Friday, July 28, 2006

07 : வெட்டுவான் கோவில் கதை



அந்த காலத்துல எட்டையப்ப ராசா அரண்மனையில ஒரு மந்திரி இருந்தாராம், அவருக்கு அழகுபெத்த பொண்ணு ஒண்ணு இருந்துச்சாம்.

அழகுன்னா எம்புட்டு அழகு... அவ்வா?

கொள்ள அழகுடா பேராண்டி... என் ராசாவுக்கேத்த ரதி மாதிரி... சரியா... கதயக் கேளு!

ம்...

அவளுக்கு திடீர்னு பயங்கர வயித்துவலி வந்துருச்சாம்... வந்து வெத்தலக்கொடியாட்டம் இருந்த மவராசி வாடி வதங்கி சீரில்லாம போய்ட்டா...

கருப்பட்டி முட்டாய தனியா தின்னு தின்னு தண்ணிய குடிச்சுருப்பா... வீராச்சாமி டாக்டர் ஊசி போட்டாரா?

வீராச்சாமிகிட்ட ஊசி போட்டுகிட்டா... இசக்கியப்பங்கூட மருந்து மாத்திர கொடுத்தாரு அப்பயுங்... ஊங்கல.. ஆங்கல.. நோவு! எப்டியாப்பட்ட டாட்டருங்களுலாயும் குணப்படுத்த முடியலயாம் அப்போதான் ஒரு சாமியாரு வந்து இந்த பச்செலய... பத்தியமிருந்து. பத்து நாளு திங்கணும்... தின்னா நோவு தானா சரியா போகுமுன்னு சொல்லிட்டு செட்டியார் சத்திரத்துல போயி தங்கிட்டாரு.

பத்து நாக்கூட ஆகல... வெங்கலப் பானைய வெளக்கி வெச்சாப்ல பள பளன்னு எந்திரிச்சுட்டா மந்திரி மவ...

ஆங்...

ஓடுனாரு மந்திரி சத்திரத்துக்கு... கால்ல படீர்னு உழுந்து... சாமி நீங்கதாம் என் தெய்வம்...உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்னு கேக்றாரு அதுக்கு சாமி நம்ம அரமலையில ஒரு சமணப் பள்ளி கட்டணும் அதுக்கு ஒத்தாச பண்ணு-ங்கிறாரு. மந்திரியும் சரின்னு, ராசாகிட்ட உழுந்து பெறக்கி அனுமதி வாங்கிட்டு கைதேர்ந்த சிற்பி ஒருத்தர கூப்ட்டு சாமிகிட்ட... சாமி இவரு நல்ல தெறமயானவரு... இவர் உளியெடுத்து செதுக்குனா கல்லும் கண்ணசைக்கும்... காத்தும் நாவசைக்கும். இவர் சுத்தியலு சத்தத்துக்கு... நட்டுவாங்கமிதுதான்னு பறவயெல்லாம் பரதமாடும்.

ஐய்

இவர உங்க கூடவே வச்சிகிடுங்க, என்ன செய்யனுமோ சொன்னீகன்னா மனங்கோணாம செஞ்சு கொடுப்பாருன்னுட்டு அவர் போய்ட்டாரு தூரதேசத்த பாக்க.அந்த சிற்பிக்கு ஓஞ்சோட்டு பய்யன் ஒருத்தன்... கோவாலுன்னு பேரு. கோவாலு ஆத்தாக்காரிக்கு புருசனுக்கு கூடமாட ஒத்தாச பண்றதுதான் வேல. கோவாலுக்கு அப்பன மாதிரி பெரிய சிற்ப வேலயெல்லாஞ்செய்யனும்னு ஆச... ஆனா அவங்கப்பனுக்கு மவன் படிச்சு பெரிய ஜில்லா கலெக்டராகணும்னு ஆச.

அப்ப பிரதர் ஸ்கூல்லதான் சேக்கணும்... சரியாவ்வா...

