற்சி செய்தும் வழிந்தோடும் கண்ணீரை மட்டும் நிறுத்த முடியவில்லை. கண்ணாடி முன் நின்று என் கன்னங்களை தடவுகையில் அவன் விரல் தடங்கள் என் விரல் பட்டதும் தேக்கி வைத்திருந்த அத்தனை கண்ணீரும் அணை உடைத்து என் கன்னங்கள் வழியே வழிந்தோடுகிறது.


***ooOoo***

ஹாய் சந்துரு

ஹேய் கல்ஸ், நியூயார்க் நகரம்.. உறங்கும் நேரம்... என்ன பண்ற?

ஹா ஹா, ரமேஷ் இன்னும் வேலையில இருந்து இன்னும் வரல, அதான் அதுவரைக்கும் நெட்ல மேயலாம்னு பாத்தா நீ இருந்த ஆன்லைன்ல... கூப்ட்டேன், சரி நீ என்ன பண்ற

நான்கு சுவற்றுக்குள்ளே... நானும் கொசுவத்தியும் கொடுமை கொடுமை ஓ, கொசு, கொடுமை கொடுமை ஓ!

ஹே... கத்தாதடா... உன் பாட்டுதான் கொடுமையா இருக்கு... இன்னும் அப்படியேதாண்டா இருக்க நீ எப்பப் பாத்தாலும் கடிச்சுக்கிட்டு
சரி உன் சிலோன் பொண்டாட்டி எப்படி இருக்கா


என்னமோ ஊர் ஊருக்கு பொண்டாட்டி வச்சுருக்றா மாதிரி சிலோன் பொண்டாட்டி எப்படி இருக்கான்ற... ம்ம்.. சூப்பரா இருக்கா ரெண்டு பேரும் இந்தியா வந்திருக்கோம்... ரெண்டு வாரமாச்சு

ஓ கிரேட்... போன ரெண்டு வாரமாத்தான் ஊருக்குள்ள சிக்-குன் குனியான்னு சொன்னாங்க... பொறு எதுக்கும் மதுரை முனிசிபாலிடிக்கு ஃபோன் பண்றேன்.

பாத்தியா வார்ற... அப்புறம் எப்படி இருக்கு அமெரிக்க வாழ்க்கை... சொல்ல மறந்துட்டனே சுலோவுக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு தெரியுமா

ம்ம்... தெரியும்டா, போன வாரம் அவ எனக்கு ஃபோன் பண்ணி கல்யாணம்ன்னா... சந்தோஷந்தான், அமெரிக்கா மாப்பிள்ளைன்னு சொல்லும்போது ஃபோன்ல கூட அவ பூரிப்ப மறைக்க முடியவில்லை. எனக்குன்னா தாங்க முடியாத ஆத்திரம், அடியே ஒத்துக்காதடி! அமெரிக்கா.. அமெரிக்கான்னு இங்க வர்றதுக்கு முன்னாடிதான் அடிச்சுக்கும்... வந்த பின்னாடிதான் தெரியும்னு, எல்லாத்தையும் கொட்டிடனும் போல அப்படி ஒரு படபடப்பு வந்திடுச்சு. எப்படியோ சமாளிச்சிக்கிட்டு சந்தோஷம்னு சொல்லி ஏதோ ஒப்பேத்தி வைச்சேன். ஒரு வேளை அவ திருமண வாழ்க்கை சந்தோஷமா அமைஞ்சா என்னால கெட்டுப் போனதா இருக்க வேண்டாமே!

ஆரம்பிச்சிட்டியா உன் புலம்பல... நல்ல வேளை சுலோவ குழப்பாம இருந்தியே...

ஹேய் நான் இங்க கிட்டத்தட்ட சிறையில இருக்கேன் தெரியுமா, என் கஷ்டத்த சொல்லி புலம்பறதுக்குக் கூட ஒரு ஜீவனும் கிடையாது இங்கே. இதுலேர்ந்து எப்படா விடுதலை கிடைக்கும்னு இருக்கேன். அது சரி உனக்கெங்கே தெரியப் போகுது எங்களோட வலியைப் பற்றி, நீயும் ஒரு MCPதானே

என்ன, மேல் சாவனிஸ்ட் பிக்-ன்றியா... நீ என்ன வேணும்னா திட்டு, உன் கனவை பாதுகாக்க, செயல்படுத்த உனக்குத் தெரியல, ஊர்ல இருக்ற எல்லார் மேலயும் கோபப்படுற...

எல்லாருமா சேர்ந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க... இப்போ என்ன விட்டுட்டு ஓடிடுன்றியா

உடனே அந்தக்கரைக்கு தாவினா எப்படி கல்யாணி, விடுதலைன்றது விட்டுட்டு ஓடறதுல இல்ல. உன் ஆசைகள் மேல உனக்கில்லாத அக்கறை, அதைப் பற்றி கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் கூட தெரியாத உன் கணவனுக்கு இருக்கனும்னு எதிர்பார்க்கிறது நியாயமா?

என்னடா படிக்கணும்னு ஆசப்படறேன் அது தப்பா, இதக்கூட புரிஞ்சிக்க முடியாதா

எனக்குத் தெரிஞ்சு நிறைய பேர், சும்மா பேருக்கு, அமெரிக்காவில் படித்தேன் அப்டின்ற பெருமைக்கு படிப்பாங்க உன்னையும் அவர் அப்படி நினைத்திருக்கலாம்ல... உன் ஆசைல நீ எவ்ளோ தீவிரமா இருக்கன்றத செயல்ல காமி, ரமேஷே புரிஞ்சிப்பான், நான் பேசின வரைக்கும் அவன் ரொம்ப நல்லவனாத்தான் தெரியறான்.

ம், செயல்ல காமிச்சா மட்டும், அப்பயும் எதுனா நொண்டிச்சாக்கு சொல்வீங்க... ஏதோ மனைவி ஆசைய அப்படியே நிறைவேத்தறா மாதிரி

கல்ஸ் இப்போ நாங்க எதுக்கு இந்தியா வந்திருக்கிறோம் தெரியுமா? ராமேஸ்வரத்துல இருக்ற அகதி முகாம்ல சேவை செய்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்திலொன்றில் பொறுப்பெடுக்க வந்திருக்கிறோம். உனக்கே தெரியும் ஸ்ரீலங்கா நிலைமை, குமுதினிக்கு அவங்க ஊர் மக்களுக்கு எந்த விதத்திலாவது உதவணும்னு ஆசை, நான் கூட முதல்ல புரிஞ்சிக்கல. இத்தனைக்கும் எங்களோடது காதல் கல்யாணம். ஆனா அவ சும்மா இல்ல கனடாவிலிருந்து சுனாமி, பூகம்பம்னு ஒவ்வொன்னுக்கும் நிதி திரட்டிக் குடுப்பா. கலை நிகழ்ச்சிகள் ஒருங்கிணைத்து அதன் மூலமும் உதவிக்கிட்டுருந்தா.


