Thursday, August 31, 2006

30 : விளையாடலாம் வாங்க

Photobucket - Video and Image Hosting

ஏலேய் கோகோ, வ.வா.சங்கத்த நடத்திட்ருந்தாகள்ளா அவிய எதுனா நல்ல காரியம் பண்ணலாம்னு தமிழ்ச்சங்கம் ஒண்ணு ஆரம்பிச்சுருக்காங்க தெரியுமுல்ல...

தெரியும் அண்ணாச்சி... இந்த கொள்ளைக்காரங்கெல்லாம் சேந்து பள்ளிக்கொடம் நடத்துவாகள்ளா அப்படி நக்கல் பண்றவுகள்ளாம் சேந்து நல்ல காரியம் பண்ணுதாகன்றீங்க...அப்படித்தானே

நீ ஏம்டே இப்டிலாம் நெனைக்கித...நெசமாலுமே நல்ல காரியம்தாம்ல பண்றாக. கவித போட்டி நடத்துதாகடே சங்கத்து சார்பா

என்ன கவித போட்டியோ... சரி வீட்டுக்கு வெள்ளயடிச்சுருக்கீரு ஏதோ தங்கப்பதக்கம் வாங்குனது மாதிரி பதக்கத்த தொங்க விட்ருக்கீரு நம்மகிட்ட ஒரு வார்த்தை சொல்லலயே

எம்புட்டு நாளைக்குதான் ஒரே மாதிரியா வச்சுருக்றது அதான்... இனாமாத்தானே கெடைக்குதுன்னு வார்ப்புரு ஒன்ன வாங்கி மாத்துனேன்... இதுக்கென்ன உனக்கு பந்தப் போட்டு பால் காய்ச்சனுமா

அது சரி நம்மதான் ஃப்ரீயா குடுத்தா பெனாயிலக் கூட குடிப்பமே...

அடி சவத்துமூதி... ஒங்கூட எப்பவுமே இப்டித்தாம்ல சொல்ல வந்த சேதிய சொல்லவுடுறியா பாரு

சரிண்ணே சொல்லுங்க... கவித போட்டி வச்சுருக்காக... இன்னுமிருக்கு ஆகாசம்-னு அட்டகாசமான தலைப்பு... ஆனா இன்னிக்குதான் கடைசி தேதி :-( செறந்த கவித எதுன்னு எடுத்துக்குடுக்க வாறாரு கவிஞர் மு.மேத்தா..ம்.. அப்புறம்

அட இங்க பார்றா தெரியாது தெரியாதுன்னு சொன்னானாம் சின்னமாடன்...ஆமம்மா ரெண்டாவது அடுக்குல பாக்கலன்னானாம் வெண்ணமாடன்! எல்லாத்தயும் தெரிஞ்சுகிட்டுதானா எனக்கு வெளாட்டு காமிச்ச

ஏண்ணே இது ஒன்ற மாச பழஞ்சேதி இதப்போய் நீட்டி மொழக்குதீரே

இல்லடே நானும் ஒரு போட்டி வைக்க்ப் போறேன்!

என்னது நீரு போட்டி வைக்கப் போறீரா... எப்டி நாங்கெல்லாம் ஊருல இருக்கலாமா வேணாமா? சரி சரி சத்தமா சொல்லாதீரும்வே கேக்குத எவனும் வாயால சிரிக்க மாட்டான் பெறவு

இந்த சேட்டைக்குதானே நீ செருப்படி வாங்குறது ஊருக்குள்ள... ஏம் வாயக் கிண்டாதடே,
போட்டி இதுதான் சொல்லிப்போடறேன். தமிழ்சங்கத்துல கவிதை எழுதி இருக்காகல்ல அங்க அவுக எழுத்த வெச்சே யாரு எழுதுனதுன்னு கண்டுபிடிக்கனும்!

1. கோயிந்து
2. வேதாளம்
3. அணிலு
அப்டின்னு எழுதி இங்கன ஒரு பின்னூட்டம் போட்டுட்டாகன்னா போதும். முடிவு தெரிஞ்சதும் யாரு நெறய சரியா எழுதிருக்காகளோ அவுகளுக்கு ஒரு பரிசு!

அப்புறம் முதல் பரிசு எந்த ந(ம்)பர்க்குன்னு சொல்லி அது சரியா இருந்தாலும் மற்றொரு பரிசு!


பரவால்லவே சிந்திக்றீரு! நல்ல போட்டிதான், நான் கண்டு பிடிச்சுட்டு வந்து பேசிக்கிறேன். பரிசு என்னத்த குடுத்துறப் போறீரு... எச்சக் கையால காக்காவயாவது ஓட்டுமய்யா இல்ல நாய் வந்து நக்கீரப் போகுது

வ்வ்வ்வர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்டா!

Wednesday, August 30, 2006

29 : என்ன கொடுமை இது சரவணன்...


Photobucket - Video and Image Hosting

Tuesday, August 29, 2006

28 : பட்டைய குத்தணும்... சட்டைய மாத்திட்டேன்!

பொசுக்குன்னு நமக்கு ஒரு பதக்கத்த குடுத்துட்டாங்க! அதுக்கேத்த மாதிரி நம்ம தளமும் இருக்கணுமில்ல... அதான் மாத்திட்டேன்.

நல்லா இருக்கா என் வலைப்பூவின் புதிய தோற்றம்!

இருக்கு இல்லைன்னு ஒரு வரி சொன்னீகன்னா சந்தோசப் படுவேன்!

வ்வ்வ்வர்ர்ர்ட்ட்ட்டா

Monday, August 28, 2006

27 : நன்றி...நன்றி...நன்றி...!

Photobucket - Video and Image Hosting


படித்து வாக்களித்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், படைப்புகளை பட்டியலிட்டு விமர்சித்தவர்களுக்கும் மற்றும் பல ரகசிய அபிமானிகளுக்கும், கோடானு கோடி நன்றிகள்.

என்னை தொடர்ந்து ஊக்கப் படுத்தி, என் கனவுகள் சிலவற்றுக்கு செயல் வடிவம் கொடுத்த அனிதா, மற்றும் பிரச்சார பீரங்கி கோகோவுக்கு சிறப்பு நன்றிகள்.

முதல் பத்தில் என் படைப்புகள் இரண்டு இடம் பெற்றது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. வாசகர் வாக்கெடுப்பில் என்னுடைய விமர்சனப் பதிவு கூட 11-வது இடம் பிடித்தது, தொடர்ந்து எழுத என்னை இன்னும் உற்சாகப் படுத்துகிறது! அதுவும் 84 படைப்புகளில் என்று சிறு குழந்தை போல் கணக்கு வேறு போட்டுக் கொள்கிறேன்!

பதிவிட ஆரம்பித்து ஓரிரு மாதங்களில் பரிசும், இத்தனை நண்பர்களும் பெறுவதற்கு, என் பெற்றோரோ அதற்கும் முன்னோரோ செய்த புண்ணியம்தான் காரணமாய் இருக்க வேண்டும்.

தலை பத்தில் வந்த எனது படைப்புகள்,
மூன்றாமிடம் - உறவும் பிரிவும்!
ஏழாமிடம் - பாதுகாப்பு உறவு - போதும் காப்பு உதறு

* இத்தருணத்தில் முடிவுகள் பற்றி ஒரு சிறு கருத்து!

என்னை மிகவும் பாதித்த கதை சொக்கலிங்கத்தின் மரணம். நான் சமீபத்தில் படித்த மிகச் சிறந்த கதைகளில் ஒன்றென என்னால் தைரியமாக சொல்ல முடியும். நடுவர் குழுவின் பெரும் மதிப்பை (85%) பெற்றிருந்தும் 5-வது இடம்தான் பிடிக்க முடிந்தது.

(இதற்கு முந்தைய முறைப்படி இந்த படைப்பு 10-வது இடத்திலேயே தங்கி இருக்கும் என்ற வகையில் இந்த முறை பரவாயில்லை)

மற்ற படைப்புகள் (11 - 84) ஓரிரு வாக்குகள் அதிகம் பெற்றிருந்தால் இந்த நல்ல கதை கவனிக்கப் படாமலே கூட போயிருக்கும்! ஏனெனில் முதல் 10 படைப்புகள் மட்டுமே, நடுவர் குழுவுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. படைப்புகளின் வளர்ந்து வரும் எண்ணிகையை கவனத்தில் கொண்டு 25% படைப்புகளையாவது பரீசிலிப்பது பொருத்தமாக இருக்கும். அடுத்த மாதத்தில் நடுவர் குழு தீர்ப்புகள் 30% முக்கியத்துவம் பெறப் போகிறது என்பதையும் இணைத்துப் பார்ப்பது அர்த்தம் தரும்.

மற்றபடி போட்டியிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். வெற்றியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டும்!

அனைவர் திறனும் மேலும் மேலும் சிறக்க....

கனவுகள் மற்றும் நம்பிக்கையுடன்!

Sunday, August 27, 2006

26 : தேன்கூடு முடிவு கள் கிடைச்சாச்சு!

Photobucket - Video and Image Hosting

என்னண்ணே ஒரு வழியா முடிவுக்கு வந்துருச்சு, மாதாந்திரப்போட்டி. வெற்றி-ன்றது போதை தருவது என்று ஞானிகள் பலர் சொன்னாலும், ஞானசூன்யமான நமக்கு அது லேசில் புரிந்து விடுகிறதா என்ன? போதை தருவதை பெறுவதே வெற்றியென்றாகி விட்டது நமக்கு!

என்னடா கோகோ, யார்றா ஜெயிச்சா சொல்லுடா... சொல்லு! ரொம்ப ஆர்வமா இருக்கு

வெற்றியாளர்(கள்) விவரம் கிடைத்து விட்டது. ஒரு போட்டியில் வெற்றி பெருபவர் சிலரே, தோல்வி அடைபவர்கள்தான் அனேகம். இந்தப் போட்டியில் மட்டுமல்ல ஜனநாயக தேர்தலில் கூட அவ்வாறுதானே நேர்கிறது. எனினும் பாதிப்படைபவர்களையும், அவர்களின் எண்ணிக்கையையும் கவனத்தில் வைத்துக் கொண்டு வெற்றியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பாராட்டுக்களை தராமல் இருப்பது எவ்விதத்தில் சரி என்பது தெரியவில்லை.

