Friday, July 28, 2006

08 : வெட்டுவான் கோவில் கதை - தொடர்ச்சி

அவ்வா நேத்து சொன்னத கேட்டுட்டு வாங்க... கேட்டுட்டீங்களா அப்ப தொடருங்க...

அவ்வா... இன்னிக்கு பள்ளிக்கூடத்துல அன்னபாக்கியம் டீச்சர் ஆத்திச்சூடி சொல்லிக்குடுத்தாங்க. எனக்கு நேத்து நீங்க சொன்ன கததான் ஞாபகம் வந்துச்சு.

நீதான் நேத்து தூங்கிட்டியே... அப்புறம் எங்குட்டுகூடி ஞாபகம் வந்துச்சு உனக்கு

போங்க அவ்வா... நான் ஒன்னும் தூங்கல... நீங்கதான் கதசொல்லிகிட்டே தூங்கிட்டீங்க

அட திருட்டுக் கழுத... சரி வாத்தியாரம்மா பாடஞ்சொல்லைல ஏன் கதய நெனச்சுகிட்டு கிடந்த

அதுவா டீச்சர் பாடம் சொல்ல சொல்ல நாங்க எல்லாமா சேந்து ஒன்னா சொல்லிக்கிட்டு வந்தமா... எனக்கு கோவாலு அப்பாவோட உளி சத்தமும் கோவாலு உளி சத்தமும் ஒரே நேரத்துல வருமே... அது ஞாபகம் வந்துருச்சு...


அதுக்காக... பாடம் படிக்கும்போது வந்தது போனத பத்தியெல்லாம் யோசிச்சுகிட்டு இருக்கலாமா... அப்புறம் எப்டி மொத மார்க் வாங்குறது... இந்த ஜில்லா கலெக்டராகறது... சரி இன்னிக்கு என்ன பாடம் சொல்லிக்குடுத்தாங்க வாத்தியாரம்மா... அவ்வாவுக்கும் சொல்லேன்

அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது...

ஹூம்... ஆறுவது சினம்-னு கோவாலு அப்பங்காரனுக்கு ஒரச்சுருந்துச்சுன்னா வெட்டுவான் கோவில்னா பேர் வந்திருக்கும்...

ஆங்... அவ்வா நேத்து கதை பாதிதான் சொன்னீங்க... மிச்சத்த இப்ப சொல்லுங்க

சரி கதய சொல்றேன்... அம்மா உனக்கு பால்சோறு பிசைஞ்சுகிட்டு இருக்கா... அத அப்டியே கையோட வாங்கிட்டு வா பாப்போம்...

மருமவளே... அதுல ரெண்டு கதலி பழத்த போட்டு ஒரு துண்டு அச்சு வெல்லத்தயும் தட்டி போட்டு குடுத்து வுடு

ஓடாதல... நிதானமா நடந்து வா... கீழ போட்ரப்போற...

ம்... சமத்து புள்ளயா சாப்டுகிட்டே கதய கேப்பியாம்... கத முடிஞ்சதும் உள்ள போயி படுத்துக்கணும் இன்ன... இல்ல நாளைக்கு தடுமண் பிடிச்சுக்கும் இன்ன...

சரி அவ்வா... கதய சொல்லுங்க

ம்... ஆ.. சொல்லு... கோவாலு காலைல கிளம்பி அப்பனுக்கு பின்னாடியே போவானா... போயி கண்ணுக்கு மறைவா உக்காந்துகிட்டு அப்பன் வேலய தொடங்கினதும் அவரோட உளிசத்தத்துக்கு ஏத்தா மாதிரி இவனும் செதுக்கத் தொடங்குவான். அப்டியே தாளக்கட்டு ஒண்ணு சேந்து அடிக்கிததால அவம் அப்பனுக்கு அந்த மலைல வேறொருத்தன் வேலை செய்றான்றதே தெரியல. அவம் அம்மாக்காரியும் மத்தியானம் புருசனுக்கு கஞ்சி கொண்டு வரும்போது மொதல்ல மவன்ட்ட வருவா "ஏலேய் இப்போ உங்கப்பனுக்கு கஞ்சி கொண்டு போறேன், நீ வேலய நிறுத்திக்க, அப்பா கஞ்சி கிஞ்சி குடிச்சு, கொஞ்ச நேரம் கண்ணசருவாரு, அப்பறமேலு வேலய ஆரம்பிக்கும்போது நீயும் ஆரம்பிச்சுக்க"ன்னுட்டு போயிருவா. இப்டியே ரொம்ப காலம் எந்த பிரச்னையும் இல்லாம போய்கிட்டு இருந்துச்சு.

கோவாலு ஆளு பயங்கர சூட்டிகை. கண்ணாலே பார்த்தே தொழில் கத்துகிட்டான். அந்த பிஞ்சுப் பயலுக்கு என்ன வைராக்கியமோ தெரியல... மலையவே கொடஞ்சு நடுவுல ஒரு பெரிய பாறை உருவாக்கிட்டான். அப்றம் அதுலயே ஒரு பிள்ளையார் கோயில் செஞ்சு முடிச்சான். மேற்கூரையில கனபூதங்கள், கிண்ணரர்கள் எல்லாம் செதுக்குனான், கோபுரம் வரைக்கும் வந்துட்டான்.


அம்மாக்காரிக்கு ஒவ்வொரு சிலையையும் பார்த்து பயங்கர பெருமை. தான் புருஷன விட பெரிய சிற்பியா வருவான்னுட்டு சந்தோஷப் படுறா... கால் தரையில பாவாம நடக்குறா. ஆனா ஆத்தாளும் மகனும் ஒரு விஷயத்துல தெளிவா இருக்காங்க, மிச்சமிருக்குற ஒண்ணுரெண்டு கோபுர சிலையையும் முடிச்சுட்டுதான் அப்பன்காரன கூப்ட்டு காமிக்கிறது அப்டின்னு. இல்லன்னா கோவக்காரன்... பாதில நிறுத்திட்டா என்ன பண்றதுன்னுதான்.

