Thursday, October 05, 2006

49 : என் வாழ்க்கை... நான் கொடுத்த விலை

Photobucket - Video and Image Hosting
உன் தாய் தந்தையிடமிருந்து பேச்சு நடைகளைக் கற்றுக் கொள்கிறாய், ஆசிரியர்களிடமிருந்து எதைப் பேசுவது எப்படி நடந்து கொள்வது என்பதைக் கற்றுக் கொள்கிறாய், புத்தகங்களிடமிருந்துதான் உனக்கு சிறகுகளும் இருப்பதை உணர்ந்து கொள்கிறாய் என்று யாரோ சொன்னது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட தினத்தில் நான் "One" என்ற புத்தகத்தை படித்து முடித்திருந்தேன்.

மேலே படத்தில் உள்ள ரிச்சர்ட் பாக்(Richard Bach), One, Jonathan Livingston Seagull, Bridge Across Forever, Illusions போன்ற பல பிரபல புத்தகங்களின் எழுத்தாளர். அவர் (Richard Bach) எழுதிய One என்ற இந்த புத்தகத்தை நண்பனொருவன் பரிந்துரைத்தான். படித்து முடித்ததும் நண்பனைவிட, இந்த புத்தகத்தை மிக நெருக்கமாக உணர ஆரம்பித்துவிட்டேன். இந்த புத்தகத்தை சிபாரிசு செய்ததாலேயே அவன் இன்னும் நெருங்கிப் போனது தனி நிகழ்வு.

கதை சொல்லும் பாங்கு, நிகழ்வுகளின் கட்டமைப்பு மற்றும் சொல்ல வரும் விஷயத்தின் நேர்த்தி இவையனைத்துமே தனித் தனியாக சிலாகிக்க வேண்டிய விஷயங்கள், ஆனால் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் இந்தப் புத்தகத்தின் அடிநாதமாக விளங்கும் சில கருத்துக்கள் மற்றும் கேள்விகள்தான்.

ஒவ்வொரு யோசனையும், ஒவ்வொரு தீர்மானமும் நம்மைப் போன்ற ஒரு பிரதியை உண்டாக்கி விடுகிறது, இந்த பிரபஞ்சத்தில்.

சிந்திக்கவே எவ்வளவு சுவாரசியமான விஷயம் இது, ஒரு கல்லூரியை உதாரணமாக எடுத்துக் கொண்டீர்களானால், படிப்பு முடிந்ததும் ஒவ்வொருவரும் ஒரு முடிவு எடுப்பார்கள் அதன் படி அவர்கள் வாழ்க்கைப் பாதையே மாறும். இவர்கள் அனைவரும் உங்கள் பிரதிகள் என்று வைத்துக் கொண்டீர்களானால் உங்கள் வாழ்வும் ஒவ்வொரு முடிவுகளால் எப்படியெல்லாம் மாறியிருக்கும் என்று ஊகிக்க உதவும். இதையே நம் வாழ்வில் முன் சென்று பார்ப்பதற்கும் உபயோகித்துக் கொள்ளலாம்.

ஏனென்றால் இன்று நேரும் மிகச்சிறிய மாற்றம், நம்மை மிக வித்தியாசமான நாளையில் கொண்டுசேர்த்து விடுகிறது. (A tiny change today brings us to a dramatically different tomorrow)

இந்த புத்தகத்தில், நமது யோசனை, சிந்தனை, தீர்மானங்களை சேகரிக்க, அல்லது அவற்றின் வழி சென்று பார்க்க வகை செய்யும் சக்தி வாய்ந்த ஒரு தொழில்நுட்பத்தை பற்றி அதிக குழப்பமின்றி பேசுவார் பாக், கால இயந்திரத்தை இன்று நடைமுறையில் இருக்கும் மிகச் சாதாரணமான போக்குவரத்து சாதனம் போலவே பாவித்துக் கொள்கிறார். இதுவே நம்மை அதிக எதிர்க்கேள்விகளின்றி கதையின் போக்கில் செல்ல துணை புரிகிறது. ஆசிரியர் நம்மைப் பார்த்துக் கேட்கும் ஆதாரக் கேள்வியை புரிந்துகொண்டு, நம்மை நாமே அதைக் கேட்டுக் கொள்ள வைக்கும் பணியில் வெற்றியும் பெற்று விடுகிறது ஆசிரியரின் இந்த படைப்பான "One".