இப்போ போர்மேகம் சூழ்ந்து நிறைய பேர் வெளியேறிக்கிட்டிருக்ற இந்த சூழ்நிலையில இன்னும் நிறைய பண்ணனும்னு ஆசைப்பட்டா, இவளோட உறுதியப்பார்த்துட்டு என் வேலையை நான் மதுரைக்கு மாத்திக்கிட்டேன். சம்பளம்னு பார்த்தா மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான் ஆனா குமுதினி முகத்தில் தெரியும் நிம்மதிக்காக நானும் இப்போல்லாம் வார இறுதிகள்ல அங்க போயிடறேன். விடுதலை, விடுதலைன்னு சொல்றியே, நீ இவங்க கிட்ட எதை விடுதலையா நினைக்கிறாங்கன்னு கேட்டீன்னா, வாழ்க்கை பற்றிய நமது பார்வையே மாறிடும்னு நினைக்கிறேன்.

என்னடா என்னை என் விடுதலைக்காக விட்டுட்டு ஓடாம போராடுன்ற... அங்க போராடாம ஓடி வர்ற அகதிகளுக்காக சேவை செய்யப் போறேன்ற

Photobucket - Video and Image Hostingகல்ஸ், என்னைக் கேட்டா அகதிகளைக் கூட விடுதலைப் போராளிகள்னுதான் சொல்லுவேன், போரின் குரூர நியதிகளை வெறுக்கும் போராளிகள்தான் அகதிகளா வெளியேர்றதுக்கு துணியறாங்கன்றது என்னோட கருத்து. சொந்த மண்ணை பிரிவது எவ்வளவு வேதனையான விஷயம் தெரியுமா?
மேலும் எந்த இடத்தில் நடக்கும் போராக இருந்தாலும் அதன் பின்னே ஒளிந்திருக்கும் அரசியல் விளையாட்டு மிருகத்தனமானது.

உன்னோட விஷயம் அப்படியில்லை வானம் கூட உனக்கு எல்லை இல்லைன்றத நீ புரிஞ்சிகிட்டாலே போதும். உன்னை யாரோ கூண்டுல போட்டிருக்கிறதா நீயே நினைச்சுக்கிட்டு உனக்கு சிறகு இருப்பதையே மறந்துட்டன்னுதான் சொல்வேன்.

ம்ம்... ஏதோ சொல்ற, புரிஞ்சா மாதிரி இருக்கு... யோசிக்கிறேன். அப்புறம் கார் சத்தம் கேக்குது, ரமேஷ்தான் வர்றாருன்னு நினைக்கிறேன்... பசியில வருவான், உன் கூட அப்புறமா பேசறண்டா சந்துரு... சொல்ல மறந்துட்டனே நீயும் குமுதினியும் ரொம்ப நல்ல காரியம் பண்றீங்கடா...உங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிய கண்டிப்பா பண்றேண்டா... வர்றேன் அப்புறமா கண்டிப்பா பேசுவோம்...பை பை டாட்டா!

***ooOoo***

அக். 16, 2006 அன்றைய கல்யாணியின் டைரி குறிப்புகள்
......
...
.
.
விரல் தடம் பட்ட இடங்களிலெல்லாம் நான் மறுக்க மறுக்க முத்தமிட்டான் ரமேஷ். நான் நினைத்தது போலில்லை அவனுக்கு காதலிக்கவும் தெரிந்திருக்கிறது, வேலையினாலெல்லாம் அன்று அவனுக்கு தாமதமாகவில்லை. எனக்கொரு பரிசு வாங்கவென்று அலைந்து, எனக்கு மிகவும் பிடித்த காதல் பறவைகள் ஒரு ஜோடி வாங்கி வந்தான். 'என்னை மன்னிப்பாயா' என ஒரு அட்டையும் தந்து ரோஜாப்பூவொன்றோடு என் முன்னே மண்டியிட்டான்.
.
.
...
......
ஹலோ இது என்னோட டைரிங்க... நான் என் ஃபிரெண்டோட நெட்ல பேசினத கேட்டுட்டிங்க, என் டைரியப் படிச்சுட்டிங்க, இதுக்கு மேலயும் சின்னஞ்சிறுசுங்க இருக்ற இடத்துல இப்படி விவஸ்தையில்லாம நிக்கிறதா....

சரி சரி போகும் முன் அதுக்கப்புறம் நடந்ததயும் கேளுங்க. மொத்தம் மூணு விஷயம் பண்ணினேன்-னோம்.

நான் ஆராய்ச்சி உதவியாளராய் வேலைக்கு சேர்ந்து விட்டேன், வீட்ல இருந்தபடியே வேலை செய்யலாம், எனக்கும் ரமேஷுக்கும் மிக்க மகிழ்ச்சி.


சந்துரு-குமுதினி சேவை செய்யும் தொண்டு நிறுவனத்தின் நியூயார்க் நகர கிளை இனிதே தொடங்கப்பட்டது ரமேஷ்-கல்யாணி இருவரையும் இணைத்துக் கொண்டு.

மறுநாள் காலையிலேயே அருகிலிருந்த பூந்தோட்டத்திற்குப் போய் ரமேஷ் வாங்கி வந்திருந்த காதல் பறவைகளை வானில் பறக்க விட்டோம், வானத்தை விட அழகிய இல்லம் பறவைகளுக்கு ஏது?

52 : வேலிகளால் கிடைக்குமா விடுதலை?

Photobucket - Video and Image Hosting

என் வீட்டுத் தோட்டத்தில்
ரோஜாச் செடியொன்று நட்டேன்
பூக்கள் தருமென்ற நம்பிக்கையோடு

படுபயங்கர கனவுகளுடன்
மூச்சு வாங்கி விழித்த தினத்தில்
மொட்டொன்று முளைத்து ஆற்றுப்படுத்தியது

குழந்தையின் இளஞ்சிவப்பு உதடாய்
மலரொன்று மலர்ந்த தினத்தில்
வேலிபோலிருந்த சுவரில்
விரிசல் விழுந்தது

முதல் பூவை சாமி பாதத்தில்
வைக்கலாம் எனப் பறிக்கையில்
"அண்ணா நான் இந்தப் பூவை எடுத்துக்கறனே"
பட்டாம்பூச்சி கண்கள் கெஞ்ச
பக்கத்துவீட்டிலிருந்தொரு சிறுமி கேட்க
மேலும் சில செங்கல்கள் உதிர்ந்தன
எங்கள் வீடுகளின் வேலியிலிருந்து.

