Friday, July 28, 2006

08 : வெட்டுவான் கோவில் கதை - தொடர்ச்சி

அவ்வா நேத்து சொன்னத கேட்டுட்டு வாங்க... கேட்டுட்டீங்களா அப்ப தொடருங்க...

அவ்வா... இன்னிக்கு பள்ளிக்கூடத்துல அன்னபாக்கியம் டீச்சர் ஆத்திச்சூடி சொல்லிக்குடுத்தாங்க. எனக்கு நேத்து நீங்க சொன்ன கததான் ஞாபகம் வந்துச்சு.

நீதான் நேத்து தூங்கிட்டியே... அப்புறம் எங்குட்டுகூடி ஞாபகம் வந்துச்சு உனக்கு

போங்க அவ்வா... நான் ஒன்னும் தூங்கல... நீங்கதான் கதசொல்லிகிட்டே தூங்கிட்டீங்க

அட திருட்டுக் கழுத... சரி வாத்தியாரம்மா பாடஞ்சொல்லைல ஏன் கதய நெனச்சுகிட்டு கிடந்த

அதுவா டீச்சர் பாடம் சொல்ல சொல்ல நாங்க எல்லாமா சேந்து ஒன்னா சொல்லிக்கிட்டு வந்தமா... எனக்கு கோவாலு அப்பாவோட உளி சத்தமும் கோவாலு உளி சத்தமும் ஒரே நேரத்துல வருமே... அது ஞாபகம் வந்துருச்சு...


அதுக்காக... பாடம் படிக்கும்போது வந்தது போனத பத்தியெல்லாம் யோசிச்சுகிட்டு இருக்கலாமா... அப்புறம் எப்டி மொத மார்க் வாங்குறது... இந்த ஜில்லா கலெக்டராகறது... சரி இன்னிக்கு என்ன பாடம் சொல்லிக்குடுத்தாங்க வாத்தியாரம்மா... அவ்வாவுக்கும் சொல்லேன்

அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது...

ஹூம்... ஆறுவது சினம்-னு கோவாலு அப்பங்காரனுக்கு ஒரச்சுருந்துச்சுன்னா வெட்டுவான் கோவில்னா பேர் வந்திருக்கும்...

ஆங்... அவ்வா நேத்து கதை பாதிதான் சொன்னீங்க... மிச்சத்த இப்ப சொல்லுங்க

சரி கதய சொல்றேன்... அம்மா உனக்கு பால்சோறு பிசைஞ்சுகிட்டு இருக்கா... அத அப்டியே கையோட வாங்கிட்டு வா பாப்போம்...

மருமவளே... அதுல ரெண்டு கதலி பழத்த போட்டு ஒரு துண்டு அச்சு வெல்லத்தயும் தட்டி போட்டு குடுத்து வுடு

ஓடாதல... நிதானமா நடந்து வா... கீழ போட்ரப்போற...

ம்... சமத்து புள்ளயா சாப்டுகிட்டே கதய கேப்பியாம்... கத முடிஞ்சதும் உள்ள போயி படுத்துக்கணும் இன்ன... இல்ல நாளைக்கு தடுமண் பிடிச்சுக்கும் இன்ன...

சரி அவ்வா... கதய சொல்லுங்க

ம்... ஆ.. சொல்லு... கோவாலு காலைல கிளம்பி அப்பனுக்கு பின்னாடியே போவானா... போயி கண்ணுக்கு மறைவா உக்காந்துகிட்டு அப்பன் வேலய தொடங்கினதும் அவரோட உளிசத்தத்துக்கு ஏத்தா மாதிரி இவனும் செதுக்கத் தொடங்குவான். அப்டியே தாளக்கட்டு ஒண்ணு சேந்து அடிக்கிததால அவம் அப்பனுக்கு அந்த மலைல வேறொருத்தன் வேலை செய்றான்றதே தெரியல. அவம் அம்மாக்காரியும் மத்தியானம் புருசனுக்கு கஞ்சி கொண்டு வரும்போது மொதல்ல மவன்ட்ட வருவா "ஏலேய் இப்போ உங்கப்பனுக்கு கஞ்சி கொண்டு போறேன், நீ வேலய நிறுத்திக்க, அப்பா கஞ்சி கிஞ்சி குடிச்சு, கொஞ்ச நேரம் கண்ணசருவாரு, அப்பறமேலு வேலய ஆரம்பிக்கும்போது நீயும் ஆரம்பிச்சுக்க"ன்னுட்டு போயிருவா. இப்டியே ரொம்ப காலம் எந்த பிரச்னையும் இல்லாம போய்கிட்டு இருந்துச்சு.

கோவாலு ஆளு பயங்கர சூட்டிகை. கண்ணாலே பார்த்தே தொழில் கத்துகிட்டான். அந்த பிஞ்சுப் பயலுக்கு என்ன வைராக்கியமோ தெரியல... மலையவே கொடஞ்சு நடுவுல ஒரு பெரிய பாறை உருவாக்கிட்டான். அப்றம் அதுலயே ஒரு பிள்ளையார் கோயில் செஞ்சு முடிச்சான். மேற்கூரையில கனபூதங்கள், கிண்ணரர்கள் எல்லாம் செதுக்குனான், கோபுரம் வரைக்கும் வந்துட்டான்.


அம்மாக்காரிக்கு ஒவ்வொரு சிலையையும் பார்த்து பயங்கர பெருமை. தான் புருஷன விட பெரிய சிற்பியா வருவான்னுட்டு சந்தோஷப் படுறா... கால் தரையில பாவாம நடக்குறா. ஆனா ஆத்தாளும் மகனும் ஒரு விஷயத்துல தெளிவா இருக்காங்க, மிச்சமிருக்குற ஒண்ணுரெண்டு கோபுர சிலையையும் முடிச்சுட்டுதான் அப்பன்காரன கூப்ட்டு காமிக்கிறது அப்டின்னு. இல்லன்னா கோவக்காரன்... பாதில நிறுத்திட்டா என்ன பண்றதுன்னுதான்.