கடைசி நாளும் வந்துச்சு, கோவாலு எல்லா வேலையையும் முடிச்சுட்டான். நீ கோயில் பக்கத்துல இரு நான் அப்பாவ கூப்டுகிட்டு வந்தற்ரேன்னுட்டு,
புருஷனுக்கு பிடிச்சதா சமச்செடுத்துகிட்டு, தன் மவன புருஷன் எப்டில்லாம் புகழப் போறான்னுட்டு கற்பனை பண்ணிகிட்டே போறா. போனவ, அதான் பையன் வேலையெல்லாம் முடிச்சுட்டானேன்னு, நேரா புருஷன் வேலை செய்ற இடத்துக்கு போய்டறா. அவம் கையகால கழுவி சாப்ட உக்காரவும், இவ ஒரு கவளம் சோறெடுத்து கையில உருண்டை பிடிக்கவும், ணங்-னு கோயில் மணி அடிச்ச மாதிரி ஒரு சத்தம் கேக்கு.

ஐய்யய்யோ... யாரு கோவாலுதான் பண்ணானா?

ஆமாம்ல... எப்படியும் அம்மா நம்மள பார்த்துட்டுதானே போவா அப்டின்னு இருந்தவன் கண்ணுல... கோபுரத்து மேல இருக்ற சிலை-ல ஏதோ ஒரு இடத்துல சின்ன திருத்தம் செய்யனும்-னு போனவனோட உளிச் சத்தந்தேன் அது.

கையில வாங்குன சோத்து உருண்டைய அப்டியே கீழ வச்சுட்டு என்ன சத்தம்-னு ஓடி வந்து பாக்குறான், கோவால பார்த்தவன், பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டுட்டு என்ன பண்ணிட்ருக்கங்கான்... அவம் கையில உளிய பாத்ததும் கோவம் தலைக்கேற, பக்கத்துல இருக்கற ஒரு பெரிய கல்லெடுத்து போட்டுற்ரான். அது கோவாலு தல மேல பட்டு மண்ட ஒடஞ்சுருச்சு. ஐயோ அம்மான்னு கத்தவும் பதறிப் போயி அம்மாக்காரி ஓடி வாரா...

வந்தவளுக்கு பார்த்ததும் நடந்தது எல்லாம் புரிஞ்சுறுது... அட பாவி மனுஷா இப்டி பண்ணிட்டியேன்னு மலையிலருந்து இறங்கி கோபுரத்து மேல ஏர்றா அதுக்குள்ள அவனுக்கு ரத்தம் போயி செத்தர்றான். அய்யோ இப்டி கொல பாதகம் பண்ணிட்டீரே என் மவன கொன்னவங்கூட எப்டி வாழ்வேம்ன்னுட்டு மவ(ன்) கையில இருந்த உளியால தன்ன குத்திகிட்டு அவளும் அங்கயே செத்தர்றா...

அதிர்ச்சியில இருந்த அப்பங்காரனுக்கு அப்பத்தான் ஒவ்வொண்ணா வெளங்குது... சுத்தி முத்தி அந்த கோயில பார்த்தவனுக்கு இப்டி தங்கம் பெத்த பிள்ளைய கோவத்துனால கொன்னு குடும்பத்தையே சீரழிச்சுட்டமே அப்டீன்னுட்டு மலை மேலேர்ந்து மவன் செதுக்குன கோபுரத்து மேல விழுந்து அவனும் உசுர மாச்சுக்கறான்.

புடிச்சு வச்ச சோத்து உருண்டை அப்டியே கல்லா மாறி சோத்துப்பாறையா நின்னுருச்சு

07 : வெட்டுவான் கோவில் கதை



அந்த காலத்துல எட்டையப்ப ராசா அரண்மனையில ஒரு மந்திரி இருந்தாராம், அவருக்கு அழகுபெத்த பொண்ணு ஒண்ணு இருந்துச்சாம்.

அழகுன்னா எம்புட்டு அழகு... அவ்வா?

கொள்ள அழகுடா பேராண்டி... என் ராசாவுக்கேத்த ரதி மாதிரி... சரியா... கதயக் கேளு!

ம்...

அவளுக்கு திடீர்னு பயங்கர வயித்துவலி வந்துருச்சாம்... வந்து வெத்தலக்கொடியாட்டம் இருந்த மவராசி வாடி வதங்கி சீரில்லாம போய்ட்டா...

கருப்பட்டி முட்டாய தனியா தின்னு தின்னு தண்ணிய குடிச்சுருப்பா... வீராச்சாமி டாக்டர் ஊசி போட்டாரா?

வீராச்சாமிகிட்ட ஊசி போட்டுகிட்டா... இசக்கியப்பங்கூட மருந்து மாத்திர கொடுத்தாரு அப்பயுங்... ஊங்கல.. ஆங்கல.. நோவு! எப்டியாப்பட்ட டாட்டருங்களுலாயும் குணப்படுத்த முடியலயாம் அப்போதான் ஒரு சாமியாரு வந்து இந்த பச்செலய... பத்தியமிருந்து. பத்து நாளு திங்கணும்... தின்னா நோவு தானா சரியா போகுமுன்னு சொல்லிட்டு செட்டியார் சத்திரத்துல போயி தங்கிட்டாரு.

பத்து நாக்கூட ஆகல... வெங்கலப் பானைய வெளக்கி வெச்சாப்ல பள பளன்னு எந்திரிச்சுட்டா மந்திரி மவ...

ஆங்...