நீங்களே படித்துணர வேண்டிய விஷயங்கள்தான் இந்தப் புத்தகமெங்கும் நிறைந்து இருப்பதால், இந்த புத்தகத்தைப் பற்றி நான் வேறு எதுவும் கூறப் போவதில்லை. இந்த புத்தகம் எழுப்பிய மிக சுவாரசியமான கேள்விகள் சிலவற்றை மட்டும் கேட்டு வைக்கிறேன்.

1) இப்போது இருக்கும் நீங்கள் உங்களை உங்கள் சிறு வயதிலே சந்தித்தால் என்ன கூறுவீர்கள்? உங்களின் எந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வீர்கள்?

எ.கா : பத்தாவதில் மார்க் கம்மி என்று இப்படி அழுது கொண்டிருக்கிறாயே... இந்த மார்க் உனக்கு உபயோகமாகப் போவதேயில்லை ஏனென்றால் நீதான் பனிரெண்டாவதில் ஸ்டேட் பர்ஸ்ட். அழாமல் அடுத்த வேலையைக் கவனி. (அல்லது) சிறுசிறு சண்டைகளால் அவனுடன் பேசாமல் இருக்கிறாயே, கல்லூரி முடியும் இந்த தறுவாயிலாவது அவனோடு பேசிவிடு, இந்த வாய்ப்பை விட்டால் அவனை நீ சந்திக்கவே போவதில்லை. குறைந்த பட்சம் உன் 40 வயது வரை

2) அப்புறம், மேலும் ஒரு சூழல். இப்போதுள்ள உங்களை, உங்களின் 60 வயது பிரதி சந்தித்தால் என்ன கேட்டுக் கொள்வீர்கள்?

எ.கா : சோழிங்கநல்லூர் பக்கத்தில் வாங்கிய மனை விலையேறியதா?
(அல்லது)
ஓயாமல் குடியும் கும்மாளமாக இருக்கிறேனே, நான் 60 வயது வரை உயிரோடு இருந்தேனா என்ன?

அதற்கு அவர்கள் பதில் என்னவாக இருந்திருக்கும்? அவர்கள் பதிலால் உங்கள் வாழ்க்கைப் பாதை மாறியிருக்குமா?

யோசியுங்கள், ஏனென்றால் நம் வாழ்வின் கடைசிக் கேள்வி இப்படியிருக்கலாம்.

இப்போது உள்ள நானாக மாறுவதற்கு விலையாக என் வாழ்க்கையையே தந்திருக்கிறேன். நான் தகுந்த விலையைத்தான் கொடுத்திருக்கிறேனா ? (I gave my life to become the person I am right now. Was it worth it?

இந்தக் கேள்விகளை சில வலைப்பதிவர்களிடம் கேட்ட போது...

அனிதா
1) அந்தச் சிறுமியிடம், பெற்றோர்களோடும், தங்கையோடும் இன்னும் அதிக நேரம், அதிக மகிழ்ச்சியாக செலவழிக்கச் சொல்வேன், (பிற்காலத்தில் அவ்வளவாக கிடைப்பதில்லை அந்தப் பொழுதுகள்). பள்ளிக்கு செல்வதே இன்பம் என்பதை எடுத்துக் கூறுவேன், விளையாடுவதற்கென்றே நேரம் ஒதுக்கப் பட்டிருக்கிறதே!! (சிறு வயது அனிதா, அலுவலகம் செல்பவர்களை பொறாமையுடன் பார்ப்பாள் :-))
2) சூப்பர் சீனியர் அனிதா நான் கேட்பதற்கு முன்னமே, வாழ்க்கை விலைமதிப்பற்றது எனவே சின்னச்சின்ன விஷயங்களுக்காகவெல்லாம் வருத்தப்பட்டு அழுது கொண்டிராதே என்பாளாயிருக்கும். மேலும், இப்போது நீ வருந்தும் விஷயங்கள் எல்லாம் பைசா பிரயோஜனமில்லாதவை... ஏனென்றால் நானும் என் பிரிய கணவனும் பண்ணைவீட்டில், மகன், மகள், பேரன் பேத்திகளுடன் வாழ்க்கையை உல்லாசமாக க(ழி)ளித்திக் கொண்டிருக்கிறோம் ;-)

தடாலடி கௌதம்
1) இப்ப இருக்க மாதிரியே சிகரெட், தண்ணி இரண்டையும் இனிமேலும் தொடாதடா!
2) ஆசைப்பட்டதை எல்லாம் அடைந்து விட்டாயா?