பிறிதொரு நாளில் ஒரு ரோஜாக்கன்றை
அவளுக்கு பரிசளிக்க,
அவர்கள் வீட்டிலும்
பூத்துக் குலுங்கின பூக்கள்

முட்கள் இருந்தும், பூக்கள் குலுங்கும்
கிளைகள் இணைந்து தழுவி நின்றன
இருவர் வீட்டு வேலிகளும் தாண்டி

"உங்க சாமிக்கு எங்கவீட்டுப் பூ வைங்க"
அதே பட்டாம்பூச்சி தேனாய் சொன்னதில்
இருவர் வீட்டு வேலிகளும் இடித்துவிட்டு
ரோஜாவனமொன்று அமைக்கலாம் என
கனவு கண்டிருந்தேன், குயில் இசையோடு!

யாரோ ஒருவர் பூப்பறிக்கையில்
கவனக்குறைவில் முள்ளொன்று பாய
காரணம் தேடி ஆரம்பித்தது யுத்தம்

வேலிகள் தாண்டி செடிகளை நாசம் செய்தோம்
வேரறுந்த செடியில்
பூக்களும், இலையும் காய்ந்து உதிர்ந்தபின்
முற்கள் மட்டுமே எஞ்சியிருந்தன

பின் வேலிகளை பழுது பார்த்து
முள் கம்பிகளும் இட்டு பலப்படுத்தினோம்

முள்வேலியால் காயம் பட்டு
மீண்டும் மூளலாம் போர்!
விடுதலை?

Thursday, October 12, 2006

51 : முந்தைய பதிவின் நதிமூலம்!

Photobucket - Video and Image Hosting
ஹும்...சே யேக் ஜ்ஷ்டுஎ ஷ்...... எண்ணே முதல்ல கட்ட அவுத்துவிடுங்கன்னே சின்னப்புள்ள மாதிரி விளையாண்டுகிட்டு

ம்... வாடே கோகோ, எம்புட்டு நாளு கூப்ட்டுகிட்டு இருந்தேம் நீ பாட்டுக்கு நமக்கு டிமிக்கி குடுத்துக்கிட்டு இருந்த பொறவு என்னிய என்ன பண்ணச் சொல்லுத

அதுக்காக இப்பிடியா உள்ளாட்சி வேட்பாளர் கணக்கா ஆள வச்சு கடத்தி செந்தூக்கா தூக்கியாரது...

ஆமா இவரு அந்தானைக்கி கவுன்சுலர் ஆயிட்டாலும்... கெடந்து குதிக்காதல வெசயத்துக்கு வாறேன் அந்தா இந்தான்னு அம்பதாவது பதிவு எழுதப் போறேன், என்ன எழுதலாம்னு ஐடியா கேக்கத்தாம்ல உன்னத் தூக்கியாந்தம்.

ஆமா இம்புட்டுக் காலம் என்னியக் கேட்டா எழுதினீய இன்னிக்கு என்ன புதுசா வாழுது... இந்த 49-ஏ எப்படி வந்ததுன்னு எனக்குத்தான் தெரியும், சும்மா கோழியடிச்சது, போளி சாப்ட்டது, ஒரே கதையா ஆறாப் போட்டது எவனோ அனுப்ச்ச போட்டா வீடியோவெல்லாம் வலையேத்தி ஒப்பேத்திப்புட்டு என்னமோ எழுதறதுக்கு ஐடியா கெடைக்கலன்றீரு... நானென்ன கேனப்பயலா

அதில்லடே 50-ன்றது ஒரு கவுரதையான நம்பர்தானல இந்த கிரிக்கெட்ல கூடப் பாரேன் 50 அடிச்சதும் மட்டைய தூக்கி காமிக்குதாக... அதான் எதுனா நல்ல வெசயத்த எழுதலாம்னு...

யோவ் எனக்கு நல்லா வாயில வந்துரப் போகுது...பெரியவுக வந்து போற இடம்ன்றதால சும்மா விட்டு வைக்கேன்... நீர் வேணும்னா டைப்படிச்ச கீ-போர்ட்-அ தூக்கி காட்டுமேய்யா 50 அடிச்சுட்டேன்னு, சரி பேசாம வெட்டிப்பயலோட அதிசய எண் மாதிரி இந்த 50-க்கும் எதுனா செஞ்சுவுடுமே(ன்)

ஆத்தீ 50 வெசயத்துக்கு எங்கல போவேன்... 1-க்கே இங்க சிங்கியடிக்குது

ஆமாம்யா ஒமக்கு கள்ளும் குடிக்கனும் பல்லுலயும் படப்படாது... சரி பேசாம டைகர் பிஸ்கட் மாதிரி நீரு 50-50 பிஸ்கட் பத்தி எழுதி ஒப்பேத்திரும்

திங்கிறதப்பத்தியே எழுதிக்கிட்டு இருந்தா வெளங்கிரும்ல... நல்ல யோசனயா சொல்லுடே தின்னிமாடா

எல்லாம் என் நேரம்... பேசாம ஒரு 50 பதிவு, எனக்குப்பிடித்த 50 பாடல்கள், 50 படங்கள்னு...ம்...வேணாம் வேணாம் நமக்கு 6-பதிவு போடவே ஆள் கிடைக்கல... 50-ன்ற நம்பரத்தாண்டி யோசிப்போம்... பேசாம சிங்கைப்பாண்டின்னு இன்னோரு பதிவு போட்டா...

போல சவத்துமூதி... நான் என்னிக்கு சினா பானா போட்டனோ அன்னில இருந்து ஆனந்த விகடன்ல பராக் பாண்டி-ய நிறுத்திப்புட்டாக, நம்ம ராசி அப்பிடி இருக்கு...