என்னடா ஏதோ ஞானி மாதிரி பேசற. பிரச்சாரம் பிரச்சாரம்னு வெயில்ல அலைஞ்சியே அதுல எதுனா ஆயிடுச்சா? எதற்கு வளவளவெனப் பேச்சு, வெற்றியாளர் யாரென்று தெரிவித்தால் என்ன?

வெற்றியாளர் ஒரே ஒருவரின் புகைப்படம் மட்டும் கிடைத்திருக்கிறது,

எப்படிடா தம்பி, சாம்புவுக்கே தெரியாத விடயம் உனக்கெப்படி கிடைத்தது?

ஒற்றரிந்த விவரங்கள் பிறகு, இப்போதைக்கு வெற்றியாளரை இங்கு சுட்டி பார்த்துக் கொள்ளுங்கள்.

என்னடா சரியாக தெரியலையே... படம்

அது உங்கள் பாடு, நீங்களே கண்டு பிடித்துக் கொள்ளுங்கள். அவர் வெற்றிக் கலயத்தை எப்படி கைப்பற்றினார் என அவரிடம் கேட்டதற்கு சொன்ன பதிலை மட்டும் கீழே தர்றேன்!

கோகோ : எப்டிண்ணே புடிச்சீங்க...
அவர் : ஆங்... புகைப் போட்டு புடிச்சேன்

என்னடா, வைதேகி காத்திருந்தாள் நக்கலா?

சரி நேரே விஷயத்திற்கு வந்து விடுகிறேன். இவர் வீட்டு தென்னை மரத்தில் 'கள்' கலயம் கட்டி வச்சுருந்தாராம். 'கள்' கலயம் நிறைய சேர்ந்த பின்னும் அதை எடுக்க முடியவில்லையாம், ஏன்னா கலயத்திற்கு சற்று கீழே தேனீக்கள் கூடு கட்டி விட்டதாம். மாதாந்திரமாக காத்திருந்துவிட்டு வேறு வழியின்றி புகை போட்டு கலைத்து விட்டு, கலயத்தை கைப்பற்றினாராம் Brave Heart மெல் கிப்ஸனுக்கு ஈடான இவ்வீரர்!

என்னடா சொல்ற?

தென்னை மரத்திலெப்படி தேன்கூடு என்று கேட்கிறீர்களா, நானும் நம்பவில்லை இந்த படத்தை பார்க்கும்வரை ;-)

அடிங்...

என்னது திட்றதுக்கு வார்த்தை தேடிட்ருக்கீங்களா, தேடிட்டே இருங்கண்ணா...

எல்லோருக்கும் இனிய

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

இப்போதைக்கு வ்வ்வ்வர்ர்ர்ட்ட்ட்ட்டா!

Saturday, August 26, 2006

25 : வேட்டையாடு விளையாடு

Photobucket - Video and Image Hosting
நேற்று வே.வி சிங்கையில் வெளிவந்து விட்டது என்று தெரிந்த பின்னும் வேலையென்ன ஓடும், பற்றாக்குறைக்கு வெள்ளிக்கிழமை வேறு. சர சரவென செய்தி பரப்பி 40+ டிக்கெட் வாங்கி வர ஏற்பாடு செய்தாயிற்று.

5-ம் 10-மாய் வெவ்வேறு இடங்களில்தான் இருக்கை கிடைத்தது. அதன்பின் திடீரென Mumbai X press நியாபகத்திற்கு வந்து இம்சித்தது, ஏதேனும் விமர்சனம் படித்துவிட்டு போயிருக்கலாமோ! எனினும் கவுதமின் வரலாறு (மின்னலே, காக்க காக்க) நம்பிக்கையூட்டுவதாய் இருந்தது.

சரி 'துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு' என்று யிஷுன் ஜி.வி சென்று அமர, படம் ஆரம்பித்து விட்டது.

எடுத்த எடுப்பிலே சண்டை, பாடலுன் பெயர் என்று வளமை மாறாத தொடக்கம்தான். இருந்தாலும் ஆரம்பத்திலேயே கீரணூரில் ஒரு பெண் கொலை அதை விசாரிக்கும் பணியில் கமல் என்று நேரே விஷயத்திற்கு வந்து விடுகிறார்.

போலீஸ் உயர் அதிகாரி பிரகாஷ்ராஜ், மகளாம். எனினும் எடுத்தவுடன் வருவதால் பிரகாஷ்ராஜ் அழுகை சற்றே மிகைப் பட்ட நடிப்பாகத்தான் தெரிகிறது! மகளின் நினைவுகளை மறக்க நியூயார்க் செல்லும் பிரகாஷ்ராஜ் அங்கேயே வைத்துக் கொல்லப்பட அது தொடர்பான தகவல் பரிமாற்றங்களுக்காக நியூயார்க் செல்ல, அங்கே ஜோ-வை சந்திக்கிறார். (அட போலீஸ் வேலையில் கூட on-site!)

ஜோதிகாவை தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றிய பின் வரும் வசனம்
கமல் : ராகவன்...
ஜோ : ஆராதனா...
கமல் : ஏன்
என்ன மணிரத்னம் படத்தில வர்ற மாதிரி வசனமிருக்கு, நானும் ஜோவும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் இந்த வசனத்தை சொல்ல ஒரு 'அட' போட்டு படத்தோடு ஒன்றி விட்டேன். இதற்கு மேல் கதையை சொல்லக் கூடாது, படம் வெளியாகி இரண்டாம் நாளில்... அது தப்பு!

கற்க கற்க... ஒரு peppy song. சில இடங்களில் பரத்வாஜ் குரல் போன்று ஒலித்த பாடலை பாடியது தேவன், திப்பு மற்றும்...

பார்த்த முதல் நாளாய் இனிமை, பாம்பே ஜெயஸ்ரீ குரலில் பழைய பாடல்களை நினைவுக்கு கொண்டு வந்து விடுகிறது, பாடலில் கமல்-கமலினி முகர்ஜி அழகு. பாடல்களில் அவ்வளவாய் ஈர்க்காத ஹாரீஸ் ஜயராஜ் பிண்ணனி இசையில் திருப்தி படுத்தி விடுகிறார்.

அது யாருப்பா கமலுக்கு வயசு தெரியறா மாதிரி ஒப்பனை செய்து விட்டது. மற்ற உடைகளில் தெரியும் வயது, போலீஸ் சீருடை அணிந்ததும் மறைந்து விடுகிறது. மிடுக்கும் கம்பீரமுமாய், கமல் பாத்திரத்திற்கு கச்சிதமாய் பொருந்துகிறார்.

அழகான பெண்களை பாதியிலேயே கொன்று விடும் தமிழ் இயக்குனர்களிடமிருந்து கமலினியை (கயல்விழி) காப்பாற்றுவது கடினம்தான்.

இடைவேளை வரை தடதடவென பயணிக்கும் கதை, இடைவேளைக்கு அப்புறம் லேசாக தொய்வடைந்து விடுகிறது. முக்கியமாக உயிரிலே... பாடல், கிட்டத்தட்ட படம் முடியும் தருவாயில் அவ்வளவு மெதுவாக ஒன்று தேவைதானா? அதை ஒரு நாலு வரிப்பாடலாக முடித்திருந்தால் மனதில் இசை தங்கியிருந்திருக்கும் வெளியே வந்து தேடிக் கேட்டிருப்போம் அந்த பாடலை நிச்சயமாக.

காக்க காக்க படத்திற்கும் வேட்டையாடு விளையாடுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை பட்டியலிடுவதா, இல்லை வேறுபடும் இடங்களை சுட்டுவதா என்று தெரியவில்லை. ஒரு வேலை இது மற்றுமொரு Police Story என்பதால், இருக்கலாம். ஆனால் இயக்குனருக்கு சில பெயர்களை பிடிக்கும் என்பது தெரிகிறது, உ.தா. இளா, மாயா (அமுதன் கூட கேட்டது போல் உள்ளது)

ஜோ கூட மாயா டீச்சர் போல எப்போதும் ஒரு மென்சோகத்தோடே வலம்வருகிறார்!

இன்னும் பேசலாம் இந்தப் படத்தை பற்றி... வசனங்கள், வில்லன்களைப் பற்றியும் நீங்களும் பார்த்துட்டு வாங்க அப்புறம் விவாதிப்போம் நிறைய!

இப்போதைக்கு வ்வ்வ்வ்வர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா!

Thursday, August 24, 2006

24 : ஆறு படையப்பா, ஆறுச்சாமி வரிசையில்... கோகோஸிக்ஸ்!

Photobucket - Video and Image Hosting

ஆருமே கூப்பிடல ஆறு பதிவு போடன்னு அண்ணன் ராசு ஃபீல் பண்ணிக்கொண்டிருந்த வேலையில்... எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவது போல் அனிதா நம்மள ஆறு பதிவு போட கூப்ட்டுருக்காங்க.

என்ன இருந்தாலும், கர்ணனுக்கு பாதி அரசை தாரை வார்த்த துரியோதனன் மாதிரி, பாதி வலைப்பூவை எனக்கு தானம் செய்ததால் ராசுவையும் இணைத்துக்கொண்டு... ஆறுல படகு ஓட்டுறேன்... நீங்களும் சொல்லுங்க ஐலசா...