வெட்டிப்பயல்
1) +2ல எண்ட்ரன்ஸ் மார்க் வந்தது என் பிறந்த நாளன்று... மார்க் குறைஞ்சிடுச்சினு ரொம்ப வருத்தப்பட்டேன். அந்த பாலாஜிய பாத்திருந்தேன்னா கவலைப்படாம ஜாலியா இரு... உனக்கு நல்ல கம்பெனில வேலை கிடைச்சு நீ நல்ல நிலைமைல இருப்பனு சொல்லியிருப்பேன் :-)
2) அந்த பாலாஜிய பார்த்தேன்னா கேக்கறது இதுவாத்தான் இருக்கும். ஒழுங்கா ஏதாவது புண்ணியம் செஞ்சியா? இல்லனா சீக்கிரம் செய். நீ நாளைக்கே செத்தாலும் செத்துடுவனு சொல்லுவேன் ;)

தேவ்
1) எப்பிடி கஜோலை தீவிரமா லவ் பண்ணி அஜய் தேவ்கன் கூட போட்டி போட முடியாமல் என் முதல் காதலை மொழி தெரியாமல் தொலைத்தேன்னு சொல்லுவேன்.. காதல் அப்டின்றது ஒரு மாயவலை கல்யாணம் அது அதை விட பெரிய மந்திரக்கலைன்னு எடுத்து சொல்லுவேன்.
2) ஆமா என்ன என்னமோ பெரிய பீட்டர் விட்டுகிட்டு திரிஞ்ச இப்போ எல்லாதையும் சாதிச்சிட்டியா ? என்ன ஆச்சுன்னு கேட்பேன்? White House விலை பேசி அதுக்கு சிவப்பு பெயின்ட் அடிக்க போறேன்னு சொன்னியே செஞ்சியான்னு கேட்பேன்.

சோம்பேறி பையன்
1) நன்றாக படிக்க வேண்டும் என சொல்வேன்.
2) உங்கள் திருமண வாழ்க்கை எப்படியிருந்தது என கேட்பேன்.

நான் இவர்களிடம் கேட்க மறந்த கேள்வி...

உங்களுக்கு கிடைக்கும் பதிலால் உங்கள் வாழ்க்கைப் பாதை மாறியிருக்குமா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் உங்களுடைய பதில்களையும் பின்னூட்டமிடலாமே...

சென்ற வாரம் தமிழோவியத்தில் வெளிவந்த கட்டுரை இது!

20 comments:

ராசுக்குட்டி said...

தமிழோவியத்தில் எழுதிய கட்டுரையோடுதான் சேர்க்க வேண்டுமென நினைத்திருந்தேன், நேரத்தை ஒழுங்காக திட்டமிடாததால் அங்கே சேர்க்க முடியவில்லை. பதில் கொடுத்தவர்கள் மன்னிக்கவும்.

ராசுக்குட்டி said...

//1) பொண்ணுங்க கூட சகஜமா பேசி பழகிக்கோ. பின்னாடி வேலைக்கு போற இடத்துல கஷ்டப்படமாட்ட.
2) நீங்க சாதிக்கனும்னு நினைச்சி எதையாவது மிஸ் பண்ணிட்டீங்களா? அது தெரிஞ்சா அதை தவிர்க்க இப்போழுதிருந்தே உழைப்பேன்!!!
//
வெட்டிப்பயல் -> உங்கள் நண்பரின் பதில்களும் நன்றாக இருந்தன, வேலைக்கு வந்த இடத்தில் உங்கள் நண்பர் கஷ்டப் படுகிறாரா என்ன?? ;-)

நாமக்கல் சிபி said...

//1) பொண்ணுங்க கூட சகஜமா பேசி பழகிக்கோ. பின்னாடி வேலைக்கு போற இடத்துல கஷ்டப்படமாட்ட. //
இங்கதான் (எங்க ஆபிஸ்ல) பொண்ணுங்களே இல்லையே :-(
அப்பறம் அவன் என்ன கஷ்டப்படறான்னு எனக்கு தெரியல :-)

ஒரு வேளை பெங்களூர்ல இருக்கும் போது கஷ்டப்பட்டிருப்பான்னு நினைக்கிறேன் ;)

Anonymous said...

எதாவது கால மச்சினி... வேனாம்பா ஆங்கிலத்திலேயே சொல்லிடறேன், எதாவது டைம் மெஷின் கண்டுபிடித்து காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் சென்றாலும் கடந்த காலத்தினை (வரலாற்றை ) மாற்ற முடியாது என்ற கருத்து (தியரி) நிலவுகிறது (உதா, உங்களின் சிறுவயது உருவத்தை நீங்களே சென்று கொன்றுவிட்டால், நீங்கள் இருப்பது சாத்தியமில்லெயே.. இதைச் செய்தால் வரலாற்றில் குழப்பம் ஏற்படுமல்லவா?)