ஹா... ஹா... அப்பிடியாண்ணே எனக்கு இந்த விசயம் புதுசு, இந்த தேன்கூடுல இனிமே தொடர்கதையெல்லாம் எழுதக் கூடாதுன்னு சொல்லிப்போட்டாகளே அந்த மாதிரி... ஹா ஹா, ம்ம்... அப்போ பாத்துத்தாம் யோசனை சொல்லணும்... பேசாம, இந்த மாச தலைப்புக்கு ஒண்ண எழுதிப் போட்டுட்டா எண்ணிக்கைக்கு எண்ணிக்கையும் ஆச்சு போட்டிக்கும் படைப்பு ஆச்சு

போடே போக்கத்த பயலே அதெல்லாம் பெரிய விஷயம்... விடுதலைன்ற தலைப்பே விடுகதை போடுதா மாதிரி இருக்கு இப்போதைக்கு ஆகக்கூடியத சொல்டே

பேசாம கவிதை ஒண்ணை எழுதிட்டா? நம்ம கவிமடத்தலைவன் சொன்னாப்ல... இப்போத்தான் நட்சத்திரம் கண் சிமிட்னத வச்சு பாடம்லாம் எடுத்தாருல்லா

சொறிஞ்ச எடம் சொகமா இருக்கு கொஞ்சம் சுண்ணாம்பு தடவுன்னானாம் ஒன்ன மாதிரி ஒருத்தன்... அடே அவர் சொல்றதெல்லாம் பெரிய பெரிய விஷயம், நமக்கு அதப் படிக்கும்போதே கண்ணக் கட்டுது, கவிதை வந்தா ஒண்ணல்லாம் ஏம்ல கடத்துதேன்... ஆங் சமயத்துக்கு ஒனக்கும் நல்ல நல்ல ரோசனையாத்தாம்ல வருது... இரு தமிழோவியத்துக்கு அனுப்பின கவிதை ஒண்ணு இருக்கு அத வச்சு ஒப்பேத்திட்டு வாரம்...

இப்போதைக்கு வ்வ்வர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்டா...

Wednesday, October 11, 2006

50 : வாழ்க்கை சிகரெட் - காதல் நெருப்பு #1

Photobucket - Video and Image Hosting

குளிர்கால இரவது
என் கம்பளி ஜில்லிட்டுக் கிடக்கிறது

கலைந்த என் தூக்கமங்கே
நெளிந்து புரள்கிறது

பரிதாபப்பட்ட முட்டாள் இயற்கையோ
பனிப்போர்வை போர்த்திச் செல்கிறது

நுரையீரலையாவது கதகதப்பூட்டலாமென்று
தேடியதில் கிடைத்தது
தீக்குச்சியில்லா தீப்பெட்டியும்
கன்னித் தன்மையோடு ஓரு சிகரெட்டும்

தீப்பொறியாய் உதிர்ந்த நட்சத்திரமொன்று
என் கை சேரும்முன்னே அணைந்து போயிற்று

நெருப்பின்றி புகையாதே - பனிப்புகை பார்த்தேன்
நிச்சயம் நெருப்பிருக்கும் மேலே

விழுகின்ற வெண்பனி விழுதேறி
விண்ணுச்சி அடைந்தேன் சிகரெட்டோடு

மேகக் கிளைகள் ஒதுக்கினேன்
சில நட்சத்திரப்பூக்கள் உதிர்ந்தன

அதிர்ந்த நீ நிமிர்ந்து பார்த்தாய்
அட, தீப்பொறி தேடிவந்தால், தேவதை

உன் கையில் நிலாக் கண்ணாடி
எனக்கிப்போது இரு நிலவுகள் தெரிந்தன

உச்சிக் கிளையிலிருந்து உன்னருகே குதித்தேன்
பதறிய நீ, உதறியதால் சிதறியது, நிலாக்கண்ணாடி
விண்வெளியெங்கும் நீ, நான் இறைந்து கிடந்தோம்

உதயசூரியனின் சாயமெடுத்து,
பூசிக்கொண்ட உதடசைத்து
என்ன வேண்டுமென்றாய் நீ

என் சிகரெட் பற்ற வைக்க
கொஞ்சம் நெருப்பு வேண்டுமென்றேன்

சிக்கி-முக்கி கல்லாய் உரசிக்கொண்டோம்
தெறித்த பொறியொன்று வெறிகொண்டெரிந்தது.

இந்த வாரம் தமிழோவியத்தில் வெளிவந்திருக்கிறது. நான் எழுதியதில் எனக்கு மிகப் பிடித்த கவிதை.

இதற்கு முந்தைய தேவதைக் கவிதை இங்கே!

Thursday, October 05, 2006

49 : என் வாழ்க்கை... நான் கொடுத்த விலை

Photobucket - Video and Image Hosting
உன் தாய் தந்தையிடமிருந்து பேச்சு நடைகளைக் கற்றுக் கொள்கிறாய், ஆசிரியர்களிடமிருந்து எதைப் பேசுவது எப்படி நடந்து கொள்வது என்பதைக் கற்றுக் கொள்கிறாய், புத்தகங்களிடமிருந்துதான் உனக்கு சிறகுகளும் இருப்பதை உணர்ந்து கொள்கிறாய் என்று யாரோ சொன்னது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட தினத்தில் நான் "One" என்ற புத்தகத்தை படித்து முடித்திருந்தேன்.

மேலே படத்தில் உள்ள ரிச்சர்ட் பாக்(Richard Bach), One, Jonathan Livingston Seagull, Bridge Across Forever, Illusions போன்ற பல பிரபல புத்தகங்களின் எழுத்தாளர். அவர் (Richard Bach) எழுதிய One என்ற இந்த புத்தகத்தை நண்பனொருவன் பரிந்துரைத்தான். படித்து முடித்ததும் நண்பனைவிட, இந்த புத்தகத்தை மிக நெருக்கமாக உணர ஆரம்பித்துவிட்டேன். இந்த புத்தகத்தை சிபாரிசு செய்ததாலேயே அவன் இன்னும் நெருங்கிப் போனது தனி நிகழ்வு.

கதை சொல்லும் பாங்கு, நிகழ்வுகளின் கட்டமைப்பு மற்றும் சொல்ல வரும் விஷயத்தின் நேர்த்தி இவையனைத்துமே தனித் தனியாக சிலாகிக்க வேண்டிய விஷயங்கள், ஆனால் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் இந்தப் புத்தகத்தின் அடிநாதமாக விளங்கும் சில கருத்துக்கள் மற்றும் கேள்விகள்தான்.

ஒவ்வொரு யோசனையும், ஒவ்வொரு தீர்மானமும் நம்மைப் போன்ற ஒரு பிரதியை உண்டாக்கி விடுகிறது, இந்த பிரபஞ்சத்தில்.