எனக்கு பிடித்த 6 ரஜினி படங்கள்
* பாட்ஷா
* அண்ணாமலை
* முத்து
* நெற்றிக்கண்
* தில்லுமுல்லு
* குருசிஷ்யன்
(கண்ணா தலைவருக்கு ஆறெல்லாம் பத்தாது கண்ணா நூறு..நூறு..நூறு வேணும்ம்)

ராசுவுக்கு பிடித்த 6 அஜித் படங்கள்
* முகவரி (அல்ட்டிமேட்)
* காதல் மன்னன் (அசத்தல்)
* உல்லாசம் (பாக்ஸ் ஆபிஸ்ல ஊத்திகிட்டாலும் அட்டகாசம்... அஜித் ரொம்ப stylish-ஆ இருந்த படம்)
* வாலி (ஒரு Ball-அ டபுள் சிக்ஸர்)
* அமர்க்களம் (ஷாலினிக்காக இன்னோருக்கா)
* ஆசை (1..4..3)

மறக்க முடியாத 6 பாடல்கள்
* ஆயர்பாடி மாளிகையில்...தாய் மடியில் கன்றினைப் போல்....
(உட்டா ஒரு கொசுவத்திப் பதிவு வரும்)
* பொய் சொல்லக் கூடாது காதலி - ரன்
* சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது - காதல் வைரஸ்
(காதலிக்கும் காலங்களில் கேட்கும் பாடல்களுக்கு இனிமை கூடி விடுவதால்...மேலிரெண்டு)
* நானாக நானில்லை தாயே...
(நான் கொஞ்சம் அம்மா கோண்டு)
* என்னம்மா கண்ணு சௌக்கியமா...
(தலைவர் ஸ்டைல்க்கு... ஆமம்மா கண்ணு சௌக்கியம்தான்)
* ஆச் லொங் அச் யொஉ லவ் மீ
(கண்டு பிடிப்போருக்கு 5 பின்னூட்டம் 1 ஓட்டு பரிசு)

பிடித்த 6 விஷயங்கள்
* Age of Empires / Caesar
* நல்ல கவிதைகள் (எதைப் பற்றி வேண்டுமானாலும்)
* என் அம்மா தலை கோத தூங்கும் தூக்கம் (தீபாவளிக்காவது வீட்டுக்கு போகோணும்)
* சதுரங்கம் (தம்பியுடன்!)
* பயணங்கள் (எங்கேயும் எப்போதும்)
* வலைப்பூ (சமீபத்திய போதை)

ராசு அம்மா சமையலில் எனக்கு பிடித்தவை 6
* வற்றல் குழம்பு
* இடியாப்பம் (தேங்காய் பால் அல்லது மேற்சொன்ன வ.கு)
* அவியல் மற்றும் அனைத்து கூட்டு வகைகள்
* வெந்தயக் களி
* சிறுகிழங்கு பொரியல்
* அரிசி உப்புமா & கத்தரிக்காய் கிச்சடி

பிடித்த 6 இடங்கள்
* கழுகுமலை (தெப்பம் மற்றும் ஆம்பூரணி கரைகள்)
* நாங்கள் குடியிருந்த எல்லா வீட்டின் மொட்டை மாடிகளும்
* புனே மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள் (லோனாவாலா, மாத்தேரான், மஹாபலேஷ்வர்)
* சீனாவில் சில இடங்கள் (ஸியான், நான்துங், ஷாங்காய்)
* லங்காவி கடற்கரைகள்
* கொடைக்கானல் - மதுரை - ஊட்டி (ஒரே ஒரு காரணத்திற்காக)

போக நினைக்கும் 6 இடங்கள்
* ஜெய்ப்பூர்-காஷ்மீர்-ஆக்ரா - இந்தியா
* தஞ்சை-சிவகங்கை (தமிழகத்தில் இந்த மாவட்டங்களில்தான் எங்குமே சுற்றவில்லை)
* .ஃபுக்கெட் - தாய்லாந்து
* அமைதி நிறைந்த இலங்கை
* சீனா (இன்னும் நிறைய மிச்சமிருக்கு)
* கலைநகரம் பாரீஸ்

நான் வரும் 6 பதிவுகள்
* ஆறு படையப்பா, ஆறுச்சாமி வரிசையில்... கோகோஸிக்ஸ்!
* மாசி மாசந்தான்... கெட்டி மேளதாளந்தான்
* அண்ணன் ராசுவுக்கு ராசுவுக்கு...
* கோகோ ஒரு தீர்க்கதரிசி
* 'கீதா' உபதேசம்
* கோகோ - அறிமுகம்

2 + 4 = 6

6 வார்த்தை கதைகள் 2
*மஞ்சள், குங்குமம், பூவோடு புன்னகைத்திருந்தான் கணவன் புகைப்படத்தில்.
* கல்யாணச் சாவுதான், கடவுளே கஷ்டப்படுத்தாம அழைச்சுக்கோ மாமியார!

(மேல இருக்றது என்னதுன்னு பார்க்கரீங்களா... நேரமின்மையால் ரெண்டு கத எழுத முடியலன்னு அண்ணன் கத வுட்டாருல்ல, உண்மையான்னு ஒரசிப் பார்க்க அத ஆறு வார்த்தை கதையாக்கித்தாங்க அப்டின்னேன் அதான் இது! நல்லாருக்கா மறக்காம பின்னூட்டத்துல சொல்லுங்க)

அழைக்க விரும்பும் 4 பேர்
* திருவாளர் கோயிந்து
* வேதாளம்
* மக்கா...
* அணில்குட்டி அனிதா
(திரும்ப வந்துருங்க அம்மணி... உங்களுக்காக காத்துகிட்டு இருக்கேன்... நான் சொல்றது அ.கு.அ-வ... கோகோ, தூரத்துல வர்ற ரயில பார்க்கிறா மாதிரி ஒரு லாங் ஷாட் வச்சு ஃபிரேம ஃப்ரீஸ் பண்றோம்... கீழ A film by...)

Wednesday, August 23, 2006

23 : மாசி மாசந்தான்... கெட்டி மேளதாளந்தான்

Photobucket - Video and Image Hosting

இதனால் சகலமானவர்களுக்கும் சொல்லிக்கிறது என்னன்னா... மைக் செட் கட்டியாச்சு,ரெக்கார்ட் போட்டாச்சு, நமக்கு மைக் செட்ட கட்டுனாலே ஊர்க்காவலன்.ல தலைவருக்காக ராதிகா பாடுற "மாசி மாசந்தான்..." ஞாபகத்துக்கு வந்துரும். சரி கொசுவத்தி கொழுத்தாம விஷயத்துக்கு வந்தர்றேன். கீழ உள்ள > பட்டன தட்ட வேண்டியதுதான்... தேன்கூடு போட்டிக்கு ராசு எழுதுன புதுக்கவிதையை கேட்கலாம்!

அனிதா நன்றிகள் பல!


powered by ODEO

நினைத்தாலே இனிக்கும்ல வர்ற "அன்பரே..." அப்டின்றா மாதிரி இருக்கா அப்ப இங்க தட்டிப் பாருங்க...

கீழ சுட்டுங்க கவிதையை பார்க்க!
பாதுகாப்பு உறவு - போதும் காப்பு உதறு

பிடிச்சுருக்கா இங்க வந்து ஓட்டுப் போடுங்க

இன்னும் தெரியணும்னா நேத்து நம்ம பேசுனமே அத ஞாபகத்துக்கு கொண்டுவாங்க

சந்திப்போம் சீக்கிரமே... அதுவரைக்கும் வ்வ்வ்வர்ர்ர்ட்ட்ட்டா...

Tuesday, August 22, 2006

22 : அண்ணன் ராசுவுக்கு ராசுவுக்கு...

Photobucket - Video and Image Hosting

ஆகஸ்ட் மாத போட்டி உறவு வழியா...ச்சே ஒரு வழியா முடிவுக்கு வந்துருச்சு, அப்புறம்தான் அண்ணன் கூட பேசறதுக்கே நேரம் கெடச்சது. நம்மள தீர்க்கதரிசின்னுலாம் புகழ்ந்தவரு பேச்சு வாக்குல என்னப் போயி பிரச்சார பீரங்கின்னுப்புட்டாரு. நமக்கு எதுனா பதவி கெடச்சா புகுந்து விளையாடிட மாட்டோம்.

இப்பெல்லாம் யாரு ரோட்ல போனாலும் சரி, இப்டித்தான் வழி மறிச்சு நின்னுக்கறது... அண்ணன் கதைய படிச்சியா கவிதையா படிச்சியா, விமர்சனத்தை படிச்சியான்னு கேட்டதுல எல்லாரும் நம்மள பார்த்தாலே எதொ LIC ஏஜென்ட்ட பார்த்தா மாதிரி தெரிச்சு ஓடுறாய்ங்க!

இதுனால மனந்தளர்ந்திருவோமா என்ன... ஏண்டா இப்டி ஓடறீங்கன்னு ஒருத்தன பிடிச்சு கேட்டதுக்கு கத கூட பரவாயில்லை கவிதை ஏதோ வட்டார வழக்குல இருக்கு படிச்சா பல்லெல்லாம் இடிச்சுக்குது அப்டின்னுட்டாய்ங்க

ரைட்டு விடு அப்டின்னுட்டு என்னோட புது நண்பிகிட்ட விஷயத்த சொல்லி கொஞ்சம் வாசிச்சுக் குடுங்கன்னு கேட்டா... அவிய சும்மா கலக்கலா பதிவு பண்ணி குடுத்துட்டாங்க... இன்னிக்கு மைக் செட்லாம் கட்டிர்றேன்... நாளைக்கு மறக்காம வாங்க கவிதைய கேக்க!

அதுவரைக்கும் இதெல்லாம் படிங்க
பாதுகாப்பு உறவு - போதும் காப்பு உதறு

உறவும் பிரிவும்!

திரை விமர்சனம் - உயிர்

படிச்சது பிடிச்சா இங்க வந்து ஓட்டுப் போடுங்க

ஆமாங்க வாக்காளர் பதிவட்டைய காமிச்சாத்தான் ஓட்டு போட முடியும். பதிவட்டை இருக்கா அப்ப இங்க போங்க முதல்ல. என்னது பதிவட்டை இல்லியா? புதுசா வாங்கணுமா ரொம்ப சுலுவுங்க... இங்க வாங்க!

மொத்தத்துல சிரமப்பட்டாவது...
அண்ணன் ராசுவுக்கு ராசுவுக்கு...ஓட்டுப் போடுங்க தம்பிமாரே!