ஓடுனாரு மந்திரி சத்திரத்துக்கு... கால்ல படீர்னு உழுந்து... சாமி நீங்கதாம் என் தெய்வம்...உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்னு கேக்றாரு அதுக்கு சாமி நம்ம அரமலையில ஒரு சமணப் பள்ளி கட்டணும் அதுக்கு ஒத்தாச பண்ணு-ங்கிறாரு. மந்திரியும் சரின்னு, ராசாகிட்ட உழுந்து பெறக்கி அனுமதி வாங்கிட்டு கைதேர்ந்த சிற்பி ஒருத்தர கூப்ட்டு சாமிகிட்ட... சாமி இவரு நல்ல தெறமயானவரு... இவர் உளியெடுத்து செதுக்குனா கல்லும் கண்ணசைக்கும்... காத்தும் நாவசைக்கும். இவர் சுத்தியலு சத்தத்துக்கு... நட்டுவாங்கமிதுதான்னு பறவயெல்லாம் பரதமாடும்.

ஐய்

இவர உங்க கூடவே வச்சிகிடுங்க, என்ன செய்யனுமோ சொன்னீகன்னா மனங்கோணாம செஞ்சு கொடுப்பாருன்னுட்டு அவர் போய்ட்டாரு தூரதேசத்த பாக்க.அந்த சிற்பிக்கு ஓஞ்சோட்டு பய்யன் ஒருத்தன்... கோவாலுன்னு பேரு. கோவாலு ஆத்தாக்காரிக்கு புருசனுக்கு கூடமாட ஒத்தாச பண்றதுதான் வேல. கோவாலுக்கு அப்பன மாதிரி பெரிய சிற்ப வேலயெல்லாஞ்செய்யனும்னு ஆச... ஆனா அவங்கப்பனுக்கு மவன் படிச்சு பெரிய ஜில்லா கலெக்டராகணும்னு ஆச.

அப்ப பிரதர் ஸ்கூல்லதான் சேக்கணும்... சரியாவ்வா...

ஆமாண்டா ஏஞ்ஜில்லா கலெக்டரே, அங்கதான் கொண்டு போய் சேத்தாரு, ஆனா இந்த சேட்டக்காரப் பய என்ன செஞ்சான்... பள்ளிக்கோடத்துக்கு போவாம அவம் அப்பன் பின்னாடியே போயி தூர நின்னு அப்பஞ்செதுக்குறதயே பாத்துகிட்டு நிப்பான். ஒரு நாள் அவம் அம்மாக்காரிகிட்ட போயி அம்மாம்மா நானும் சிற்பமெல்லாம் செதுக்கனும்னு பிடி-முரண்டு பிடிச்சுருக்கான். அவம் அம்மா என்ன நெனச்சாலோ தெரியல... முனையில்லா உளியையும் பிடியில்லா சுத்தியலையும் கையில குடுத்து "ஏலேய் உங்கப்பன் கண்ணுல காதுல படாம வேல செஞ்சு கத்துக்க... அவர்ட்ட மாட்டுன என்னக் கொண்ணு தலகீழ மாட்டீருவாரு"ன்னுட்டா

இவனும் காலைல கிளம்பி அப்பனுக்கு பின்னாடியே போவான்... போயி கண்ணுக்கு மறைவா உக்காந்துகிட்டு அப்பன் வேலய தொடங்கினதும் அவரோட உளிசத்தத்துக்கு ஏத்தா மாதிரி இவனும் செதுக்கத் தொடங்குவான். அப்டியே தாளக்கட்டு ஒன்னு சேந்து அடிக்கிததால அவம் அப்பனுக்கு அந்த மலைல வேறொருத்தன் வேலை செய்றான்றதே தெரியல. அவம் அம்மாக்காரியும் மத்தியானம் புருசனுக்கு கஞ்சி கொண்டு வரும்போது மொதல்ல மவன்ட்ட வருவா "ஏலேய் இப்போ உங்கப்பனுக்கு கஞ்சி கொண்டு போறேன், நீ வேலய நிறுத்திக்க, அப்பா கஞ்சி கிஞ்சி குடிச்சு, கொஞ்ச நேரம் கண்ணசருவாரு, அப்பறமேலு வேலய ஆரம்பிக்கும்போது நீயும் ஆரம்பிச்சுக்க"ன்னுட்டு போயிருவா மவராசி.

ஏலேய் ராசு என்ன தூங்கிட்டியா... ஊங்கொட்ற சத்தத்தயே காணோம்... அடப்பாவமே ஆமா... பயபுள்ளை கதசொல்லு கதசொல்லுன்னு நச்சரிக்கும் ஆனா முழுசா கேக்றதுக்குள்ள தூக்கஞ்சாமி வந்துரும். அம்மா மருமவளே... என்னப் பெத்தா... இவன உள்ள கொண்டி படுக்கப்போடு... இங்கன உள்வாசல்ல பனிகொட்டும்...புள்ளைக்கு ஆவாது. இவளே... அடி இவளே... இவளுமா தூங்கிபுட்டா...

06 : கழுகுமலைக் கள்ளன்



நான் பொறந்த ஊருங்க கழுகுமலை. அங்கல்லாம் போயி ஒரு ஆறேழு வருஷமாச்சு, அதுக்காக மறந்துருவமா என்ன... பொறந்த ஊர மறக்ற வம்சமா நானு இல்ல மறக்றா மாதிரி ஊரா அது!

அதுனாலதான் பாருங்க நேத்து வலை மேஞ்சுகிட்டு இருந்தப்போ இங்க வந்ததும் கை?! தானா நின்னுருச்சு. அதுவும் அவரோட ஒளிக்கோப்ப தட்டினா மனசு அப்டியே, BSA SLR மிதிவண்டிய மிதிச்சுகிட்டு ஞாபகம் வருதே பாடப் போயிருச்சு. பனங்காட்டு பூமிதான்னாலும் பசேர்னு கெடக்கும். சின்ன ஊர்தான் ஆனா அம்புட்டு அம்சா இருக்கும். ஊருக்கு நடுவால இருக்றதுக்கு பேர்தான் கழுகுமலை. மலைய ஒட்னாப்புல ஏகப்பட்ட கொளம் குட்ட அத சுத்தி ஊரு... அப்றம் ஊர சுத்தி மறுபடியும் மலைங்க மலைய சுத்தி மறுபடியும் கொளம் குட்டன்னு... வட்டத்துக்குள்ள வட்டம், கட்டத்துக்குள்ள கட்டம்-னு ஊரே ஒரு அமைப்பா இருக்கும்.