சிந்திக்கவே எவ்வளவு சுவாரசியமான விஷயம் இது, ஒரு கல்லூரியை உதாரணமாக எடுத்துக் கொண்டீர்களானால், படிப்பு முடிந்ததும் ஒவ்வொருவரும் ஒரு முடிவு எடுப்பார்கள் அதன் படி அவர்கள் வாழ்க்கைப் பாதையே மாறும். இவர்கள் அனைவரும் உங்கள் பிரதிகள் என்று வைத்துக் கொண்டீர்களானால் உங்கள் வாழ்வும் ஒவ்வொரு முடிவுகளால் எப்படியெல்லாம் மாறியிருக்கும் என்று ஊகிக்க உதவும். இதையே நம் வாழ்வில் முன் சென்று பார்ப்பதற்கும் உபயோகித்துக் கொள்ளலாம்.

ஏனென்றால் இன்று நேரும் மிகச்சிறிய மாற்றம், நம்மை மிக வித்தியாசமான நாளையில் கொண்டுசேர்த்து விடுகிறது. (A tiny change today brings us to a dramatically different tomorrow)

இந்த புத்தகத்தில், நமது யோசனை, சிந்தனை, தீர்மானங்களை சேகரிக்க, அல்லது அவற்றின் வழி சென்று பார்க்க வகை செய்யும் சக்தி வாய்ந்த ஒரு தொழில்நுட்பத்தை பற்றி அதிக குழப்பமின்றி பேசுவார் பாக், கால இயந்திரத்தை இன்று நடைமுறையில் இருக்கும் மிகச் சாதாரணமான போக்குவரத்து சாதனம் போலவே பாவித்துக் கொள்கிறார். இதுவே நம்மை அதிக எதிர்க்கேள்விகளின்றி கதையின் போக்கில் செல்ல துணை புரிகிறது. ஆசிரியர் நம்மைப் பார்த்துக் கேட்கும் ஆதாரக் கேள்வியை புரிந்துகொண்டு, நம்மை நாமே அதைக் கேட்டுக் கொள்ள வைக்கும் பணியில் வெற்றியும் பெற்று விடுகிறது ஆசிரியரின் இந்த படைப்பான "One".

நீங்களே படித்துணர வேண்டிய விஷயங்கள்தான் இந்தப் புத்தகமெங்கும் நிறைந்து இருப்பதால், இந்த புத்தகத்தைப் பற்றி நான் வேறு எதுவும் கூறப் போவதில்லை. இந்த புத்தகம் எழுப்பிய மிக சுவாரசியமான கேள்விகள் சிலவற்றை மட்டும் கேட்டு வைக்கிறேன்.

1) இப்போது இருக்கும் நீங்கள் உங்களை உங்கள் சிறு வயதிலே சந்தித்தால் என்ன கூறுவீர்கள்? உங்களின் எந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வீர்கள்?

எ.கா : பத்தாவதில் மார்க் கம்மி என்று இப்படி அழுது கொண்டிருக்கிறாயே... இந்த மார்க் உனக்கு உபயோகமாகப் போவதேயில்லை ஏனென்றால் நீதான் பனிரெண்டாவதில் ஸ்டேட் பர்ஸ்ட். அழாமல் அடுத்த வேலையைக் கவனி. (அல்லது) சிறுசிறு சண்டைகளால் அவனுடன் பேசாமல் இருக்கிறாயே, கல்லூரி முடியும் இந்த தறுவாயிலாவது அவனோடு பேசிவிடு, இந்த வாய்ப்பை விட்டால் அவனை நீ சந்திக்கவே போவதில்லை. குறைந்த பட்சம் உன் 40 வயது வரை

2) அப்புறம், மேலும் ஒரு சூழல். இப்போதுள்ள உங்களை, உங்களின் 60 வயது பிரதி சந்தித்தால் என்ன கேட்டுக் கொள்வீர்கள்?

எ.கா : சோழிங்கநல்லூர் பக்கத்தில் வாங்கிய மனை விலையேறியதா?
(அல்லது)
ஓயாமல் குடியும் கும்மாளமாக இருக்கிறேனே, நான் 60 வயது வரை உயிரோடு இருந்தேனா என்ன?

அதற்கு அவர்கள் பதில் என்னவாக இருந்திருக்கும்? அவர்கள் பதிலால் உங்கள் வாழ்க்கைப் பாதை மாறியிருக்குமா?

யோசியுங்கள், ஏனென்றால் நம் வாழ்வின் கடைசிக் கேள்வி இப்படியிருக்கலாம்.

இப்போது உள்ள நானாக மாறுவதற்கு விலையாக என் வாழ்க்கையையே தந்திருக்கிறேன். நான் தகுந்த விலையைத்தான் கொடுத்திருக்கிறேனா ? (I gave my life to become the person I am right now. Was it worth it?

இந்தக் கேள்விகளை சில வலைப்பதிவர்களிடம் கேட்ட போது...

அனிதா
1) அந்தச் சிறுமியிடம், பெற்றோர்களோடும், தங்கையோடும் இன்னும் அதிக நேரம், அதிக மகிழ்ச்சியாக செலவழிக்கச் சொல்வேன், (பிற்காலத்தில் அவ்வளவாக கிடைப்பதில்லை அந்தப் பொழுதுகள்). பள்ளிக்கு செல்வதே இன்பம் என்பதை எடுத்துக் கூறுவேன், விளையாடுவதற்கென்றே நேரம் ஒதுக்கப் பட்டிருக்கிறதே!! (சிறு வயது அனிதா, அலுவலகம் செல்பவர்களை பொறாமையுடன் பார்ப்பாள் :-))
2) சூப்பர் சீனியர் அனிதா நான் கேட்பதற்கு முன்னமே, வாழ்க்கை விலைமதிப்பற்றது எனவே சின்னச்சின்ன விஷயங்களுக்காகவெல்லாம் வருத்தப்பட்டு அழுது கொண்டிராதே என்பாளாயிருக்கும். மேலும், இப்போது நீ வருந்தும் விஷயங்கள் எல்லாம் பைசா பிரயோஜனமில்லாதவை... ஏனென்றால் நானும் என் பிரிய கணவனும் பண்ணைவீட்டில், மகன், மகள், பேரன் பேத்திகளுடன் வாழ்க்கையை உல்லாசமாக க(ழி)ளித்திக் கொண்டிருக்கிறோம் ;-)

தடாலடி கௌதம்
1) இப்ப இருக்க மாதிரியே சிகரெட், தண்ணி இரண்டையும் இனிமேலும் தொடாதடா!
2) ஆசைப்பட்டதை எல்லாம் அடைந்து விட்டாயா?