ஆமாண்டா ஏஞ்ஜில்லா கலெக்டரே, அங்கதான் கொண்டு போய் சேத்தாரு, ஆனா இந்த சேட்டக்காரப் பய என்ன செஞ்சான்... பள்ளிக்கோடத்துக்கு போவாம அவம் அப்பன் பின்னாடியே போயி தூர நின்னு அப்பஞ்செதுக்குறதயே பாத்துகிட்டு நிப்பான். ஒரு நாள் அவம் அம்மாக்காரிகிட்ட போயி அம்மாம்மா நானும் சிற்பமெல்லாம் செதுக்கனும்னு பிடி-முரண்டு பிடிச்சுருக்கான். அவம் அம்மா என்ன நெனச்சாலோ தெரியல... முனையில்லா உளியையும் பிடியில்லா சுத்தியலையும் கையில குடுத்து "ஏலேய் உங்கப்பன் கண்ணுல காதுல படாம வேல செஞ்சு கத்துக்க... அவர்ட்ட மாட்டுன என்னக் கொண்ணு தலகீழ மாட்டீருவாரு"ன்னுட்டா

இவனும் காலைல கிளம்பி அப்பனுக்கு பின்னாடியே போவான்... போயி கண்ணுக்கு மறைவா உக்காந்துகிட்டு அப்பன் வேலய தொடங்கினதும் அவரோட உளிசத்தத்துக்கு ஏத்தா மாதிரி இவனும் செதுக்கத் தொடங்குவான். அப்டியே தாளக்கட்டு ஒன்னு சேந்து அடிக்கிததால அவம் அப்பனுக்கு அந்த மலைல வேறொருத்தன் வேலை செய்றான்றதே தெரியல. அவம் அம்மாக்காரியும் மத்தியானம் புருசனுக்கு கஞ்சி கொண்டு வரும்போது மொதல்ல மவன்ட்ட வருவா "ஏலேய் இப்போ உங்கப்பனுக்கு கஞ்சி கொண்டு போறேன், நீ வேலய நிறுத்திக்க, அப்பா கஞ்சி கிஞ்சி குடிச்சு, கொஞ்ச நேரம் கண்ணசருவாரு, அப்பறமேலு வேலய ஆரம்பிக்கும்போது நீயும் ஆரம்பிச்சுக்க"ன்னுட்டு போயிருவா மவராசி.

ஏலேய் ராசு என்ன தூங்கிட்டியா... ஊங்கொட்ற சத்தத்தயே காணோம்... அடப்பாவமே ஆமா... பயபுள்ளை கதசொல்லு கதசொல்லுன்னு நச்சரிக்கும் ஆனா முழுசா கேக்றதுக்குள்ள தூக்கஞ்சாமி வந்துரும். அம்மா மருமவளே... என்னப் பெத்தா... இவன உள்ள கொண்டி படுக்கப்போடு... இங்கன உள்வாசல்ல பனிகொட்டும்...புள்ளைக்கு ஆவாது. இவளே... அடி இவளே... இவளுமா தூங்கிபுட்டா...

8 comments:

சதுர் said...

சூப்பர் கதை. நான் முன்பே கேள்விப்பட்டு இருக்கிறேன். இதேபோல இன்னும் எழுதுங்கள்.

யாத்ரீகன் said...

அப்பத்தோவ்... அந்த பேராண்டி தூங்கிட்டான்.. இந்த பேராண்டி முழிச்சிட்டிருக்கேன்.. கதயச்சொல்லு அப்பத்தா...

Anu said...

mmmmm mmmmm
nanga innum toongala
seekiram..kadaia continue..plz..

G.Ragavan said...

ஆகா...தொடங்கியாச்சுயோவ் தொடங்கியாச்சு....கதய அப்படியே பதிவு பதிவா நகட்டிக் கொண்டு போயிருங்க...கூடவே நடுவுல வர்ர அந்த குறும்புக் கமெண்ட்டுகளையுந்தான்....

Anonymous said...

Rasu, kadhai interestinga iruku.. continue pannu.Thoongaravana kazhati vidu, naanga kotta kottanu muzhichindu irukom

ராசுக்குட்டி said...

கத கேக்குற யாரும் தூங்கலீங்க... கத சொன்ன அவ்வாதான் தூங்கிட்டாங்க

யாத்திரீகன்,ராகவன், அனிதா, வரா மறக்காம நாளை மறுபடி வாங்க... மிச்சக் கதய கேக்க

SP.VR. SUBBIAH said...

நாளைக்கி வந்தா அப்பத்தா மீதிக் கதையைச் சொல்லுமா?

ராசுக்குட்டி said...

கண்டிப்பா வாத்தியாரய்யா, கட்டாயம் வாங்க