சித்திர, வைகாசி நல்ல வேனக்காலம் அப்பயும் அப்றம் கோடை முடிஞ்சதும் பதனீர் கிடைக்கும் பாருங்க... அதோட சுவைக்கு ஈடு இணையே கிடையாது. ஆனி, ஆடி... அடடா இப்பத்தானுங்க சீசன்! ஐயோ இப்ப மட்டும் ஊர்ல இருக்கனும், காலங்காத்தாலே எந்திரிச்சு ஒரு பெரிய தூக்குவாளிய சைக்கிள்ள மாட்டி ஒரு மிதி மிதிச்சா, வடவால இருக்ற பனங்காட்டுக்கு போயிரலாம். பனமட்டைய குவிச்சு, கொஞ்சம் குழி நுங்கையும் தோண்டி போட்டு அதுல ஒரு படி பதினிய ஊத்த ஊத்த அடிச்சமுன்னு வைங்க... மத்தியானம் வரைக்கும் சும்மா திம்முனு இருக்கும். வீட்ல இருக்றவங்களுக்கு தூக்குவாளில எடுத்துகிட்டு போறதுலயும் நமக்கு பங்கு கிடைக்கும். ஹூம் அது ஒரு வசந்த காலம்.

மகரந்தச் சேர்க்கை நடந்ததுல இன்னோரு கழுகுமலைப் பூ பூத்திருந்திருக்கிறது, அதையும் ஜான் போஸ்கோ கண்டுபுடிச்சு எழுதியிருந்தாரு. அதுல இருந்த தெப்பக்குளம் பல தேவதைக் கதைகளை ஞாபப்படுத்திருச்சு, அப்றம் எங்க தூங்க. அந்த தெப்பக்குளத்துல கிழக்கு தெச பார்த்தா மாதிரி ஒரு பசு தல (சிலைதான்) இருக்கும். நல்ல மழைக்காலத்தில் எங்கெங்கயோ கம்மாவெல்லாம் நெறஞ்சு பசுவாய்ல தண்ணிவரும் அத பாக்றதுக்கு வரும் பாருங்க கூட்டம்... மேல இருக்ற படத்துல தெரியற கல் சுவர்ல உக்காந்துகிட்டு நானும் பாலாஜி-னு நம்ம பால்ய சினேகிதன் ஒருத்தனும் உக்காந்து மணிக்கணக்கா அரட்டையடிக்றது. என்னது... எதுக்குன்னு உங்களுக்கு தெரியுமா... தெப்பக்குளத்துல தண்ணியெடுக்க வர்ற பொண்ணுங்கள நாங்க சைட் அடிப்பமா... சேச்சே நாங்கெல்லாம் நல்ல பசங்க... அப்டியெல்லாம் செஞ்சா சாமி கண்ண குத்திரும்னு எங்க பாட்டி சொல்லிதானே அனுப்பி விடுவாங்க ;)

வளவளன்னு இழுக்காம... மலையடிவாரத்துல இருக்ற முருகன் கோவில், அரைமலையில் இருக்கும் சமணர் பள்ளி, இரண்டுக்கும் இடையில் இருக்கும் சுரங்கப்பாதை, மலையுச்சி பிள்ளையார் கோவில், கழுகுமலை தேர் திருவிழா, சஷ்டி விரதம்... அது முடிஞ்சதும் வர்ற சூரசம்ஹாரம், இருக்ற-இருந்த ரெண்டு டூரிங் டாக்கீஸ், தெப்பத்துக்குள்ள இருக்ற யானைக் கவுணி, கோயில் தெருவுல இருக்ற அரண்மனை, அதுக்கு பின்னாடி இருக்ற தெருவுல படிச்ச ஹிந்தி டியூசன், பக்கத்தில இருந்த ஐஸ் கம்பெனி, மலைக்கு பின்னாடி இருக்ற 'பிரதர் ஸ்கூல்' எல்லாம் பத்தி அப்பப்ப எழுதுறேன்

அடுத்த பதிவில் எதிர்பாருங்கள் வெட்டுவான் கோவில் பற்றி வாழ்ந்துவரும் ஒரு செவிவழிக்கதை.

இப்போதைக்கு வ்வ்வ்வர்ர்ட்ட்டா....

Wednesday, July 26, 2006

05 : தோல்வியதிகாரம்



நம்ம அலுவலகத்துல சதுரங்கப் போட்டி நடக்குது. நம்மளுக்கு இந்த ராசாமார் ஆட்டம் எல்லாமே புடிக்குமுங்க (என்னது பேர்லயே ராசா இருக்றதுனாலயா... அட என்னப்பு இப்பவே உள்குத்தா?) அதனால நாமளும் பேர குடுத்துப் போட்டு செவனேன்னு ஒக்காந்திருந்தேன்.

குலுக்கல் முறையில பேர தேர்ந்தெடுக்குறேன்னு போட்டு முதல் போட்டியே நம்ம அஞ்சாநெஞ்சன் கஞ்சா கிட்ட போட்டி. நம்ம அரசியல் ஆலோசகனே அவம்தான்...அவம்ட்ட போய் எப்படி போட்டி போட. இந்த மகாபாரதத்துலகூட பார்த்திகன்னா அர்ச்சுனரு பங்காளிககூடத்தான் மோதினாரு...ஆனா இது அர்ச்சுனரும் கிச்சாவும் (கிருஷ்ணர்தேன்) மோதுனா மாதிரியாய்டுச்சு பார்த்துகிடுங்க... சரி செதறுன ரத்தத்தெல்லாம் துடைச்சுட்டு நம்ம கைப்புள்ள மாதிரி செயிச்சு வந்தா அடுத்த போட்டி நம்ம தம்பி கூட... அட போங்கடே நீங்களும் உங்க குலுக்கலும்!