வெட்டிப்பயல்
1) +2ல எண்ட்ரன்ஸ் மார்க் வந்தது என் பிறந்த நாளன்று... மார்க் குறைஞ்சிடுச்சினு ரொம்ப வருத்தப்பட்டேன். அந்த பாலாஜிய பாத்திருந்தேன்னா கவலைப்படாம ஜாலியா இரு... உனக்கு நல்ல கம்பெனில வேலை கிடைச்சு நீ நல்ல நிலைமைல இருப்பனு சொல்லியிருப்பேன் :-)
2) அந்த பாலாஜிய பார்த்தேன்னா கேக்கறது இதுவாத்தான் இருக்கும். ஒழுங்கா ஏதாவது புண்ணியம் செஞ்சியா? இல்லனா சீக்கிரம் செய். நீ நாளைக்கே செத்தாலும் செத்துடுவனு சொல்லுவேன் ;)

தேவ்
1) எப்பிடி கஜோலை தீவிரமா லவ் பண்ணி அஜய் தேவ்கன் கூட போட்டி போட முடியாமல் என் முதல் காதலை மொழி தெரியாமல் தொலைத்தேன்னு சொல்லுவேன்.. காதல் அப்டின்றது ஒரு மாயவலை கல்யாணம் அது அதை விட பெரிய மந்திரக்கலைன்னு எடுத்து சொல்லுவேன்.
2) ஆமா என்ன என்னமோ பெரிய பீட்டர் விட்டுகிட்டு திரிஞ்ச இப்போ எல்லாதையும் சாதிச்சிட்டியா ? என்ன ஆச்சுன்னு கேட்பேன்? White House விலை பேசி அதுக்கு சிவப்பு பெயின்ட் அடிக்க போறேன்னு சொன்னியே செஞ்சியான்னு கேட்பேன்.

சோம்பேறி பையன்
1) நன்றாக படிக்க வேண்டும் என சொல்வேன்.
2) உங்கள் திருமண வாழ்க்கை எப்படியிருந்தது என கேட்பேன்.

நான் இவர்களிடம் கேட்க மறந்த கேள்வி...

உங்களுக்கு கிடைக்கும் பதிலால் உங்கள் வாழ்க்கைப் பாதை மாறியிருக்குமா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் உங்களுடைய பதில்களையும் பின்னூட்டமிடலாமே...

சென்ற வாரம் தமிழோவியத்தில் வெளிவந்த கட்டுரை இது!

48 : சர்தார்ஜி ஜோக்குகள், கற்பனையோடு முடிந்துவிடுவதில்லை!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..........



ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..........
Corrected மச்சி \/

Wednesday, October 04, 2006

47 : கற்பனையோடு முடிந்துவிடுவதில்லை சர்தார்ஜி ஜோக்குகள்!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..........

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..........

46 : இவரைத் தெரியுமா உங்களுக்கு?

Photobucket - Video and Image Hosting
இவரைத் தெரியுமா உங்களுக்கு?

இந்தக் கவிதையைப் படித்திருக்கிறீர்களா?

My Heart is Heavy

My heart is heavy with many a song
Like ripe fruit bearing down the tree,
But I can never give you one
My songs do not belong to me.

Yet in the evening, in the dusk
when moths go to and fro
in the gray hour if the fruit has fallen
take it, no one will know.

சாரா என்று அழைக்கப்படும் சாரா டீஸ்டேல் (Sarah Teasdale). இந்தப் பெண் கவிஞரின் கவிதைகளை இணைய தளத்தில்தான் சந்தித்தேன். முதல் வாசிப்பிலேயே என்னை ஈர்த்துவிட்ட கவிதைகள் அவை.

ஒரு சிறு பெண்ணாய் காதல் ரசம் சொட்டும் கவிதைகள் வடிக்கிறார், இயற்கையை தாய் மடியாய் நேசித்து அதன் சிறு சிறு நிகழ்வுகளை கவிதைப் படுத்துகிறார் . அவர் வாழ்ந்த காலம் 1884-1933, ஆனால் அவர் எழுதிய கவிதகள் இன்றும் ரசிக்கத்தக்கதாய் இருக்கிறது. அவர் எழுதிய கவிதை பாணி இன்றளவும் நடை முறையில் இருந்து வருகிறது.

1918-ல் தன்னுடைய காதல் கவிதைகளுக்காக மிக உயரிய விருதான புலிட்சர் விருது வாங்கியிருக்கும் இந்தக் கவிஞரை அறிந்தோர் மிகச் சிலரே.அவர் கவிக்கடலில் இருந்து ஒரு நல்முத்தை, எனக்குத் தெரிந்த தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

எடுத்துக் கொள்ளடி, எவருக்கும் சொந்தமற்ற என் பாடலை!

பழுத்த பழங்களால் வளைந்து கிடக்கும் கிளை போலே
பாடல்களால் கனத்துக் கிடக்குது என் மனது - இருந்தும்
பரிசாய் உனக்கென ஒன்றைக்கூட என்னால் தர முடியாது
என் பாடல்கள் எவையும் எனக்கு சொந்தமானதில்லை

பொழுதுசாயுமந்த அந்திப் பொழுதில்
பூச்சிகளும் அலையும் அந்த வேளையில்
(தென்றலின் வருடலில்) சில கனிகள் உதிர்ந்திருந்தால்
எடுத்துக் கொள்ளடி, எவருக்கும் தெரியாது.

பாடல் எனும் இடத்தில் கவிதை என்றோ காதல் என்றோ பொருள் மாற்றி வாசித்து பாருங்களேன் மீண்டுமொருமுறை!

சென்ற வாரம் தமிழோவியத்தில் வெளிவ்ந்திருந்தது இந்தப் படைப்பு

Monday, October 02, 2006

45 : ஆசிரிய வணக்கம்

வணக்கம் ஆசிரியரே, நன்றி!

பாறையாய் நானிருந்தேன்
உளியாய் என் ஆசிரியர்கள்
கல்வெட்டோ கால்தூசோ
அவர்தம் கை வண்ணமே!