கடைசி நாளும் வந்துச்சு, கோவாலு எல்லா வேலையையும் முடிச்சுட்டான். நீ கோயில் பக்கத்துல இரு நான் அப்பாவ கூப்டுகிட்டு வந்தற்ரேன்னுட்டு,
புருஷனுக்கு பிடிச்சதா சமச்செடுத்துகிட்டு, தன் மவன புருஷன் எப்டில்லாம் புகழப் போறான்னுட்டு கற்பனை பண்ணிகிட்டே போறா. போனவ, அதான் பையன் வேலையெல்லாம் முடிச்சுட்டானேன்னு, நேரா புருஷன் வேலை செய்ற இடத்துக்கு போய்டறா. அவம் கையகால கழுவி சாப்ட உக்காரவும், இவ ஒரு கவளம் சோறெடுத்து கையில உருண்டை பிடிக்கவும், ணங்-னு கோயில் மணி அடிச்ச மாதிரி ஒரு சத்தம் கேக்கு.

ஐய்யய்யோ... யாரு கோவாலுதான் பண்ணானா?

ஆமாம்ல... எப்படியும் அம்மா நம்மள பார்த்துட்டுதானே போவா அப்டின்னு இருந்தவன் கண்ணுல... கோபுரத்து மேல இருக்ற சிலை-ல ஏதோ ஒரு இடத்துல சின்ன திருத்தம் செய்யனும்-னு போனவனோட உளிச் சத்தந்தேன் அது.

கையில வாங்குன சோத்து உருண்டைய அப்டியே கீழ வச்சுட்டு என்ன சத்தம்-னு ஓடி வந்து பாக்குறான், கோவால பார்த்தவன், பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டுட்டு என்ன பண்ணிட்ருக்கங்கான்... அவம் கையில உளிய பாத்ததும் கோவம் தலைக்கேற, பக்கத்துல இருக்கற ஒரு பெரிய கல்லெடுத்து போட்டுற்ரான். அது கோவாலு தல மேல பட்டு மண்ட ஒடஞ்சுருச்சு. ஐயோ அம்மான்னு கத்தவும் பதறிப் போயி அம்மாக்காரி ஓடி வாரா...

வந்தவளுக்கு பார்த்ததும் நடந்தது எல்லாம் புரிஞ்சுறுது... அட பாவி மனுஷா இப்டி பண்ணிட்டியேன்னு மலையிலருந்து இறங்கி கோபுரத்து மேல ஏர்றா அதுக்குள்ள அவனுக்கு ரத்தம் போயி செத்தர்றான். அய்யோ இப்டி கொல பாதகம் பண்ணிட்டீரே என் மவன கொன்னவங்கூட எப்டி வாழ்வேம்ன்னுட்டு மவ(ன்) கையில இருந்த உளியால தன்ன குத்திகிட்டு அவளும் அங்கயே செத்தர்றா...

அதிர்ச்சியில இருந்த அப்பங்காரனுக்கு அப்பத்தான் ஒவ்வொண்ணா வெளங்குது... சுத்தி முத்தி அந்த கோயில பார்த்தவனுக்கு இப்டி தங்கம் பெத்த பிள்ளைய கோவத்துனால கொன்னு குடும்பத்தையே சீரழிச்சுட்டமே அப்டீன்னுட்டு மலை மேலேர்ந்து மவன் செதுக்குன கோபுரத்து மேல விழுந்து அவனும் உசுர மாச்சுக்கறான்.

புடிச்சு வச்ச சோத்து உருண்டை அப்டியே கல்லா மாறி சோத்துப்பாறையா நின்னுருச்சு

5 comments:

Anonymous said...

ராசு நான் பல தடவை கேட்ட கதைன்னாலும் கூட நீங்க சொல்றப்ப உம் கொட்டி கேட்க ஆரம்பிச்சுட்டேன். எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காததுதானே.. அதுவும் நீங்க சொல்ற அழகு தனிதான்..

Anu said...

yeah kadaya padicchapuram..manasu kashtama irukku

G.Ragavan said...

சினமெனும் சேர்ந்தாரைக் கொல்லீன்னாரு வள்ளுவரு. வந்தவரையும் கெடுத்து..அவரோட கூடச் சேந்தவரையுங் கெடுத்திருமாம்.

அந்தப் பய இருந்திருந்தா என்னென்ன சிற்ப அதிசயங்கள் நமக்குக் கிடைச்சிருக்குமோ! ம்ம்ம்ம்...இப்ப எல்லாம் போச்சு....

நல்லா கதை சொல்லீருக்கீரு ராசுக்குட்டி. அப்பிடியே நம்மூரு மணம் கமகமக்குல்ல.

யாத்ரீகன் said...

ராசு.. கத.. சொன்ன விதம் ரொம்ப அருமை.. படிச்சதும் என்னமோ.. எங்க ஆயா சொல்ல சொல்ல கேட்ட மாதிரி இருந்துச்சு... மனசு பழசையெல்லாம் நெனைக்க ஆராம்பிச்சிருச்சு.. நெறய எழுதுங்க...

ராசுக்குட்டி said...

நன்றி ராகவன், யாத்திரீகன்...
நான் கேட்ட கதையை கிட்டத்தட்ட கேட்ட மாதிரி சொல்லியிருக்கிறேன்... அவ்வளவே!

நேரம் கிடைக்கும்போதெல்லாம் கண்டிப்பாக எழுதுவேன்!