Friday, June 30, 2023

66 : சொல்லாத வார்த்தை - 3

Photobucket - Video and Image Hosting

வரமாட்டாயோவென பயந்தேன் என்றாய்
புரியாமல் புருவம் உயர்த்தினேன்

கண்கள் அழுதது போலிருந்தது
புன்னகையால் உடனே பூசி மழுப்பினாய்
இருந்தும் ஒரு துளி உருண்டோடியது

துடைக்க வந்த விரலை
தூரத்திலேயே நிறுத்தினாய்

அந்த
மௌனம் ஒரு பேரிரைச்சல்
நொடி ஓர் ஊழிக்காலம்

கைப்பை திறந்து
"என் மணப் பத்திரிக்கை" என்றாய்
வாங்கத் தயங்கிய என் கையில்
உருண்டோடியது உதிர்ந்தது

நொறுங்கிய இதயத்தில்
ஆணின் அழுகையாய்
கசிந்தது காதல்

நீ வந்து சென்றபோதெல்லாம்
பூக்கள் முளைத்த புற்கள் - இன்று
பொசுங்கிப் போயிருந்தன

ஏன் என்ற கேள்வியொன்று
நெஞ்சாங்கூட்டை தாண்ட வில்லை
வீண் என்று நினைத்தாயோ
நொடி தாண்டி, நீயங்கே இல்லை

காலடியில் ஓர் காகிதம்
என் இதயம் போலே படபடத்தது

எடுத்தேன் ; லேசாய் மலர் வாசம் கசிந்தது
பிரித்தேன் ; ஒரு கவிதை இருந்தது

உறக்கம் பறித்த காதல் பற்றி...
உன்னைத் திருடிய என்னைப் பற்றி...

(முடிந்தது!)

எப்பவோ சோகத்துல எழுதினது! இப்போ பிரிச்சு வைக்க மனசே இல்லைங்க... யாராவது இன்னும் கொஞ்சம் தொடர்ந்து 'சுபம்' போடுங்களேன்...

67 : கள்ளச்சந்தை காதல்

Photobucket - Video and Image Hosting

என் காதல் சொல்லும்வேளையில்
கண்கள் படபடக்க நாணக் கோலமிட்டு
நானும்தான் எனச் சொல்லாதே

பரவசம் கொஞ்சம் பதுக்கி வை
உற்சாகம் கொஞ்சம் ஒதுக்கி வை

பதுக்கி வைக்கும் பொருளுக்கே மதிப்பதிகம்
கள்ளச் சந்தையில் மட்டுமல்ல
காதல் விளையாட்டுக்கும் இது பொருந்தும்

எப்படிச் சுடுவான் இரவுச்சூரியன்
எனக்கும் தெரியவேண்டும்

தாடி வளர்த்து - காதல்
தாகம் மிகுந்து திரிய வேண்டும்

கண்களில் வந்துன்முகம் ஒட்டிக் கொண்டார்ப்போல்
பார்ப்பதிலெல்லாம் உன் உரு தெரியவேண்டும்

என் பகலெல்லாம் சுருங்கி
இரவுகள் நீள வேண்டும்

கசங்கிய காகிதமாய், காதல் ஜுரமேறி - உன்
காலடி வந்து வீழ்வேன்

அள்ளியணைத்துச் சொல்
கருணை பொங்க
காதலாய் என்றென்றும் வாழ்வேன்!

68 : ஒரு துளி வீரம்!


உன் கண்கள் பார்த்தே
காதல் வளர்த்த நாளெல்லாம்
கனவைப் போல் இருக்கிறதடி

என் நாவென்னும் வாளோ
கண்ணீர் குருதி பாராமல்
சுழலுவதை நிறுத்துவதில்லை

சில சமயம் பார்த்தபின்னும்

உன் கோபக் கண்களில் புன்னகை கீற்றொன்றை
காண்பதற்கு கோமாளியாய் வேஷமிட்டிருக்கிறேன்
முன்னொரு வசந்தத்தில்

கொஞ்சமிருக்கும் உன் சுயத்தையும்
வடித்து விடும் நோக்குடனே
பாய்கிறது என் வார்த்தை அம்புகள்

உன் முகம் வாடினாலே
உருகிப் போய்
குழந்தையாய் பாவித்து
கொஞ்சியதெல்லாம் நானேதானா

ஆண்மையின் ஆணவமும் - என்
ஆளுமையின் இயலாமையும்
உறைந்து நிற்கிறது
ஒரு துளியாய்
உன் கண்ணில்