என் வாழ்வில் நான் என்னென்ன முன்னேற்றங்கள் அடைந்தேனோ அத்தனையும் என் ஆசிரியர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கவே விரும்புகிறேன். எனக்கும் என் ஆசிரியர்களுக்கும் இடையில் எப்போதும் ஒரு நல்லுணர்வு இருந்து வந்திருக்கிறது. சில சமயம் அவை உறவாகக் கூட மலர்ந்திருக்கின்றன. ஒரு வேளை என் பிறந்த தினமும் ஆசிரியர் தினமும் ஒன்றாயிருப்பதாலோ என்று நான் அடிக்கடி யோசித்திருக்கிறேன். இங்கு சிறப்பாசிரியர் ஆன இந்த தருணத்தில் எனக்கு மிகவும் பிடித்த 10 ஆசிரியர்களை அவர்களை சந்தித்த கால வரிசையிலேயே நினைவு கூற ஆசைப்படுகிறேன்.

அன்னபாக்கியம் டீச்சர் : எங்கள் ஊர் கழுகுமலையில் குறைந்தது 60% சதவீத மாணவர்களுக்கு அ, ஆ, கற்றுத்தந்தவர். என் அப்பா கூட இவரிடம்தான் கற்றுக் கொண்டாராம். மிக அன்பான பெண்மணி, ஆரம்பப் பள்ளிகளில் அன்பே உருவாய் இருக்கும் ஆசிரியர்கள்தான் தேவை. பெற்றோரை விட்டு முதல் முதலாய் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வீட்டில் கிடைக்கும் அன்பும் கவனிப்பும் தேவைப்படும், அதுவும் கிராமங்களில் கண்டிப்பாக தேவைப்படும் ஒரு விஷயம் இது. இல்லையென்றால் நாம் பள்ளி செல்ல அடம்பிடிக்கையில், 'சரி பய படிச்சு என்னத்த கிழிக்கப் போறான், அப்பாவுக்கு துணையா கடை கண்ணிக்கு போய்ட்டு வந்துட்டு இருடே" ன்னு விட்டுவிடும் ஆபத்து மிக அதிகம். எப்போது ஊருக்கு சென்றாலும் தேடிப் போய் சந்தித்து விடுவேன்.

ஹிந்தி சார் : இவரென்னமோ நல்லாத்தான் சொல்லிக் குடுத்தாரு ஆனா எனக்கு கவனமெல்லாம் வேறெங்கோ இருந்ததால் பிராத்மிக், மத்யமாவோடு நின்று போனது என் ஹிந்திப் பயணம். படிக்கும்போது ஒழுங்காக மதிக்காததால்தான் எனக்கு ஹிந்தி வராமலே போயிற்றோ என்ற குற்ற உணர்ச்சியிலேயே இவரை அடிக்கடி பார்த்து மரியாதை செலுத்தப்போய், பாடங்கள் தாண்டிய செய்தி பரிமாற்றங்களில் எனக்கு மிகவும் பிடித்தவராகிப் போனார். பெயர் ராமசாமி என்று நினைக்கிறேன், ஹிந்தி சார் என்று அழைத்தே பழகி விட்டதால்... பெயரில் என்ன இருக்கிறது.

ஆறுமுகம் வாத்தியார் : ஆறாம் வகுப்பு நான் இவரிடம்தான் பயின்றேன். அறிவியல் பாடங்கள் மட்டும்தான் எடுப்பார், நாம் சாதாரணமாய் பார்க்கும் பழகும் விஷயங்களில் உள்ளொளிந்து இருக்கும் அறிவியலை எடுத்துக் காட்டி பாடத்தில் நாட்டம் உண்டு பண்ணிவிடுவார். அந்த வருடம் மட்டும் என் இருப்பிடமே ஒரு பரிசோதனைச்சாலை போல் இருக்கும். மந்திர மை, வண்ணத்துப் பூச்சி வளர்ச்சி, நியூட்டன் கோட்பாடுகள் என்று நிறைய இப்போதும் ஞாபகம் இருக்கிறது. உற்சாகமும் ஊக்கமும் எப்போதும் நிறைந்து கிடக்கும் இவரிடம். பல ஏழை மாணவர்களுக்கு புத்தகம், பரிட்சைக் கட்டணம், சீருடைகள் என்று பரிசளிக்கும் வெளிவராத நல்ல மறுபக்கமும் கொண்டவர்.

இசக்கி சார் : புளியங்குடியில் இருக்கும் இவர் இல்லத்தில் எனக்கு கிடைத்தது மூன்று மாத குருகுல வாசம். உண்மைதான் அவருக்கு கை கால் அமுக்கிவிட்டு நாங்கள் கற்றுக் கொண்டது கணிதமும் தமிழும். சைனிக் பள்ளி செல்ல பயிற்சி வகுப்புகள் நடத்துவார், நான் கடைசி நேரத்தில் சேர்ந்ததால் எனக்கு கிடைத்தது 3 மாதப் பயிற்சி மட்டுமே. விடியற்காலையே எழுந்து கணக்குகளுக்கு விடை கண்டு பிடிக்கும் வகுப்போடு ஆரம்பிக்கும் பயிற்சி இரவு 9 மணி வரை ஏதாவது வகுப்புகள், புதிர்கள், பரிட்சைகள் என்று ஒவ்வொரு நொடியும் ஏதாவது புது விஷயம் கற்றுக் கொண்டிருந்ததால் எனக்கு மிகப் பிடித்த காலகட்டம் அது. எனக்கு புதிர்களும் அதில் ஒளிந்து இருக்கும் சவாலும் எனக்கு பிடிக்கும், காரணம் கேட்டால் நான் இவரைத்தான் கை காட்டுவேன்.

ஷீலா செரியன் மிஸ் : அன்னபாக்கியம் டீச்சரின் அனைத்துக் குணாதிசயங்களோடு இன்னும் கொஞ்சம் கருணையும் கண்டிப்பும் சேர்த்தால் இவரைப் பார்க்கலாம். அப்போதெல்லாம் சைனிக் பள்ளியில் பெரும்பாலும் கிராமத்திலிருந்து வந்தவர்கள்தான் மாணாக்கர்களாக இருப்பார்கள் எனவே ஆறாம் வகுப்பிலும் நிறைய பேருக்கு ABCD... கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கும். கையெழுத்து நன்றாக வர வேண்டும் என்று ரொம்பவும் பிரயாசைப் படுவார், கையெழுத்தை சீராக்க முயன்று வெகு சிலரிடமே தோற்றிருக்கிறார் அவர்களுள் நானும் ஒருவன் என்பதை தலை குனிந்து ஒப்புக்கொள்ள வேண்டும். வகுப்புகளில் ஏனென்றே தெரியாமல் நான் நிறைய தூங்குவேன், இப்போது வரை தொடரும் ஒரு கெட்ட பழக்கம் அது. ஆசிரியர்கள் அனைவரும் அந்த ஒரு காரணத்திற்காக என்னை அடித்து துவைக்கும் போது, இவர் ஒருவர்தான் என் தந்தையை சந்தித்து "பையனுக்கு உடல் நல ரீதியா ஏதாவது பிரச்னை இருக்கப் போகிறது மருத்துவரிடம் சென்று காண்பியுங்கள்" என்று அன்போடு பரிந்துரைத்தவர். "கொழுப்புதான்... ஒடம்புல வேறென்ன நோவு இருக்கப் போகுது"ன்னு என் அப்பா என்னை தனியாய் கவனித்தது வேறு கதை.