Monday, August 21, 2006

21 : கோகோ ஒரு தீர்க்கதரிசி

Photobucket - Video and Image Hosting

என்னண்ணே... நல்லாருக்கீகளா? பாத்து ரொம்ப நாளாச்சு வேலைப் பளு ரொம்பவோ

வாடே கோகோ, வேலை கொஞ்சம் அதிகம்தான்... சரி என்ன குதியாட்டம் போட்டு வார சொன்னா நாங்களும் சந்தோசப்படுவமில்ல

சொல்றேன்... ஆனா சொன்னா நீங்க வருத்தம்தான் படுவீக

ஏலேய் எட்டிகிட்டு மிதிச்சம்னா எங்கிட்டு போய் விழுவன்னு எனக்கே தெரியாது... விஷயத்த சொல்லுடேன்னா... பீடிகை போடுறாரு தொர

அண்ணாச்சி ஏன் இம்புட்டு கோவம், நம்ம தேன்கூடு போட்டி முடிவுக்கு வந்துருச்சுல்லா, மொத்தம் 84 பதிவு வந்துருக்கு தெரியுமா?

அதுக்கென்னடே நல்ல விஷயம்தானே... இந்த தடவை படைப்புகளெல்லாம் பிரமாதமா இருந்துச்சு... ஆனா உனக்கும் அதுக்கும் என்னலே சம்பந்தம்... நீ எழுத்துக்கூட்டி படிக்குறதுக்குல்ல ஏஞ்சென்மமே முடிஞ்சுருமே

இந்த நக்கலுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல... நம்மள அறிமுகப்படுத்துறப்ப இதப் பத்திதான் பேசுனோம் ஞாபகம் இருக்கா? சரி நீங்க மறந்தா மாதிரி நடிப்பீங்க... நானே சொல்றேன் நான் போன மாசம் மாதிரியே 80 பதிவுகள்தான் வரும்-ன்ற அர்த்ததுல சொன்னேன் நீங்க என்னடான்னா 110 வரும்னு சொன்னீயள்ள... மறந்துட்டா?

ஹா...ஹா! அடக் கோட்டிக்காரப் பயலே, சரி ஒத்துக்கரேம்ல நீ ஒரு தீர்க்கதரிசிதாம்னுட்டு! நெறயா பேரு ஊர் தேசத்த பாக்க போயிருக்கங்கள்ளா அதுனால கூட எண்ணிக்கை எதிர்பார்த்தத விட கொறஞ்சுருக்கலாம்... நானே எழுதனும்னு நெனச்ச ரெண்டு கதய நேரம் இல்லாததுனால எழுத முடியல தெரியுமா?

நொண்டிக் கழுதைக்கு சறுக்குனதுதான் சாக்காம், எங்க ஆத்தாகூட அடிக்கடி சொல்லும்!
அது சரிண்ணே போட்டிதான் முடிஞ்சுருச்சே, ஓட்டு போட்டாச்சா?


பாசக்கார பயடா நீ, ஓட்டெல்லாம் போட்டாச்சு, நமக்கு பிடிச்சதுக்கு எல்லாம் போட்டுபுட்டேன். எலேய் நீ போட்டியா ஓட்டு அண்ணனுக்கு... என்னோட பிரச்சார பீரங்கியே நீதாம்ல, அண்ணன செயிக்க வைக்க என்ன பண்ணப போற

நமக்குதான் ஓட்டே இல்லியே... இல்லின்னாலும் என்ன "பிரச்சார பீரங்கி"ன்னு வேர சொல்லிட்டீங்க மைக் செட்-லாம் போட்டு ஒரு கலக்கு கலக்கிபுடலாம். ஆனாலும் எனக்கு ஒரு வருத்தம்னே, முந்தாநேத்து கோலிவுட் இசைவிழாவுக்கு நம்மள கூப்டாம போயிட்டீங்கள்ள. ரம்யா கிருஷ்ணன்லாம் வந்துருந்தாங்கலாம்ல!

ஜொள்ளொழுக்கி கிட்டே இருக்காதல... தங்க கோட்டைன்னு ஏதோ இம்சை பண்ணிகிட்டு இருந்தாவ, பணங்காசு ஒழுங்குமுறையா பைசல் பண்ணலயோ என்ன கழுதையோ அம்புட்டு ஒண்ணும் சொகப்படல...

என்ன பொசுக்குன்னு இப்டி சொல்லிப்போட்டீக... சினிமா பாடகர்கள் நெறய பேரு வந்துருந்தாங்கலாம்ல

நமக்கு பாடும் நிலா பாலு வரலைன்னதும் சொணங்கிப் போச்சு, இருந்தாலும் சங்கர் மகாதேவன் கொஞ்சமா ஈடு செஞ்சுட்டுப் போனாரு, சின்னக் கலைவாணரு கொஞ்சமா கலகலப்பூட்டுனாரு. மத்தபடி இசைக்குழு 'திண்டுக்கல் அங்கிங்கு'ன்னு ஏதோ சொன்னாக...எப்பவுமே அப்படியா இல்ல அன்னிக்கு மட்டும் அப்படியான்னு தெரியல கொஞ்சம் இம்சைக்குழுவாத்தான் இருந்துச்சு!
அப்புறம் நம்ம சின்னக்குயில் சித்ராவும் வந்துருந்தாக என்னா குரல், என்னா பணிவு, ஆறு தடவ தேசிய விருது வாங்கிருக்காகலாம்...நூறே கொடுக்கலாம்டே.

நீங்க ஏதோ பாட்டுக்கு ஆடுனதா சொன்னாவளே ஊருக்குல்ல...

ஆடுனா நல்லாத்தான் இருந்துருக்கும்ல, கூட்டத்த கட்டுக்குள்ள வைக்குறதுக்குன்னு வந்த நம்மூரு புள்ள ஒண்ணு அம்புட்டு அம்சா இருந்துச்சு, அனுராதா ஸ்ரீராம் வேற 'கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு'ன்னு அழகா பாடுச்சு... எலந்தப்பழ பாட்டுக்கு கண்டிப்பா ஆடியிருக்கலாம் ஆனா நமக்கு தோதா சேக்காளிக இல்லாம போய்ட்டாக, அது சரி மூதி ஒனக்கு யாரு இதெல்லாம் சொல்லுதா

அண்ணாச்சி நமக்கு ஆயிரங்காது, ஆயிரங்கண்ணு... நீங்க சொல்லாட்டி எனக்கு எதுவும் தெரியாதுன்னா நெனச்சீக...

ஒனக்கு ஆயிரம் வாயும் இருக்குல... சரி ட்ரம்மர் சிவமணி-ய பத்தி ஒரு பயலும் ஒங்கிட்ட சொல்லலயா? சும்மா ஒரு 10-15 நிமிஷம் கலக்கிப் புட்டாரு, சங்கர் மகாதேவனும் அவரும் சேந்து போட்ட 'பிட்'ம் அட்டகாசமா இருந்துச்சு. பாடும் வயலினும் வந்திருந்தார், ஆனா அவருக்கேனோ தனி நேரம் ஒதுக்காம வுட்டுப்புட்டாக, ஹரிணிக்கு ஒடம்பு கிடம்பு சரியில்லயோ என்னமோ... மத்தபடி திப்பு, ஸ்ரீநிவாஸ், பின்னி கிருஷ்ணகுமார், இசைக்குழுவிலிருந்து கிருஷ்ணா கண்ணா எல்லாரும் நல்லா பாடுனாங்க

என்னண்ணே இம்புட்டு நல்ல விஷயம் இருந்திருக்கு, அப்புறம் புடிக்கலன்னு சொன்னிகளே ஏன்?

அதில்லடே 6:30க்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி 7:45க்குதான் ஆரம்பிக்குது, சம்பிரதாயத்துக்கு ஒரு மன்னிப்பு கூட கேக்கலடே... காசுகுடுத்து வந்தவனெல்லாம் என்ன கேணமாக்கானா? அப்புறம் பொன்னாடை போர்த்த, காசு குடுத்த கம்பெனிக பேரெல்லாம் விளம்பரப் படுத்துறதுன்னு... நம்ம ஊரு ரசிகர்மன்ற கலைவிழா தோத்தது போ!

கோவம் வருத்தம்லாம் மறக்குறதுக்குதான் பாட்டு கேக்க போறது...நீங்க என்னடான்னா பாட்டு கேக்க போனதுனால கோவமா வந்துருக்கீக... தண்ணி நெறய குடிங்கண்ணே!

வ்வ்வ்வர்ட்ட்ட்டா....

Thursday, August 17, 2006

20 : 'கீதா' உபதேசம்

Photobucket - Video and Image Hosting
எதை நீ படித்தாய்
மறந்து போவதற்கு

எதை நீ புரிந்துகொண்டாய்
பரிட்சையில் கேள்விகள் புரிவதற்கு

என்று நீ ஒழுங்காக கல்லூரி வந்தாய்
வருகை கணக்கு குறையாமல் இருப்பதற்கு

எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ
அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்

எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ
அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்

எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
அது நாளை மற்றொருவனுடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடுகிறது

இதுவே கல்லூரி நியதியும்
ஃபிகர்களின் குணாம்சமும்.

சம்பவாமி யுகே யுகே!

கோகோஎன்னண்ணே, டிஸ்கி-ல ஓசிப்பதிவுன்னு ஒத்துக்குவீங்களா... இல்ல... நான் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு வண்டவாளத்த எல்லாம் தண்டவாளத்துல ஏத்தனுமா!

ரா.கு: ஆகா, தமிழ்கூறும் நல்லுலகுக்கு உன்னை அறிமுகப்படுத்தி ஒரு துரோகம் செய்துவிட்டேன். வலைப்பூ ஆரம்பிக்க வச்சு இன்னொருக்கா தப்பு பண்ண மாட்டேன் சாமீ! நன்றி ரவிக்குமார் (எனக்கு இத அனுப்பி வச்சதுக்கு)

Wednesday, August 16, 2006

19 : தொட்டால் பூ மலரும்

Photobucket - Video and Image Hosting

இந்த கதையின் கதாநாயகன் சேகரைப் பார்த்ததும் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று நெற்றி நீவுவீர்கள். அப்படிப்பட்ட அடுத்த வீட்டுப் பையன் முகம் அவனுக்கு. பிடித்தவைகளுக்காக எதையும் செய்யும் ஃபெவிகால் அன்புக்கு சொந்தக்காரன்.