ஆகவே, வரும் பெரியவரிடம் நலம் விசாரிக்க மட்டுமே முடியும். அதுபோலவே நாமும் எதாவது தகவல் மட்டுமே நம் சிறு வயது உருவத்துடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

சொல்ல வந்ததை முதலில் சொல்லிவிடு எனக்கேட்பது புரிகிறது. என் சிறுவயது பிம்பத்திடம் கொஞ்சமே சோம்பேறித் தனத்தை குறைப்பது பற்றியும் எதையும் தள்ளிப் போடுதலை குறைக்கச் சொல்லியும் ஆலோசனை சொல்லுவேன். என்னைச் சந்திக்க வரும் பெரியவரும் தலையில் அடித்துக் கொண்டே இதே அறிவுரை கொடுப்பாராயிருக்கும்.

சரி, பிற்காலத்தில் டைம் மெஷின் கண்டுபிடிப்பார்கள் என்றால், ஏன் இன்னும் ஒருவரும் நம் காலத்திற்க்கு வந்து யாரையும் சந்திக்கவில்லை என்று யோசித்திருக்கிருக்கீரா?

பொன்ஸ்~~Poorna said...

ராசு,
இந்தக் கேள்வி எனக்கும் அனுப்பி இருந்தீங்க.. பதில் எழுதலாம்னு புதன்கிழமை அந்த மடலை எடுத்தேன், பார்த்தால், உங்க கட்டுரையே வந்துடுச்சு தமிழோவியத்தில்.. உடனே கொஞ்சம் தள்ளி நின்னுகிட்டிருந்த நம்ப சோம்பேறித்தனம் திரும்பி வந்துடுச்சு..

அதான்.. நானே இது பத்தி தனிப் பதிவு போடலாம்னு நினைச்சிகிட்டிருக்கேன்..

//உங்களுக்கு கிடைக்கும் பதிலால் உங்கள் வாழ்க்கைப் பாதை மாறியிருக்குமா?
//
எந்த நிலையிலும் கிடைக்கும் பல செய்திகள், நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.. அது எப்போது, எப்படிப் பட்ட விஷயமாக இருந்தாலும்..

G.Ragavan said...

அறிவியல்படி இப்படி நடக்க முடியுமான்னு யோசிக்கிறத விட்டுட்டு இப்படி நடந்தா என்ன செஞ்சிருப்போம்னு மட்டும் யோசிப்போம்.

1. சின்ன ராகவனப் பாத்தா, "டேய், ஒழுங்காப் படி, ரொம்ப வம்பு பண்ணாத, அப்பா, அம்மா குடும்பத்தார் கிட்ட ரொம்பப் பேசு, ஒனக்கு என்ன வேணும்னு தெளிவா இருந்து அதுக்கான வழியப் பாரு"ன்னு சொல்லீருப்பேன்.

2. பெரிய ராகவனப் பாத்தா..."இதுவரைக்கும் வாழ்க்கை நிம்மதியா இருந்ததா? நீ உருவாக்கனும்னு நெனச்ச மருத்துவ மையம் என்னாச்சு?"ன்னு கேட்டிருப்பேன்.

ராசுக்குட்டி said...

வெட்டி -> என்னது ஆபிஸ்-ல பொண்ணுங்க இல்லயா... ஓ so Sad
அதுனாலதான் உங்க எழுத்துல இவ்ளோ ஃபீலிங்ஸ்-ஆ

முரட்டுக்காளை -> கால "மச்சினி"யா ஒரு மார்க்கமாத்தான்யா இருக்கிங்க
//வரும் பெரியவரும் தலையில் அடித்துக் கொண்டே இதே அறிவுரை கொடுப்பாராயிருக்கும்.// முடிவே பண்ணியாச்சா

ராசுக்குட்டி said...

//தள்ளி நின்னுகிட்டிருந்த நம்ப சோம்பேறித்தனம் திரும்பி வந்துடுச்சு..

அதான்.. நானே இது பத்தி தனிப் பதிவு போடலாம்னு நினைச்சிகிட்டிருக்கேன்..//

பொன்ஸ் -> சரிதான் நடத்துங்க... போட்டதும் சொல்லுங்க ஓடியாறேன்

ஜிரா -> ஆமா நிறைய யோசிச்சா இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது எண்ணங்கள் வேறு திசையில் பயணிக்க ஆரம்பிச்சுடும்,

//நீ உருவாக்கனும்னு நெனச்ச மருத்துவ மையம் என்னாச்சு?"ன்னு கேட்டிருப்பேன்//

நல்ல நோக்கம்தான்... வாழ்த்துக்கள்

ரவி said...