A.D.S : ஏ.தேவண்ண சாமி என்ற அவரின் பெயர் நிறையப் பேருக்கு தெரிந்தே இருக்காது, வரலாறு ஆசிரியர். எங்கள் பள்ளி வள்ளுவர், பாரதியார், சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என ஆறு இல்லங்களாக பிரிக்கப் பட்டிருக்கும். நான் இருந்த பாண்டியா இல்லத்தின் பொறுப்பாசிரியராக இருந்தவர். இவரை நான் நினைவில் வைத்திருப்பதற்கு காரணங்கள், நான் அதிகம் தூங்கிய வகுப்பு இது, அதிகம் அடி உதை கொடுத்தவர் இவர் அப்புறம் அவருடைய "ஸ்ப்ளெண்டர் பைக்". அவர் வண்டி மட்டும் புதிது போல எப்போதும் பளபளக்கும் வித்தையை எவருக்கும் கற்று தந்ததில்லை என நினைக்கிறேன்.

P.C : என் வாழ்வில் இந்த எழுத்துக்களை மறப்பேனா என்று தெரியவில்லை. நான் கணிணி தொடர்பான வேலையில் இருப்பதால் அல்ல, பி.சந்திரன் அவர் பெயர், எனக்கு வேதியியல் கற்றுத்தந்தவர், மிக மென்மையான பேச்சாளர், ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டு பின் பாடம் எடுப்பதில் வல்லவர். என் தூக்க வியாதியால் பாடங்கள் நிறைய கோட்டை விட்டிருக்கிறேன். ஆனால் அவரை நான் நினைவில் வைத்திருப்பது அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்காக. உயிரோடிருந்ததால் வாழ்ந்து கொண்டிருந்த காலம் அது, என் மீது எனக்கு பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை. அப்படிப்பட்ட தருணத்தில் என்னை நானிருந்த இல்லத்தின் கேப்டனாக அறிவித்து உன்னால் முடியும் என்று நம்பிக்கை விதைத்தவர். அவர் ஆசைப்பட்டதில் நூறில் ஒரு பங்காவது சாதித்திருப்பேனா தெரியாது ஆனால் என்னை நான், முதன் முறையாக நம்பிக்கையோடு பார்க்க வைத்தவர்.

மேரி லாலி : கல்லூரி ஆசிரியை, B.Sc பாடத்திட்டத்தில் பல்வேறு வகுப்புகள் எடுப்பார். இவர் வகுப்பை மட்டும் நாங்கள் தவற விட மாட்டோம். ஏனென்றால் பாடமே எப்போதாவது தான் நடக்கும். ஏதாவது குறும்பு செய்து பாடத்தை திசை திருப்பும் வேலைக்கென்றே வகுப்பில் நான், சந்து, காளி, தேவா, டேவிட் என்று சிலர் இருப்போம். ஆனால் எங்களையெல்லாம் சொந்த தம்பி போல் பாவித்து அன்பு செலுத்துவார். மிகுந்த இறை பக்தி மிகுந்தவர், அதை வைத்து சீண்டியே பல வகுப்புகளை வீணடித்திருப்போம். அவர் திருமணத்தில் கலந்து கொண்டது மறக்க முடியா நினைவுகளை உள்ளடக்கியது.

ஆராவமுதன் : இந்த நிமிடம் கூட நான் இவருடைய மாணவன் தான். கணிணியியலில் இவருக்கு தெரியாததும் இருக்குமோ என்று சந்தேகிக்க வைக்கும் அளவுக்கு அனேக விஷயங்களை தெரிந்து வைத்திருப்பவர். கல்லூரி பாடத்திட்டங்களுக்கு வெளியேயும் ஜாவா, லினக்ஸ் என்று எங்களுக்கு கற்பித்தவர். இவரிடம் சூரியனுக்கு கீழேயும் மேலேயும் எந்த விஷயங்களைப் பற்றி வேண்டுமானாலும் விவாதிக்க முடியும், விவாதித்திருக்கிறேன். கல்லூரியுடன் முடிந்து விடாத நட்பு மற்றும் உறவு இது. தன்னுடைய மாணவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அக்கறை கொண்டு அறிவுரை சொல்வதோடு மட்டுமல்லாது ஆக்கப்பூர்வமாய் உதவுவதையும் தொழிலாகக் கொண்டவர்.

ஸ்வர்ண அகிலா : இவர்களை இந்தப் பட்டியலில் சேர்க்கலாமா என்று இரண்டொருமுறை யோசித்த பின்னேதான் சேர்த்தேன். இன்று இந்தப் பெயரை சொல்லி இவர்களைத் தெரியுமா என்று கேட்டீர்களானால், நான் தெரியாது என்று கூட சொல்லிவிடுவேன், சமயங்களில்! அருணாக்கா என்றுதான் தெரியும் இப்போது. பகுதி நேர பாடத்திட்டத்தில் பயிலும் போது சில வகுப்புகள் எடுப்பார். கண்டிப்புக்கு பெயர் போனவர், வகுப்புகளில் கவனம் இல்லையென்றால் சுத்தமாகப் பிடிக்காது. "ப்ராக்ஸி" போடுவதற்கென்று பழகி, சண்டையிட்டு, பின் சகோதரனாய் என்னை தத்தெடுத்துக் கொண்டவர். இப்போது என்னைப் போன்றே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், என் வாழ்வில் தனிப்பட்ட அக்கறை கொண்டவர். எப்போது அறிவுரை சொன்னாலும் ஒரு 'ஆசிரியத்தொணி' தென்படும், அதற்காகவே இவர்கள் இந்தப் பட்டியலில்

இந்தக் கட்டுரை சென்ற வாரம் தமிழோவியத்தில் வெளிவந்தது.