எங்க ஊர்பக்கம் பாத்திகன்னா வயசு பெரிசுங்கள்ளாம் எங்கனா நிழல் கண்ட இடத்துல உக்காந்து இதத்தான் ஆடிட்ருப்பாவ... அட நமக்கே நம்ம பாட்டி சொல்லிக்குடுத்ததுதானே இந்த செஸ்...சதுரங்கமெல்லாம். எங்க ஊர்ல ஒரு ஐஸ் கம்பெனி இருந்துச்சு அதுதான் எங்க ஊர் யூத் ஜாயிண்ட். கொஞ்சம் வளர்ந்த பின்னாடி...(போங்கப்பத்தா எப்ப பார்த்தாலும் என்கிட்ட தோத்துகிட்டே இருக்கிங்க) அங்கதான் நம்ம ஆட்டமெல்லாம். எங்க சதுரங்க ஆட்டத்தோட மத்த விஷயத்தையும் கத்துக்கிடுவானோன்னு வீட்ல பயந்து மிலிட்டரி பள்ளிக்கோடத்துல கொண்டு போய் சேத்தாக... அது தனிகத நம்ம ஆட்டத்துக்கு வருவோம்.

ராசாமார் ஆட்டம்னு சொன்னம்ல, அதுல இந்த சீட்டுக்கட்டு...அப்புறம் இப்ப புதுசா Age of Empires... ஆடறதுக்கெல்லாம் நமக்கு ஆள் கிடைக்கும். ஆனா இந்த சதுரங்கம் ஆடறதுக்குமட்டும் சாமிகளா... ஆளே கெடைக்காது. அப்டிபட்ட ஆட்டத்துக்கு வராது வந்த மாமணி போல் கெடைச்சதுதான் நம்ம தம்பி வின்னரு!

போன மூணுமாசமா (மூணுமாசம்னாலே ஒரு மாதிரி இருக்கா... சரி பன்னெண்டு வாரம்னு படிச்சிக்கிடுங்க) ஷாங்காய்ல இருந்தம்லா அப்ப தம்பிதான் நம்ம சேக்காளி... அலுவலகம் முடிஞ்சதும் முதல்ல ஒரு செஸ் ஆட்டம் அப்புறம்தான் மத்த சேட்டை. சும்மா சொல்லக்கூடாதுங்க நல்ல ஆட்டக்காரரு... தோல்வி வெற்றியெல்லாம் மீறி ஆட்டம் எப்பவுமே சுவாரசியமா இருக்கும். அப்டிபட்ட ஆள்ட்ட ஆட சொல்லிபுட்டாய்ங்க.

சரி கழுதை... காசா பணமா ஆடிப்பாப்போமுன்னா... உக்காந்ததுலேர்ந்து ஒரே அடி! எவ்வளவு நேரம்தான் ஜெயிக்கப்போறா மாதிரியே உக்காந்துருக்றது... கடைசில தோத்துப்போட்டேன். நக்கல் புடிச்ச ஆளு வெளியில வந்ததும் கேக்றார்யா... 'ஏண்ணே வேணும்னுதானே தோத்துபுட்டிங்க'.


தோல்வியும் வெற்றி இடத்து... குறை
வில்லா சந்தோஷம் தருமெனின்.



அப்டின்னு நமக்கு கொஞ்சம் சந்தோஷமா இருந்தாலும்...

கைப்புள்ள மாதிரி நமக்கு அளுவ அளுவயா வருது... இன்னுமா இந்த ஊர் நம்மள நம்பிகிட்ருக்குன்னு! நமக்கு தோத்ததுல ஒரே வருத்தம்தாங்க... இனி இந்த ஆட்டத்த ஆடறதுக்கு ஆள்கிடைக்க ஒரு மாமாங்கமாயிடும்.

காத்திருப்பேன் அதுவரைக்கும்
இப்போதைக்கு வ்வ்வ்வர்ட்ட்ட்டா...

Sunday, July 23, 2006

04 : உதிர்ந்த சிறகும்... ஒட்டிய வண்ணமும்!

முன்குறிப்பு : பயணக்கட்டுரைகள் பிரிதொரு சமயம்... இப்போதைக்கு ஒரு சிறுகதை?!

இன்றல்லவே உன்னை முதன்முதல் பார்ப்பது. உன் புன்னகையில் சினேகம் தோன்றிய தினம் நிச்சயம் இன்றல்ல. உன் வார்த்தைகளில் இந்த வாத்சல்யம் வெகுகாலமாகவே இருந்திருக்க வேண்டும். உன் பேச்சில் உள்ளர்த்தத்தோடு எனக்கான செய்தி எப்போதுமே பொதிந்திருக்கிறது.

சமீபகாலமாக என் மனதின் நிரப்பப்படாத சில பள்ளங்களில் கருமுட்டைகள் தென்படுகின்றன. உன் துப்பட்டா உரசல்களாலும், சிற்சில பிரத்யேகமான சந்திப்புகளாலும், அச்சமயங்களில் நேர்ந்த உணர்வு பகிர்தலாலும் இஃது நேர்ந்திருக்கலாம்.


என் மனதை அரித்துத்தின்று உன் நினைவுகள் வளர்கின்றன. சீக்கிரமே உன்னிடம் வந்து என் மனம் காணாமல் போயிற்று எனலாம், எந்த சுவடுமே இன்றி என் மனதை அவ்வளவு விரைவாக தின்று தீர்க்கின்றன உன் நினைவுகள்.

நிரப்பப்படாத என் மனதின் பள்ளங்களை உன் வருகை நிரப்பும் என்று எண்ணியிருந்தேன். என் மனமிருந்த இடத்தையே பள்ளமாக்கும் விஷயம் வெகு தாமதமாகவே உறைத்தது எனக்கு. காலம் கடந்து விட்டதடி இப்போது, உன் நினைவு என்னில் நீக்கமற நிறைந்து விட்டது. பேச்சு வெகுவாய் குறைந்து போயிற்று நம்மிடையே, பார்வை பரிமாறிவிடுகிறது எண்ணங்களை.