அதே சமயம் அவர்கள் இன்னதைத்தான் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கும் ரகம். இவன் வாங்கி கொடுக்கும் வெற்றிலையை மட்டுமே அவன் பாட்டி மெல்ல வேண்டும். வேறு யாரோ வாங்கி கொடுத்தார்கள் என்றோ, அல்லது தாமதமாகி விட்டது என்று பாட்டியே வாங்கி மென்று கொண்டிருந்தார்களோ கெட்டது கதை. வாயிலிருப்பதை துப்ப வைத்துவிட்டு, வாய் கொப்புளித்து இவன் வாங்கி வந்ததை மெல்லும் வரை விடமாட்டான்.

கல்லூரி சென்ற முதல் வருடம் இவன் மொபெட் கேட்க பைக்கே வாங்கி நிறுத்தினார் இவன் தந்தை. இருப்பினும் இவன் கேட்ட மொபெட் கிடைக்காததால் அந்த பைக்-கை தொட மறுத்த கதையை கண்ணீரோடு மூக்கை சிந்திக்கொண்டு இன்றும் சொல்வார் இவன் அம்மா. நாள் தோறும் இவன் தலைகோதி தூங்க வைக்க வேண்டும். சர்க்கரை தூக்கலாக காஃபி இவன் படுக்கையறைக்கே வர வேண்டும். வீட்டுநாய் நாளைக்கு ஒருமுறைதான் நுகர வேண்டும். இப்படி ஏகப்பட்ட நல்லதும் கெட்டதுமான வட்டங்களுக்குள் வாழ்பவன். அவன் எதிர்பார்ப்பில் ஓரிரு சதவீதம் கூட நான் ஈடு செய்வதில்லை எனினும் என்னையும் ஏதோ ஒரு காந்தி கணக்கில் சேர்த்து நட்பு பாராட்டுபவன்.

சேகர் கொஞ்சம் கவிதைகள் எழுதுவான். தப்பித்தவறிக்கூட ஒன்றுமே பிரசுரமானதில்லை, அதற்காக துவளுகிற வம்சமுமில்லை நம் கதாநாயகன். பிரசுரமாகாவிடினும் எதுவும் திரும்ப வருவதில்லை என்ற மட்டிலேயே கர்வப்படுகிறவன். போதிய தபால்தலை இணைப்பதில்லை என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை உங்களுக்கு. வெள்ளைக்காகிதத்தில் கவிதையொன்றை எழுதி, மூன்றாக மடித்து, கவரில் திணித்து, எவ்வளவு பசையிருந்தாலும் எச்சிலால் மட்டுமே ஒட்டி, தபால்தலையை நாக்கில் ஊறவைத்து பின் ஒட்டி அஞ்சல் செய்யும் அழகை காண கண் கோடி வேண்டும்.

நாளொரு சிந்தனையும், பொழுதொரு கவிதையுமாக திரியும் அதுபோன்றதொரு சுபயோக சுபதினத்தில்தான், சேகர் பாஷையில் சொல்வதானால், தென்றல் க்ராஸ் ஆகியிருக்கிறது. தென்றலின் துப்பட்டா காற்றில் கலைய அதை சரி செய்யும் வேளையில் கையிலிருந்த காகிதங்கள் காற்றில் பறந்து நம் கதாநாயகனின் கனிமுகத்தில் கட்டிமுத்தம் (எத்தனை 'க' சே!) இட்டிருக்கிறது. காகிதங்களை எடுத்து கொடுக்கும் போது, அதில் கவிதை இருந்ததை, விரல்கள் உரசி மின்சாரம் பாயும் தருவாயில் கூட கவனித்துவிட்டான் க.க.சேகர்.

க.க. என்றால் என்ன என்று யோசிப்பவர்களுக்கு "தங்கவேட்டை" பாணியில் ஒரு கேள்வி.
க.க. என்றால்....
அ) கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ஆ) கதையின் கதாநாயகன்
இ) கழுகு கண்ணன்

இ) என சரியான விடையளித்தவர்கள் மட்டும் உங்களுக்கு நீங்களே க.க.க.போ சொல்லிக்கொண்டு மேலே தொடருங்கள், என்னது க.க.க.போ என்றால் என்னவா?...இல்லங்க உங்களுக்கும் எனக்கும் சரிப்படாது தயவுசெய்து வேறு பக்கம் போய்விடுங்கள்!

பிறகென்னங்க... சரி சரி நம் கதைக்கு வருவோம், அப்படியே கவிதை பற்றி கொஞ்சம், 2 ரூபாய் அரிசி, சிதம்பர ரகசியம் முடிவு, சிவாஜி ரஜினி, உனக்கும் எனக்கும் (something something சொல்லலாமா கூடாதா) த்ரிஷா, என்று கடலை வறுத்துவிட்டு வந்தவனுக்கு, துப்பட்டா சரி செய்வதும், கவிதை காகிதம் பறந்து வந்து க.மு.வில் க.மு இட்டதும், சிரிப்பிடையே தேங்க்ஸும் படத்திலெல்லாம் வருவது போல் வந்துவந்து போயிற்றாம்.

அடுத்தடுத்த சந்திப்புகளில் செடி வளர்ந்திருக்கும் போல, "செட்டாயிருச்சு மச்சி ஆனா கன்ஃபர்ம் பண்ணனும்" என்று என்னை ஆச்சரியப்படுத்தினான்.

அன்பே சிரிக்கும்போது
கையால் மறைத்துக்கொள்
தாயின் தலைமகன் நான்
மின்னலைப் பார்க்கக் கூடாதாம்!

என்ற கவிதையில் (?!) வரி ஒவ்வொன்றையும் இரண்டுமுறை படித்துவிட்டு கண்கள் அகல 'எப்படியிருக்கு' என்பது போல பார்த்தான். 'சூப்பர் மச்சி, உன் காதலையும் ஒரு கவிதையாய் எழுதி ஒரு ரெட் ரோஸும் வச்சுக் கொடுத்தன்னு வையு பத்திக்கும்டா' என்று திரி கிள்ளிப் போட்டு வந்துவிட்டேன்.

Photobucket - Video and Image Hosting
இரண்டு நாட்களாக ஆளைக் காணவில்லையாதலால் வீட்டுக்கே போனேன், 'மேல மாடியிலதாம் கெடக்கான், என்ன ஆச்சுன்னே தெரியல' என்று விலகினார் இந்த தலைமகனைப் பெற்ற தாய். அவன் அறையெங்கும் கசக்கியெறியப்பட்ட காகிதப் பந்துகள், நடுவே நம் கவிஞர். நான் கிள்ளிப்போட்ட திரிதான் புகைந்து கொண்டிருந்தது. தமிழில் பெண்ணைப் புகழும் அத்தனை வார்த்தைகளையும் கொட்டி ஒரு கவிதை தயாரித்திருந்தான்.

'டேய் நாளைக்குத்தான் என் 'லவ்'வ சொல்லப் போறேன், நீயும் எங்கூட வர்ற' என்று போட்டான் ஒரு 'பொக்ரான்'. திமிறி தப்பிக்க முயன்ற என்னை தாஜா அத்தனையும் செய்து சம்மதிக்க வைத்தான். என்னை உட்கார வத்து கவிதையின் வரி ஒவ்வொன்றையும் இரண்டு முறை வீதம் வழக்கம்போல் கவிதை வாசித்தான். அதில் எந்த வரிகளின் போது இவன் காதலி வெட்கப்படுவாளென்றும் அதை மூன்றாவது முறையாக வாசிக்க உத்தேசித்திருப்பதாகவும் கூறிக்கொண்டே போனான்.

'உன் காதலை ஏற்க மறுத்தால் என்னடா செய்வ' தயங்கியவாறே வந்த என் கேள்வியையும் என்னையும் புழுவினும் துச்சமாய் பார்த்தான், இத்தனை நாள் பழக்கத்தில் அவளை இவன் நன்றாகவே எடை போட்டிருப்பதின் அடிப்படையில் (ஹைஹீல்ஸ், டம்பப்பை சேர்த்து 53 கிலோ என்பது உட்பட) கூறியதாவது, அவளுக்கு இவன்மேல் ஒரு 'இது' இருப்பது கண்கூடு அதனால் மறுக்கவெல்லாம் மாட்டாளாம், ஆனால் ஆணான இவனுக்கே காதலை வெளிப்படுத்த இத்தனை நாட்கள் ஆகியிருப்பதால் அவளுக்கு இதைவிட பயமும் தயக்கமும் அதிகமாகவே இருக்கக்கூடும், கூடுமென்ன கூடும்... அதிகமாகவே இருக்கும். ஆனால் அதற்கு அவன் கவிதையிலேயே சமாதானம் இருப்பதையும் சுட்டிக்காட்டி, மறுநாள் இதுவன்றி வேறெதுவும் நிகழாது என தீர்மானம் நிறைவேற்றிய நேரம் நள்ளிரவு மணி 12.

இரவெல்லாம் எனக்கு கனவு மேல் கனவு. அவள் கத்தி ஊரைக் கூப்பிடுவது போலவும், ஊரே கூடி மாத்து மாத்தென்று மாத்துவது போலவும்... வியர்வைக் குளியலில் நெஞ்சப் படபடப்பு எத்தனை நீவியும் அடங்கவில்லை. கொசுக்களின் ரீங்காரம் வேறு சங்குபோல் ஒலித்து தொலைத்தது. ஏதோவொன்றை சொல்லி தப்பிக்கலாம் என்று அவன் வீட்டுக்கு போனால் கேட்கிற நிலையில் நம் ஹீரோ இல்லை.

அலமாரியிலிருக்கும் துணிமணிகள் வீடெங்கும் இறைந்து கிடக்க 'எதடா போடறது' என்றான். நானும் பொறுப்பாக சந்தனநிற சட்டையும் வெள்ளைநிற பேண்ட்-ஐயும் கொடுத்து 'மாப்ள மாதிரி இருக்கும், போடுறா' என்றதும் வெட்கத்தை பார்க்கணுமே... 'உதை நிச்சயம்டா மச்சி' என்று பட்சியின் குரல் மூலை(ள)யில் ஒலித்தது.

கேவலமான காம்பினேஷன் ஆனாலும் 'மாப்ள மாதிரி' என்றதற்காகவே போட்டிருப்பான் என்பது என் கணிப்பு. பீச்சுக்கு போகும் வழியில் பூக்காரபெண்ணிடம் சிவப்பு ரோஜா ஒன்றை வாங்கி, 50 ரூபாய் கொடுத்து, 'கீப் த சேஞ்ச்' என்றதில் ஆங்கிலப் புலமையை பூக்காரிக்கும், அவன் காதலின் ஆழத்தை எனக்கும் ஒருசேர புரிய வைத்தான்.

