Monday, October 16, 2006

52 : வேலிகளால் கிடைக்குமா விடுதலை?

Photobucket - Video and Image Hosting

என் வீட்டுத் தோட்டத்தில்
ரோஜாச் செடியொன்று நட்டேன்
பூக்கள் தருமென்ற நம்பிக்கையோடு

படுபயங்கர கனவுகளுடன்
மூச்சு வாங்கி விழித்த தினத்தில்
மொட்டொன்று முளைத்து ஆற்றுப்படுத்தியது

குழந்தையின் இளஞ்சிவப்பு உதடாய்
மலரொன்று மலர்ந்த தினத்தில்
வேலிபோலிருந்த சுவரில்
விரிசல் விழுந்தது

முதல் பூவை சாமி பாதத்தில்
வைக்கலாம் எனப் பறிக்கையில்
"அண்ணா நான் இந்தப் பூவை எடுத்துக்கறனே"
பட்டாம்பூச்சி கண்கள் கெஞ்ச
பக்கத்துவீட்டிலிருந்தொரு சிறுமி கேட்க
மேலும் சில செங்கல்கள் உதிர்ந்தன
எங்கள் வீடுகளின் வேலியிலிருந்து.

பிறிதொரு நாளில் ஒரு ரோஜாக்கன்றை
அவளுக்கு பரிசளிக்க,
அவர்கள் வீட்டிலும்
பூத்துக் குலுங்கின பூக்கள்

முட்கள் இருந்தும், பூக்கள் குலுங்கும்
கிளைகள் இணைந்து தழுவி நின்றன
இருவர் வீட்டு வேலிகளும் தாண்டி

"உங்க சாமிக்கு எங்கவீட்டுப் பூ வைங்க"
அதே பட்டாம்பூச்சி தேனாய் சொன்னதில்
இருவர் வீட்டு வேலிகளும் இடித்துவிட்டு
ரோஜாவனமொன்று அமைக்கலாம் என
கனவு கண்டிருந்தேன், குயில் இசையோடு!

யாரோ ஒருவர் பூப்பறிக்கையில்
கவனக்குறைவில் முள்ளொன்று பாய
காரணம் தேடி ஆரம்பித்தது யுத்தம்

வேலிகள் தாண்டி செடிகளை நாசம் செய்தோம்
வேரறுந்த செடியில்
பூக்களும், இலையும் காய்ந்து உதிர்ந்தபின்
முற்கள் மட்டுமே எஞ்சியிருந்தன

பின் வேலிகளை பழுது பார்த்து
முள் கம்பிகளும் இட்டு பலப்படுத்தினோம்

முள்வேலியால் காயம் பட்டு
மீண்டும் மூளலாம் போர்!
விடுதலை?

6 comments:

ராம்குமார் அமுதன் said...

நல்ல கவிதை....
சமூகத்தில்தான் எத்தனை எத்தனை பாகுபாடுகள்...
இன்று மாமன் மச்சான் என்று பழகிக்கிடப்பவர்கள் நாளை கொலைவெறியில் சுற்றித் திரியும் அவலம் பார்க்கிறோம்....

இவற்றிலிருந்து என்று கிடைக்கும் விடுதலை???

Anonymous said...

நிங்கள் கவிதையையும் அடுத்த கதையொட்டியே பார்க்கிறேன்... என் ரகசிய ஆசை என்னவெண்டு தெரியுமா ஒரே லங்காவாய் தமிழரும் சிங்களவரும் இருக்கணுமென்டு நினைக்கிறன்... கவிதையிலேயே வெளிச்சொன்னது போல் வேலிகளால் விடுதலை கிடைக்காது... போர்தான் மூளும் மீண்டும் மீண்டும்...

ராசுக்குட்டி said...

வருகைக்கு நன்றி அமுதன்... சுயநலமும் கண்மூடித்தனமான கோபமும் இவற்றை செய்து முடித்துவிடுகின்றன...

ராசுக்குட்டி said...

நானும் போராளிதான் -> உண்மையாகவே உங்களுக்கு இந்த ஆசை இருக்கிறதா? நானிப்போது கலவையான உணர்ச்சிகளில் இருக்கிறேன்... இலங்கை பற்றி எனக்கு ஊடகங்கள் வாயிலாக கிடைக்கும் தகவல்கள்தான்... உண்மை நிலைகளை, அல்லது உணர்வுகளை நீங்கள் எழுதலாமே!

Anonymous said...

ஏய் போராளியே நீ இலங்கைத் தமிழனாக இருக்க வாய்ப்பே இல்லை... தைரியமிருந்தால் உன் உண்மை முகம் காட்டு!

Anonymous said...

//ஏய் போராளியே நீ இலங்கைத் தமிழனாக இருக்க வாய்ப்பே இல்லை... தைரியமிருந்தால் உன் உண்மை முகம் காட்டு! //

அனானியாய் வந்துவிட்டு இந்தக்கேள்வி கேட்க எத்துனை தகிரியம் வோண்டுமுனக்கு!