என் கவிதைகளையெல்லாம் தின்று வளர்ந்தன உன் நினைவுகள் காதலாய். பார்வைப் பரிமாறல், புரிதல் எல்லாம் சரி. ஆனால் புரிந்துகொண்டவை எல்லாம் சரியா, தவறா? எச்சில் கூட்டி, எச்சில் விழுங்கி, எச்சில் விழுங்கி தயக்கக்கூடு எனைச் சூழ்கிறது. உன்னிடம் நான் சொல்லாத வார்த்தைகளெல்லாம் ஒன்று சேர்ந்து எனை மிரட்டுகின்றன.

உன் கண்களுக்கு சூரியப் பிரகாசம் வந்து விட்டதாய், கண்கள் காணவே தயங்குகிறேன். உன் கொலுசொலி கேட்டால் என் ஜீவன் பதறுகிறது.

உன்னை சந்திக்க வேண்டுமென்ற ஆவலில் இரவெல்லாம் தூங்காது விடியலுக்கு முன்னே எழுந்து வருவேன். உனை சந்திக்குமந்த நிமிடத்திலோ வியர்த்து நிற்பேன்.


நண்பர்கள் தவிர்த்து என் தனிமைக் கூட்டில் இருக்கையில் நம் காதல் விசுபரூபமெடுத்தது, தகதகவென தங்கச் சிறகுகளும் முளைத்ததடி அதற்கு. தயக்கக்கூடுடையும் சீக்கிரமே, என் காதல் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு உன் முன்னே வந்து நிற்கும். எக்கணமும் நேரலாம் இந்த இனிய விபத்து, தயாராய் இரு, அவ்வளவே!

காதல் வளர்வது இவ்விதம் என்றால், காதல் வெளிப்படுத்துதல் வண்ணத்துப் பூச்சியொன்றை பிடிக்கும் அனுபவத்திற்கு சமம். எப்படியென்கிறீர்களா...

வேறெதிலோ உன் கவனம் தோய்ந்திருக்கும், உன் முன்னே வந்து தன் அழகு காட்டி தூரப்பறக்கும். பிடிக்க நினைத்து களத்தில் இறங்கினாயோ தீர்ந்தாய்.

உன்னை சலனப்படுத்திய சிந்தனை ஏதுமின்றி கைக்கெட்டும் கிளையொன்றில் அமரும்.
அருகில் செல்வாய்... உயரப் பறந்து உச்சிக் கிளையமரும்.
அங்குமிங்கும் அலைக்கழிக்கும்...
சலித்துப்போய் வந்தமர்வாய்... உனை உரசிக் கொண்டு பின்னாடியே வந்து நிற்கும்.
பிடித்தேயாக வேண்டுமென்று ஆசை மறுபடியும் துளிர்க்கும்.

அது போலத்தான் அகம் உரைத்தலும். காதல் சொல்ல தக்க தருணம் பார்த்து நிற்பாய், தனிமை கிட்டாவண்ணம் அலைக்கழிக்கும் நண்பர் குலாம். தனிமை கிட்டும்போதோ தைரியம் பறந்து போய் உச்சிக் கிளையமர்ந்து கொள்ளும். ஏதேதோ உளறிக் கொட்டி மீள்வாய்.

சொல்லாக் காதலுடன் சொர்க்கமே போனாலும், நரகம்தான் என்று அலுத்துக் கொண்டு வந்தமர்வாய். "வேறேதோ சொல்லனும்னு வந்த போல... என்ன விஷயம்" என்று பின்னாடியே வருவாள். உச்சிக் கிளையமர்ந்த தைரியம் வந்து ஒட்டிக் கொள்ள மறுக்கும். மேலண்ணத்தில் நாக்கு ஒட்டிக் கொள்ள, தலையசைத்து இல்லையென்று அவ்விடம் நீங்குவாய்.

அசாத்திய பொறுமை, நிதானம், விடாமுயற்சி மற்றும் கொஞ்சம் தைரியம், காதல் வெளிப்படுத்த தேவைப்படுவன இவை. இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையோடு அணுக கெஞ்சிற்று, என்னிதயம் குத்திக் கிழித்த ரணம் ஒன்று. சூடான ரத்தம் கொப்புளித்துக் கொண்டு இன்றும் ஆறாமல் இருக்கும் அந்த
ம்...

வண்ணத்துப்பூச்சியின் வளர்ச்சி பற்றி வகுப்பெடுத்து முடித்த அறிவியல் ஆசிரியர் ஆறுமுகம், மறுநாள் வகுப்புக்கு வண்ணத்துப் பூச்சியொன்றை பிடித்து நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி, பாகம் குறித்து வரச் சொன்னார்.

மறுநாள் எல்லா நோட்டுப் புத்தகங்களும் அவரவர் மேஜை மேல் பிரித்து வைக்கப் பட்டிருந்தது. முன் வரிசையிலிருந்து ஒவ்வோர் நோட்டுப்புத்தகமாக பார்த்து வந்தவர், மலர்விழியின் அருகில் வந்ததும் நின்றார். "எந்திரி" என்றார் அதட்டும் குரலில், நடுங்கியபடியே எழுந்து நின்றாள் அவள். "என்ன இது?" கேள்விக்கே மிரண்டு பின் வாங்கினாள். அவர் காண்பித்த நோட்டில் ஒரு வண்ணத்துப் பூச்சியின் படம் அழகாக வரையப்பட்டு பாகம் குறிக்கப்பட்டு இருந்தது.

"கைய நீட்டு", என பிரம்பை கையிலெடுத்தார். புறங்கையில் நட் நட்டென்று... ஒவ்வோர் அடிக்கும், கை உதறி, தொடை நடுவே வைத்து, கண்களில் நீர் தேக்கி பின்னும் கை நீட்டும் துடிப்பில் ஏதோவொன்று என் மனசு பிசைந்தது.