என்னை அறிமுகப்படுத்திய பின், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஏற்பாட்டின்படி நான் பஞ்சுமிட்டாய் வாங்கி வருவதாய் சொல்லி படகுக்கு பின்னால் மறைந்து கொண்டேன். எதிர்பாரா திருப்பமாய் அவளே ஆரம்பித்தாள். சேகரை அவள் காதலிக்கும் விஷயத்தை துப்பட்டா நுனி திருகாமலே தைரியமாய் சொல்லி முடித்தாள்.

Photobucket - Video and Image Hosting'நானும்தான்' என்று அணைத்திருக்க வேண்டும் நமது ஹீரோ, இந்த சிச்சுவேஷனுக்கு பீச்சாக இருப்பதால் ஒரு டூயட் கூட வைக்கலாமென்று நான் யோசிக்கும் வேளையில் திருப்பத்திற்கு மேல் திருப்பம். 50 ரூபாயை கசக்கி கீழெறிந்து மிதித்து, கவிதையையும் கிழித்து எறிந்துவிட்டு என்னையும் கூப்பிடாமலே, கோபமாய் கிளம்பி விட்டான். எனக்கோ பாட்டி-வெற்றிலை, அப்பா-பைக் என சகலமும் ஞாபகத்திற்கு வர தென்றலை தேற்றும் முயற்சியில் ஈடுபட்டேன். தேம்பித் தேம்பி அழுதபடி என் தோள் சாய்ந்தது தென்றல். ஆறுதல் சொல்ல வந்தவனுக்கு "ஹையோ பத்திக்கிச்சு".

டிஸ்கி : இந்த கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள், கதாபாத்திர குணநலன்கள் அனைத்தும் கற்பனையே, இவை எவையும் என் உதவாக்கரை நண்பர்களையோ, உயிருக்குயிரான எதிரிகளையோ குறிப்பிடுபவன அல்ல!

Tuesday, August 15, 2006

18 : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!


Photobucket - Video and Image Hosting

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல சாதனை செய்வோம்!

சுதந்திரதினம், குடியரசுதினம் எல்லாம் எங்கள் பள்ளி வாழ்க்கையில் மிக முக்கியமான தினங்கள்.

எல்லாம் ஒரு நனவிடை தோய்தல்தான்!

Friday, August 11, 2006

17 : கோகோ - அறிமுகம்

Photobucket - Video and Image Hosting

போன மாத போட்டிக்கு(மரணம்) வந்த மொத்த ஆக்கங்கள் 80. ஆனா இன்னும் 10 நாட்கள் இருக்க இப்போதே 44-ஐ எட்டி விட்டது, இந்த மாதத்திற்கான(உறவுகள்) பதிவெண்ணிக்கை.

கோகோ
கோகோ:என்னண்ணே 20 நாளைக்கு 80, 10 நாட்களுக்கு 44 கிட்டத்தட்ட சரியாத்தானே இருக்கு விகிதம்...,

அட கோட்டிக்கார கோவாலு போட்டின்னா முதலில் குறைந்த அளவே பதிவுகள் வரும்...கடைசி ஆகும்போது ஒரு ஜுரம் வந்து வரிசையாக வரும் பாரு! எனவே இந்த முறை எதிர்பார்க்கப் படும் எண்ணிக்கை 110.

அது சரி மரணத்தை விட உறவுகளை விரும்பும் தலைகள்தானே எண்ணிக்கையில் அதிகம்.

கோகோ
கோகோ: நீங்க சொன்னா சரிதானுங்ணா... அதுவும் சினிமா விமர்சனம்லாம் போட்டிக்குன்னு அனுப்ச்சு வச்சா 110 என்ன 120-ஏ வரும்

அடிங்... சரி நா விஷயத்துக்கு வரேன்

8 - (கட்டுரைகள் மற்றும் +)
16 - சிறுகதைகள்
20 - கவிதைகள்

என்று இந்த நிமிடம் (Aug 11, 2006-01:45 சன் ம்யூசிக்கில் தேவுடா தேவுடா கேட்கும் விநாடி) வரை கவிதைகளே முதன்மை வகிக்கிறது.

அதுவும் ஆசாத் அவர்களை குறிப்பிட்டே ஆகவேண்டும். புதுக்கவிதை எழுதியிருக்கிறார், உனுக்கும் எனுக்கும் உறவிருக்கு அஞ்சல-ன்னு கானா பாடி கலக்கியிருக்கார் பாட்(டு)காஸ்டிங்ல, அட கட்டளைக் கலித்துறையில் மரபுக் கவிதையையும் உரசிப் பார்த்திருக்கிறார்.

அசத்துங்கஜி!

கோகோ
கோகோ:சரிப்பா, உறவுகள்-னு தலைப்பு கொடுத்தா பாதிக்கு மேல் முறையற்ற உறவுகள பத்தியே வந்திருக்கே அத பத்தி நீ என்ன நெனைக்கிற


அட கோகோ... பெரியவங்க இருக்ற சபையில எதத்தான் கேக்றதுன்னு விவஸ்தை இல்லயே. சொல்ல மறந்துட்டனே, இவன் பேரு கோகோ-ங்க... இவரு கொள்கை "சந்தேகம் வந்துருச்சுன்னா கேட்டுடோனும், கருத்துன்னு வந்தா சொல்லிப்புடோனும்" அவையடக்கம் துளிகூட கிடையாது. வசதிக்கேத்த மாதிரி நம்மள அண்ணா, தம்பி, அடாபுடா, போடா வாடா பொட்டக்கண்ணா-னு எப்டி வேணா கூப்டுவானுங்க. நாமதான் பாத்து இதெல்லாம் கத்துகுடுக்கனும். யாரது ப்ர்ர்ர்ர்ர்-னு சிரிக்கிறது. தொரை இனிமேல் அப்பப்ப நம்ம வூட்டாண்ட வருவாரு.

அலைகடலென வாரீர்.... ஆதரவு தாரீர்!

பாலா வாத்தியார் வந்த 44 படைப்புக்கும் மார்க் போட்டிருக்கார் அதயும் நீங்க ஒரு பார்வை பாத்துருங்க

இப்போதைக்கு வர்ர்ர்ர்ர்ட்டா!

Monday, August 07, 2006

16 : பாதுகாப்பு உறவு - போதும் காப்பு உதறு

பாதுகாப்பு உறவு - போதும் காப்பு உதறு

Photobucket - Video and Image Hosting

மு.கு : உறவுகள் பற்றி அம்மா-மகள் இடையே நடக்கும் உரையாடல்

மலையேறிப் போனாலும்
மச்சினமார் ஒறவு வேணும்

தாலி எடுத்துக் கொடுக்கவேனும் - அவந்
தங்கச்சிங்க தயவு வேணும்

ஒதவிக்கு யாரிருக்கா, அவசர உலகமிது
ஒறவு தான்டி பாதுகாப்பு


ஒறவுன்னா பறக்க வைக்கும் சிறகு இன்னீங்க
சருகாகிப் போனதெல்லாம் எங்க சொன்னீக

சொந்தமுன்னா சொமதான
பந்தமுன்னா பளு தான

-#-

சமஞ்ச சிறுக்கி உனக்கு
குச்சுக் கட்டி குடிவச்சானே
எங்கண்ணம்பய ஒம் மாமந்தானே


அவம் டவுசர புடிக்கிததுக்கே
டவுனுல ஆள் புடிக்கனும்

மூக்கொழுக்கி நின்ன பய - மொகரைய நான்
முழுசாக்கூட பாக்கலயே
-#-

ஒறவுன்னா வரவுதானே
மொய்க் கணக்க யோசிச்சுப் பாரேன்


மொய் வச்சு மொய் எடுக்கும்
பொய்க் கணக்க சொல்லித் தாரேன்

அன்பளிப்பு இன்னு சொல்லி
அன்பழிப்பு நடக்கு தங்கே
-#-

மாமம் மவம்மேல மஞ்சத் தண்ணி
ஊத்துனவதான நீ உறவ எண்ணி

காதலெல்லாம் தனி உறவு
கணக்குல சேக்காதீக

வாக்கு கொடுத்தேன்னு வாழ்வழிச்ச கதநூறு
வயிறெரியுது, என்னெதுவும் கேக்காதீக
-#-

புகுந்தவீடு புது உறவும்
புருசன்காரன் புன்சிரிப்பும்
புடிக்கலயா சொல்லு புள்ள


விளக்கேத்த வந்தவள, மாமியா மவராசி
நெருப்பேத்தி கொன்னுருப்பா

மச்சினஞ் சீரு கொண்டு வந்தான் எந்தம்பி
மறு சென்மம் கண்டு வந்தேன் தலைதப்பி
-#-

ஒங்கொழந்த பொறந்தப்போ
சீர் செனத்தி தந்ததாரு
சேன தொட்டு வச்சதாரு


பாலுக்கழுதவன பகாசூரன் இன்னு சொன்னா
காலுல சலங்கைகட்டி சண்டைக்கு வந்து நின்னா

பாதகத்தி ஓரகத்தி - இந்த
வங்கொடுமை எதுல சேத்தி

-#-
அழுதா தாங்காதே
அவங்கண்ணு தூங்காதே
அரவணச்சு காத்து நிக்கும்
அண்ணங்காரன் ஆவலியோ


பாசமலர் பரம்பரையில்
நேசங் கொறையாம நின்னவந்தான்

மதினியிட்ட மந்திரமோ
மாமஞ் சீர் செய்யலியே

-#-

சொக்கட்டான் ஆடினாலும்
அக்காகிட்ட தோத்து நிப்பா
எங்கக்கா போல உண்டா
எட்டூரு சொல்லி வப்பா

தங்கச்சி எளம் பிஞ்சு
தப்புன்னு என்ன செஞ்சா?