நல்ல பதிவு, நன்றி....!

ராசுக்குட்டி said...

என்ன ரவி... அவ்ளோதானா... உங்கள் பதில் எங்கே??

Anu said...

rasu
ellarayum kelvi mattumdan keppingala
what is your answer for the question

ராசுக்குட்டி said...

அனிதா -> பதில்தானே தமிழோவியக் கட்டுரையில் உதாரணங்களாக தந்திருக்கிறேனே அதான் எதுக்கு ரிப்பீட்டுனு விட்டுட்டேன்! ;-)

இரா. வசந்த குமார். said...

அண்ணன் ராசுக்குட்டிக்கு முதலில் வாழ்த்துக்கள்.. அப்புறம் உங்க படைப்புகள் எல்லாம் பார்த்திட்டு தான நாம பதிவு உலகத்துக்கு வந்ததே... ரொம்ப நன்றி உங்க வருகைக்கு.. ஆமா, என்ன உங்க கணக்கை இன்னும் ஆரம்பிக்கலியா, இந்த மாத போட்டிக்கு....?

ராசுக்குட்டி said...

வசந்த் -> அண்ணனா? வயசாளியா ஆக்கிட்டீகளே... இந்த மாசப் போட்டிக்கு எழுதணும்... ஊருக்குப் போற குஷியில வேற இருக்கனா விடுதலையை கொண்டாடிக்கிட்டு இருக்கேன் ;-) இப்போதைக்கு!

Anonymous said...

//ஊருக்குப் போற குஷியில வேற இருக்கனா விடுதலையை கொண்டாடிக்கிட்டு இருக்கேன் ;-) இப்போதைக்கு!
//
நானும் தீபாவளிக்கு ஊரிலே தான் இருப்பேன் ராசுக்குட்டி ! வலைப்பதிவாளர்கள் சந்திப்பு ஒன்று நடத்திடுவோமா? (பானிபூரி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுங்கிறதுக்காக ஒண்ணும் நான் இதைச் சொல்லல..!!)

ராசுக்குட்டி said...

அதுக்கென்ன முரட்டுக்காளை செஞ்சுட்டா போச்சு, நிறையப்பேர் கோவையில் இருக்காங்க மேலும் பண்டிகை காலமா இருக்றதால நிறையப்பேர் ஊருக்கு வந்திருப்பாங்க எனவே சந்திச்சுட்டா போச்சு!

Anonymous said...

ராசு, என்னொட பால்ய வயது சச்சு-வ பார்தால் திருச்சி-ல படிக்கற, அப்டியெ அண்ணா நகர்வறை போய், உன் வரும்கால மனைவிய பாத்துட்டுவா அப்டினு சொல்லி இருப்பென்.
எதிர்காலத்து சச்சு வந்தால் இப்பவாது CFA முடிச்சுடனானு கேப்பேன்.

நாமக்கல் சிபி said...

//வெட்டி -> என்னது ஆபிஸ்-ல பொண்ணுங்க இல்லயா... ஓ so Sad
அதுனாலதான் உங்க எழுத்துல இவ்ளோ ஃபீலிங்ஸ்-ஆ//

நம்ம எழுத்துல எங்கப்பா ஃபீலிங்ஸ் இருந்துச்சு??? சந்தோஷமா இருக்கும் போது சந்தோஷமான பதிவு வரும்... ரொம்ப சந்தோஷமா இருக்கும் போது கொஞ்சம் டச்சிங்கான ஸ்டோரி வரும்...

பெங்களூர்ல அத்தனை பேர் இருந்த ஆபிஸ்லையே நம்ம ஒன்னும் கிழிக்கல... இங்க இருந்தா என்ன இல்லைனா என்ன ;)

ராசுக்குட்டி said...

சச்சு -> நியாயமான ஆசைதான், CFA அது அடுத்த மூணு மாச ஆனந்த் சொல்லிரமாட்டான்!

ராசுக்குட்டி said...

வெட்டி -> என் இனமடா நீ வசனம்தான் ஞாபகத்துக்கு வருது. எங்களுக்கெல்லாம் சந்தோஷமா இருந்து காமெடி வரும் உங்களுக்கு செண்டி வருமா... ஏதோ நல்லா இருந்தாச் சரி!