என் வீடு இருக்கும் அதே தெருவில்தான் மலர்விழியின் வீடும். மதிய இடைவேளையின் போது, "பட்டாம்பூச்சி புடிக்க தெர்லன்னா என்னை கேட்டுருக்கலாம்ல" என்றேன் கொஞ்சம் கழிவிரக்கத்துடன்.

"இல்லடா... புடிச்சேன், ஆனா கொன்னு நோட்ல ஒட்ட மனசே வரல அதான்... அழகாதானேடா வரஞ்சுருக்கேன் நீயே பார்" என்றாள். சிவந்து லேசாக வீங்கிய புறங்கையில் ஊதி, "வலிக்குதா" எனக் கேட்கையில் என் கண்ணீல் துளிர்த்த கண்ணீரின் காரணம் இன்றுவரை எனக்கு விளங்கவில்லை.

நான் வண்ணத்துப்பூச்சி பிடிக்கையில் உதிர்ந்த சிறகும், என் விரலில் ஒட்டிய வண்ணமும் நினைவுக்கு வந்து இம்சித்தன. நான் கொன்ற வண்ணத்துப் பூச்சிக்கு அவளிடம்தான் மன்னிப்புக் கேட்டேன். பிராயச்சித்தமாய் என் வீட்டுத் தோட்டத்தில் மேலும் ஒரு ரோஜாச்செடி நட்டு வளர்க்கச் சொன்னாள்.

இயற்கை ரசிக்க, உயிர்களிடத்தில் அன்பு செய்ய, கருணை வழிய, கவிதை பொழிய எனக்கு கற்றுத் தந்தாள் மலர்விழி. தவளை அறுப்பதை தவிர்க்கவே உயிரியல் தவிர்த்து கணிணியல் பயின்றோம். பள்ளி இறுதியாண்டு வரை அவளின் அருகாமை சாத்தியப்பட்டது. பட்டப்படிப்பு படிக்க அவள் சென்னை செல்ல, பக்கத்து ஊர் கல்லூரிக்கு நான் சென்றேன். தீபாவளி, பொங்கல், கல்லூரி விடுமுறை மாதங்கள் மலர்விழி வரவால் இன்னும் விசேஷமாகும்.

கறுப்பு செய்தியுடன் விடிந்த அந்த நாளை எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவள் மரணச் செய்தி கேட்டு ஊரே துடித்துப்போனது. ஈவ் டீசிங் என்றார்கள். ஆணினமாய் பிறந்ததற்கு முதன்முதலாய் வெட்கினேன். அவள் சிறகு பிய்த்தவனை கொன்று விட மனது துடித்தது. ஜெயிலுக்கே சென்றேன் அந்த மிருகத்தை சந்திக்க.

"நான் அவளை மனசார காதலிச்சேன் சார்... அவளுக்கு என்னை பிடிக்கல, எனக்கு அவள விட மனசில்ல... தொடர்ந்து துரத்தினேன்... விட்ருக்கனும் சார்... பிடிக்கலன்ன உடனே விட்ருக்கனும்... தப்பு பண்ணிட்டேன். எனக்கு மன்னிப்பு உண்டா, அவகூட பழகுன ஒவ்வோர்த்தர்ட்டயும் மன்னிப்பு கேட்கனும்... எங்க எங்கம்மாவே என்னை மன்னிக்க மாட்டேன்னுட்டாங்க... நீங்களாவது மன்னிப்பீங்களா" என்று அழுதான். ஜெயில் வாழ்க்கை அவனை ஞானியாக்கி விடலாம். எனினும் முடியும்போது ஒரு ரோஜாச்செடி வளர்க்கச் சொல்லி வந்தேன்.

ஆறாத அந்த காயத்தின் எச்சரிக்கையுணர்வையும் மீறி என்னுள் காதல் வளர்ந்து விட்டது. என் தயக்கங்களை துடைத்தெறிய நான் தயார். எனினும் வண்ணத்துப்பூச்சி பிடிக்க எனக்கு மனதில்லை. உதிர்ந்த சிறகையோ ஒட்டிய வண்ணத்தையோ காண எனக்கு சக்தியில்லை. ரோஜாச் செடியொன்று கணக்கை நேர் செய்துவிடும் என்றெனக்கு தோன்றவில்லை.

என் கையில் மலருடன் காதல் சொல்லி காத்திருப்பேன். எனைப் பிடிக்குமாயின் வந்து காதல் தேன் அருந்து அல்லது உதிராத உன் வண்ணச் சிறகுடன் என்னைக் கடந்து போ.

Sunday, July 09, 2006

03 : எனக்கும் ஒரு இடம் உண்டு!

கடந்த மூன்று மாதங்களாக ஷாங்காய் நகரில் வாசம். வலைப்பூக்கள் அறிமுகமானது அப்போதுதான், அலுவலகத்தில் எந்த மென்பொருளையும் இறக்கி பயன்படுத்த முடியாது. வெளியே எல்லா இடங்களிலும் சீன மொழியிலேயே கணிணிகள் பயன்பாட்டில் இருக்கும். Yes, no, back, next, Install எல்லாமே சீன மொழியில்தான், எனவே கட்டிப்போட்ட மாதிரி இருந்தது. தமிழில்தான் பின்னூட்டமிடவேண்டுமென்ற வைராக்கியத்தில் வலைப்பூக்களில் பின்னூட்டமிட்டது கூட இல்லை.

எனவேதான் ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக எ-கலப்பையை இறக்கி உடனே ஒரு வலைப்பூ துவங்கியாயிற்று. பேரன்புமிக்க உங்களின் பேராதரவு கிடைத்தால் இன்னும் நிறைய எழுதுவேன்.

அடுத்த கட்டமாக என் சீன பயணக் குறிப்புகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வேன். புகைப்படங்களை கணிணியில் ஏற்ற தாமதமாகிறது அவ்வளவே!

சீக்கிரமே சந்திக்கிறேன்... இப்போதைக்கு வ்வ்வர்ர்ர்ட்ட்டா!

02 : Sunday-ன்னா ரெண்டு!