எவளும் எடம் கொடுக்காட்டி
எம் புருசன் ராமந் தான்

சமஞ்ச சிறுக்கியவ
சந்தைக்கெல்லாம் எதுக்கு வாரா
சக்களத்தியா வருவாளோ
சந்தேகம் வந்து நிக்கி

முழுச்சீல கட்டுறப்போ முடிஞ்சாக்க சொல்லி விடு
கலியாணம் காதுகுத்து கண்டிப்பா நான் வாரேன்!

-#-

ஏட்டி கருவாச்சி...
பாட்டி மேல என்ன கோவம்


வெத்தல கேட்டு வந்தா
வேத்தாளா பாத்து நிக்கா

பாடையில போகையிலும்
பாம்பட மெனக்கு இல்லங்கா

-#-

தாயேன்னு நீ சொன்னா
கலங்கி நிக்கும் எங்கண்ணு

அதாவது உறவுதானா
அதுவுங் கொஞ்சம் கொறவுதானா


புள்ள வலி யெடுக்கையில
பொறந்த வழி நானறிஞ்சேன்

அம்மான்னு

எம்மவஞ் சொல்லையில
எம்மா ஒன் ஞாபகந்தான்

எந்தாயே நீ மட்டும்

எப்போதும் விதி விலக்கு - ஒன்ன
ஒறவுன்னாலும் கொறவுதாண்டி
உசுருன்னாலும் கொறவுதாண்டி!

Sunday, August 06, 2006

15 : உறவும் பிரிவும்!

அன்று நல்ல மழை, அடுப்படியிலிருந்து வெங்காய பஜ்ஜி வாசனை, முறுகலாய் வந்துகொண்டிருந்தது. ரேடியோவில் பொருத்தமாக மழைப்பாடலொன்று அன்றைய தினத்திற்கு ரம்மியம் சேர்த்துக் கொண்டிருந்தது. அப்பாவின் TVS-50 சத்தத்தை எப்படித்தான் அம்மா கண்டுபிடிக்கிறார்களோ, அம்மா வாசலுக்கு ஓடுவதற்கும் அப்பா வருவதற்கும் சரியாக இருந்தது.

வண்டியில் இருந்த சாமான்களை வாங்குவதற்கு நானும் வாசல் விரைந்தேன். காய்கறி பைகளை அம்மாவிடம் கொடுத்து விட்டு, என்னிடம் ஒரு சிறுகூடையை கொடுத்தார் சற்றே குறும்பான புன்னகையுடன். புரியாமல் வாங்கி பார்த்த நான் அதிர்ச்சியில் கீழே போட்டாலும் போட்டிருப்பேன். உள்ளே கண்கள் கூட இன்னும் திறக்காத நிலையில் ஒரு நாய்க்குட்டி இருந்தது, பாலைவன மணல் நிறத்தில்.

என் தந்தை கணக்கெழுதும் இடத்தில், மழைக்கொரு நாய் ஒதுங்கி இரண்டு குட்டிகளை ஈன்றிருக்கிறது, முதலாளியின் உறவினர் ஒருவர் தாயையும் ஒரேயொரு குட்டியை மட்டும் எடுத்துக் கொண்டாராம். மிச்சமிருக்கும் ஒரு குட்டியை என்ன செய்வதென்று தெரியாதவர் என் தந்தையிடம் கொடுத்து எங்காவது காட்டில் விட்டுவிடச் சொல்லியிருக்கிறார். மழையில் அந்தக்குட்டி என்ன செய்யும் என்றெண்ணி எங்கள் வீட்டுக்கு எடுத்து வந்து விட்டார்.

இந்த இடத்தில் என்னையும் என் அம்மாவையும் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும், எங்களுக்கு நகரும் உயிரினங்கள் எதைப் பார்த்தாலும் மயிற்கூச்செரியும், முக்கியமாக பூனை மற்றும் எலி. அவைகளை பார்த்தால் போதும் நடுமுதுகுத் தண்டில் மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு நிமிடம் நடுங்கி அடங்கும். கல்லூரிக்கு செல்லும் வயது வந்தும், நாய்கள் மீது அப்படி ஒரு பயம் இருந்தது எனக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.

முதலில் அதன் அருகில் செல்லக்கூட எங்களுக்கு தயக்கமாக இருந்தது, அப்பாதான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். மிக லேசான வேஷ்டித்துணியை பாலில் முக்கி அதன் வாயருகில் வைக்க, கண்ணைக்கூட திறக்காமல், மிகச்சிறிதாய், மிக மிகச்சிறிதாய் வாய் திறந்து சுவைத்த அழகு இருக்கிறதே... வானவில் உதயமாகிக் கொண்டிருக்கும் தருணத்தில் மிகச் சரியாய் வானம் பார்க்கின்ற அழகுக்கு ஈடு அது! அப்பாப்பா...நானுப்பா என்று நான் பாலூட்டினேன், எதேச்சையாய் அதன் மெல்லிய உதடுகள் என் விரல் தொட அந்த மின்சார அதிர்வில் என் பயமனைத்தும் விலகியது. அதன்பின் அது கண் திறந்த நாள், மெலிதாக விசிலடிப்பது போல் சத்தமெழுப்பிய நாள், நடந்த கணம், ஓடிய தினம், மாடிப்படியேறிய மாலை எல்லாமே நாட்குறிப்பில் ஏறியது.



மற்றுமொரு சுபமுகூர்த்த மழைநாளில் அதற்கு 'மணி' என பெயர் சூட்டுவிழாவும் நடந்தேறியது. என் ஓய்வு மணித்துளிகள் அனைத்தையும் மணியுடன் செலவிட எங்களுக்குள் இயல்பாய் ஓர் உறவு மலர்ந்தது. ஹட்ச் இணைப்பு போலே எங்கு சென்றாலும் எனைப் பின் தொடர்ந்தது மணி. என்னுடன் மாடிப்படிகளில் விரைவாக ஏறி இறங்குவது, பந்து விளையாடுவது என்று சரிக்கு சரி போட்டி போடும். மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு மணியுடன் கதைப்பது, என் அன்றாட நிகழ்வில் ஒன்றாகிப் போனது. இதற்குள்ளாய் என் அம்மாவின் உற்ற தோழியாகவும் மாறி விட்டிருந்தது மணி.

தோழி என்றா சொன்னேன், ம்... சரிதான். அது பெண் நாய் என்பதை வெகு நாட்களுக்கு பின்தான் கண்டு கொண்டோம், பெயரை மாற்றி விடலாமா என்று கூட யோசித்தோம். அம்மாதான், "மணிமேகலை, மணியம்மைன்னு எதையாவது நெனச்சுக்கடா... மணின்னே கூப்பிடுவோம்" என்று அந்த யோசனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். மணி பெண்ணாயிருப்பதில் எங்களுக்கு ஒன்றும் வருத்தம் இருக்கவில்லை, அந்த ஒரு பிரச்னை வரும் வரையில்.

திடீரென்று, நிறைய நாய்கள் எங்கள் வீட்டைச்சுற்ற ஆரம்பித்தன, முக்கியமாக இரவுகளில். குறைப்புச் சத்தங்களும், அவைகளூடே நடக்கும் சண்டைகளும் தங்களை தூங்கவிடாமல் செய்வதாய் அக்கம் பக்கமிருந்து புகார்கள் வர ஆரம்பித்தன. நானும் என் அப்பாவும் ஆச்சரியப்படும் வகையில், மணிக்காக வரிந்து கட்டிக்கொண்டு அம்மா எல்லோரிடனும் சண்டையிட்டார். நாங்கள் பொறுமையின்றி சலித்துக் கொள்ளும்போது கூட எங்களைத்தான் அதட்டுவார்.

நாங்கள் ஆச்சரியப்படும் வகையில் இரண்டொரு வாரங்களில் சத்தம் சுத்தமாக குறைந்து விட்டது, இப்போதெல்லாம் மணி தட்டில் வைக்கும் சாதத்தை நொடிப் பொழுதில் தின்று தீர்த்தது. "எம்மா மணிக்கு பானை வயிறாய்டுச்சும்மா.. சாதம் வச்சுட்டு இப்டின்றதுக்குள்ள சாப்ட்டு முடிச்சுடுது" என்றதுக்கு என் அம்மா சொன்னதுதான் சில பல விஷயங்களை விளக்கியது, "ச்சீ சும்மா இருடா... அது மாசமா இருக்கு"!

அடுத்தடுத்த மூன்று வாரங்களில் சாப்பிடுவதை வெகுவாக குறைத்துவிட்டது, எதையாவது மென்று கொண்டேயிருக்கும் ஆனால் வைத்த சாதம் அப்படியே இருக்கும். நானோ என் தம்பியோ முட்டை சாப்பிட்டு வந்தாலே முகம் சுளிக்கும் என் அம்மா, அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து எலும்புத்துண்டை போடச் செய்தார்கள். பின் வந்த மூன்று வாரங்கள் கொஞ்சம் இறைச்சியும் கிடைக்குமாறு பார்த்துக் கொண்டோம். நாய் வளர்ப்பைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அந்த கருத்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டது. மணியை துரத்திவிடுவதில் அக்கறையாய் இருந்த அண்டை வீட்டார்கூட, கர்ப்பமுற்றிருந்த மணியின் மேல் பாசம் காட்டினார்கள்.

இடி முழங்கி, மின்னல் வெட்டி, மழை பொழியாத, நான் கல்லூரி சென்று திரும்பும் மிகச் சாதாரண தினம் முக்கியமானதாகியது. எங்கள் வீட்டில், ரேஷன் கார்ட் நீங்கலாக உறுப்பினர் எண்ணிக்கை ஒன்று அதிகமாகியது. நாய்கள் விஷயத்தில் ஒரேயொரு குட்டி ஈனுவது கொஞ்சம் ஆச்சரியகரமான விஷயம்தான் எனினும் ஒரு குட்டிதான் ஈன்றது மணி. இம்முறை பால் கொடுப்பதற்காக எந்த வேஷ்டியும் கிழியவில்லை. மணி அதன் குட்டியை விட்டு எங்கும் நகரவில்லை, நாங்கள் அதனருகில் வந்தால் கூட கொஞ்சம் சந்தேகத்துடன்தான் பார்த்தது. அவையிரண்டும் போடும் ஆட்டங்களில் எங்கள் வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பானது.