தமிழ் கூறும் நல்லுலகில் நானும் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சாச்சு! தமிழ்மணத் திரட்டியில் பதியலாமென்றால் குறைந்தது மூன்று பதிவுகள் செய்ய வேண்டுமாமே...

கணக்கை ஆரம்பிக்கலாமென்று பார்த்தால் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இரண்டு பதிவுகள் வேறு வேண்டும். சரி வலைப்பூக்கள் எனக்கு அறிமுகம் ஆனதைப் பற்றி கொஞ்சம் கதைப்போம்.

தேசிகனின் வலைப்பூதான் முதல் அறிமுகம்... தலைவர் சுஜாதா-வின் படைப்புகளை படிக்க போய் அப்படியே தேசிகனின் எழுத்துக்களையும் படித்து சிலாகித்தேன். சுஜாதாவின் சாயலில் நல்ல ஓட்டமுடைய எழுத்து அவருடையது.
சுட்டி - http://www.desikan.com/blogcms/

சங்கிலித் தொடரில் பினாத்தலார் பக்கங்களில் பார்வை பட... அவருடைய எழுத்துக்களில் இருந்த நையாண்டி எனை வெகுவாக ஈர்த்தது. பொதுவாக என் மனசு தங்கம்... ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்-னு அவர் ஒவ்வொரு போட்டிகளிலும் ஃகெலிப்பதை பார்ப்பதே சந்தோசமான அனுபவம். தேர்தல் நேரத்து படங்கள் சி(ரி)றப்பு கவனம் பெற்றவை.
சுட்டி - http://www.penathal.blogspot.com/

அடுத்து குடுமியெல்லாம் வளர்த்து படித்தது "சாத்தான்"குளத்து வேதம். அடிப்படையில் நெல்லைவாசியான நான் 'நல்லா இருங்கடே'-வுக்கு ரசிகனாகவே மாறிப்போனேன். அவரோட 'கவுஜ' சங்கத்துக்கு வெளியில் இருந்து நம்ம ஆதரவு எப்போதும் உண்டு. படிக்க ஆரம்பிக்கும்போதே ஒரு புன்முறுவலை ஒட்ட வைத்துவிடும் எழுத்து ஆசாத்துடையது.
சுட்டி - http://www.asifmeeran.blogspot.com/

தேடலில் அடுத்து வந்து இளைப்பாறியது ஹரன்பிரசன்னாவின் நிழல்களில். நிறைய கவிதைகள் தலைக்கு மேலே பறந்தாலும். கதைகள் கட்டுரைகளிலும் கவிதை வாசனை வீசும் இலக்கிய படைப்புகளுக்கு சொந்தக்காரர்.
சுட்டி - http://www.nizhalkal.blogspot.com/

கொங்கு வாசம் வீசும் எழுத்துக்கு...
நல்ல பாடல் பதிவுகளுக்கு...
கோயம்புத்தூர் குசும்பை ரசிக்க... பொள்ளாச்சிக்கார 'கொங்கு' ராசபார்வை!
கவுண்டர் காமெடியை ரசிக்காத ஆள் இருக்காங்களா என்ன?
சுட்டி - http://www.raasaa.blogspot.com/

ஆணை ஆணை அழகர் ஆணையின் அழகான நடை...
கதை, கட்டுரை, கவிதையிலும் நையாண்டி கலந்த நல்ல நடை!
மட்டுறுத்தல் பற்றி தொழில்நுட்ப ரீதியிலும் ஆழமாக அலசுகிறார்கள்.
வ.வா.சங்கத்திலும் உறுப்பினராம்
சுட்டி - http://poonspakkangkal.blogspot.com/

தோடா... தமிழ்மணத்தில் பார்த்தால் தெரியபோகுது, இல்ல இங்க சுட்டினா தெரியபோகுது. நீயே புச்சு... இங்க வலைப்பூவிலே பழம் தின்னு கொட்டைபோட்டவங்கள ஏதோ அறிமுகப்படுத்தற மாதிரி அல்ட்டிக்கற அப்டீன்றீங்களா... இந்த வலைப்பூவுக்கு நானும் புதுசு என் நண்பர்களும் புதுசு அதான் நான் ரசிச்ச விஷயங்களை இங்க பகிர்ந்துகிட்டேன். மேலே சுட்டின யார்கிட்டயும் அனுமதியும் வாங்கல... இதெல்லாம் தப்புன்னா பின்னூட்டத்தில் பின்னியெடுங்கள் அல்லது தனிமடலிலும் தாளிக்கலாம்!

அதுவரைக்கும் வ்வ்வ்வர்ர்ர்ட்ட்டா!

Saturday, July 08, 2006

01 : வணக்கமுங்க... வணக்கம்

தமிழில் எழுதுற சந்தோசமே தனிதான்... அதுவும் எ-கலப்பை மாதிரி எளிமைபடுத்திபுட்டா எழுதுறதுக்கு யாருக்கு கசக்கும், அதான் நானும் வருவேன் ஆட்டய கலைப்பேன்னு வலைப்பூ உலகத்துக்கு வந்துபுட்டேன்!

வந்துட்ட சரி... என்ன எழுதி கிழிக்க போறன்னு கேக்கீக! இப்பதான் கலப்பய புடிச்சி உழுதுட்டா எல்லாமே 'எளக்கியம்'னுதாங்கல்லா... ஆனா நம்ம அந்த காலத்து (1990) ஆறாங்கிளாஸ். அதுனால நம்ம எழுத்துல இலக்கியத்த விடுங்க 'எளக்கியம்' கூட இருகாதுங்க அதுக்கு நான் உத்தரவாதம்!

எனக்கு கொலை செய்வதற்கு நேரம் இருப்பதால் எழுதுகிறேன்... உங்களுக்கும் நேரத்தை கொலை செய்ய ஆசை இருந்தால் மட்டுமே படிக்க சிபாரிசிக்கிறேன்!

இப்போதைக்கு வ்வ்வ்வர்ட்ட்ட்டா...