வெகு சீக்கிரம் ஜூனியர் மணியும் என்னுடன் விளையாடும் அளவு வளர்ந்து விட்டது. அதையும் மணியென்றே அழைத்தோம், மணியென்ற அழைப்புக்கு இரண்டும் ஓடிவரும் காட்சி, ஒரு அற்புதம். அப்போது மீண்டும் அதே பிரச்சினை தலை தூக்கியது. மறுபடியும் நாய்கள் எங்கள் வீட்டை வட்டமிட ஆரம்பித்தன. இம்முறை அக்கம் பக்கமிருந்தும் மிகக் கடுமையாக நெருக்கடிகள் வர ஆரம்பித்தன. மேலும், பக்கத்து வீட்டுக்காரர், எங்கள் வீட்டு உரிமையாளரிடம் புகார்கூற நெருக்கடி அதிகமானது. பலமணி நேர விவாதத்திற்கு பின் குட்டியை வைத்துக் கொள்வதென்றும், மணியை மட்டும் எங்காவது விட்டுவிட்டு வந்து விடுவதென்றும் முடிவு செய்தோம்.

அந்த ஞாயிற்றுக்கிழமை மிகக் கொடுமையாக விடிந்தது. எனக்கோ அப்பாவுக்கோ இதை செய்வதில் கொஞ்சமும் இஷ்டமில்லை. ஆனாலும் அக்கம் பக்கம், வீட்டு உரிமையாளர் என எல்லோருக்கும் சொல்லியாயிற்று, அதை வேடிக்கை பார்க்க வேறு கூட்டமும் சேர்ந்து விட்டது, இனி பின் வாங்க முடியாது. "சாக்குல கட்டி கொண்டுபோய் ஊருக்கு வெளில இருக்ற காட்டுல விட்டுருங்க இல்லன்னா திரும்பி வந்துரும்" கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் ஆலோசனை கூறினார். "இதுக்கு மட்டும் வந்துருங்கய்யா" என மனதில் நினைத்துக்கொண்டேன்.

மறுநாள் கல்லூரியில் கவனமேயில்லை. அப்படியொரு காரியத்தை எப்படித்தான் செய்தோமோ தெரியவில்லை. அந்த பாவத்தின் சுமை மிகவும் தாங்க முடியாததாய் இருந்தது. வீட்டுக்கு திரும்பும் வழியில் நெடுஞ்சாலையில் அடிபட்டு இறந்துபோன நாயொன்று கண்ணில்பட்டு இம்சித்தது.

தனிமை ஆறுதல் தரலாம் என்றெண்ணி மொட்டை மாடி வந்தேன், எனை உரசிக்கொண்டு முன்னே ஓடிச்செல்லும் மணி சற்றென்று நினைவில் வந்து சென்றது. மணி எங்கேனும் காட்டில் அதற்கு பிடித்த உணவு உண்டு, அதன் விருப்பத்திற்கு வாழ்ந்து கொண்டிருக்கும் என்று சமாதானப்படுத்திக் கொண்டாலும் ஆற்றுப்படுவதாயில்லை என் மனம். திடீரென்று கால் விரல்களுக்கிடையில் வெதுவெதுப்பாய் உணர்ந்தேன். ஜூனியர் மணி என் கால் நக்கி வாலாட்டிக் கொண்டிருக்கிறது.

இக்கதை இங்கு முடிகிறது! உண்மைதான், தயவுசெய்து ஒரு அடி கூட அடுத்து படிக்காதீர்...

தன் தாயிடமிருந்து பிரித்த எங்களிடமும் அன்பைப் பொழிகிறதே, நன்றி கொன்ற மாந்தர்க்கும் நன்றி காட்டும் 'வள்'ளுவப் பண்பை எங்கு கற்றிருக்கும் இந்த ஜீவன்! - என்று தத்துவ விசாரணையுடன் முடித்திருக்கலாம்.

மறுநாள் காலை பழக்கமான குரலுக்கு விழித்தெழுந்தேன், வாசலில் இன்ப அதிர்ச்சி, மணி நின்றிருந்தது! எப்படியோ வீட்டை கண்டுபிடித்து வந்திருந்தது. சந்தோஷத்தில் குதித்து வீட்டை இரண்டாக்கினேன், தெருவே மணியை "தேவர் பிலிம்ஸ்" ஜீவனாக பார்க்க, அதன் பின் கதாநாயகி அந்தஸ்துடன் ஊரை வலம் வந்தது மணி - என்று சுபம் போட்டிருக்கலாம்.

இக்கதையை எழுதிக் கொண்டிருக்கும்போது குரைத்த பக்கத்து வீட்டு நாயை கொலை செய்ய முடிந்தால் தேவலை - என்று ஒரு வரி சேர்த்து, படித்துமுடித்ததும் வாசகனை அதிர்வுக்குள்ளாக்குவதே 'எளக்கியம்' என்றிருக்கலாம்.

பெண் நாய் எனுமிடத்தில் வெறுமனே பெண் என்று வாசித்து, ஒற்று நோக்கி இக்கதைக்கு நீங்களே ஒரு அர்த்தம் கொடுத்துக் கொள்ளாதீர்கள் - என்று ஒரு டிஸ்கி போட்டு சமூகப் பார்வையை உள் வைத்திருக்கலாம்.

இது எதுவுமே நிகழாததால், என் கால்விரல்கள் ஈரமான பொழுதையே கதை முடிந்த கணமாய் பாவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

14 : கண்ணீர் அஞ்சலி

Photobucket - Video and Image Hosting

பறவைக் காய்ச்சல் பயமா... அஞ்ச வேண்டாம் தோழர்களே இதோ வந்து விடுகிறேன்

"தங்கச்சிய நாய் கட்சிச்சிபா"... அப்படியா சற்றுப் பொறு
(என் சீன பயணத்தில் நான் நட்புடன் தடவிக் கொடுத்த ஜீவனொன்று உயிரற்று போயிருக்கலாம், இப்போது)

மன்னரே புரட்சி வருவது போல் தெரிகிறது... யாரங்கே!

அஞ்சலி : எல்லா உயிர்களுக்கும்
கண்டனம் : மாற்றுவழிகள் கண்டுபிடிக்கும் பொறுமை/பொறுப்பு அற்ற சமூகத்திற்கு!
சிந்திக்க : பயம்தான் நம் கொலைவெறிக்கு ஊற்றுக் கண்ணா?

டிஸ்கி1: மேலே கண்டுள்ள எல்லா சங்கிலியிலும் சீனம் வந்திருப்பது ஒரு தற்செயல் நிகழ்வே... இது எல்லா தேசங்களிலும் நடக்கும் பொது(?)வான ஒரு செயலே!
டிஸ்கி2: இப்பதிவுக்கு வரும் எவ்வித பின்னூட்டங்களுக்கும் நான் பொறுப்பல்ல!

காரணம் : நான் வசிப்பது சிங்கையில்

Wednesday, August 02, 2006

13 : வலைப்பூ நண்பர்களுக்கு



உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!

நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன்...

12 : மூன்று...முப்பது...மூப்பது

வலையுலகப் பிதாமக்கள் பதிவு பதிவா போட்டப்ப கூட நம்பலீங்க... சர்ச்சைக்குரிய பதிவு போட்டால் பின்னூட்டச்சத்து கிடைக்கும்னு... பாருங்க இன்னிக்கு உண்மையாகிப் போச்சுது! இன்னாடா இருபதுக்கே சலம்பலான்றீங்களா, நம்ம எழுத்துத் திறமை(?)க்கு இதுவே அதிகம்தானுங்களே!


வாழ்வின் உன்னத விஷயங்கள் மிகச் சாதாரணமானவை அப்படின்னு சும்மாவா சொன்னாங்க... கருப்பு வெள்ளை-ல வாழ்க்கைய சொல்லிருச்சு பாருங்க மேல உள்ள படம்! (To put life in black and white)

11 : திரை விமர்சனம் - உயிர்



நடிகர்கள் - ஸ்ரீகாந்த்
நடிகைகள் - சங்கீதா(ரசிகா), சம்வ்ருதா (என்ன பொருளோ?)
இயக்குனர் - சுவாமிநாதன்
இசை - ஜோஷுவா ஸ்ரீதர்

கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணி என்ற ஒரு வரிக் கதைதான் கரு. இயக்குனர் கூற்றுப்படி இது அவர் ஊர்ப்பக்கத்தில் நடந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாம்!

பார்க்கும் போது பெரும் கலாச்சார அதிர்வையெல்லாம் ஏற்படுத்தவில்லை, ஆனால் இணையத்திலும் மற்றும் ஊடகங்களிலும் விமர்சனங்களை படித்தால் மற்றொரு குஷ்பு சமாச்சாரம் புகைக்கப் பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு ஒன்று, சரி நமக்கெதற்கு அரசியல்... படத்திற்கு வருவோம்!

ஸ்ரீகாந்த்துக்கு 'கனா கண்டேன்' போலொரு நிறைவான கதாபாத்திரம், ஆனால் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதிலும் அதே பாணி!

சம்வ்ருதா...குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களை இன்னும் கொஞ்ச காலத்திற்கு நிரப்ப வந்திருக்கும் அழகான புதுவரவு. பாடல்களில் இன்னும் கொஞ்சம் உற்சாகம் காட்டியிருக்கலாம், எனினும் தன் பங்கை நிறைவு செய்திருக்கிறார், தன்னளவில்.

சங்கீதா, பாத்திரத்தேர்வு மிகச் சரி என்று நிரூபித்திருக்கிறார். வெறும் கண்களாலும், எல்லை தாண்டாத கவர்ச்சியிலுமே தன் பாத்திரத்திற்கு மெருகேற்றியிருக்கிறார். எவ்வளவோ வாய்ப்புகள் படம் நெடுக இருந்தும் எல்லை மீறாததற்காகவே இயக்குனருக்கு ஒரு சபாஷ்! (சற்றே கண்ணெரிச்சல் மற்றும் வயிற்றெரிச்சலுடன்)

சம்வ்ருதா மற்றும் ஸ்ரீகாந்த் கான்வெண்ட் பள்ளியில் அக்குழந்தைகள் அறிமுகப்படுத்தி வைக்கும் காட்சியில் வசனகர்த்தாவுக்கு கற்பனை வறட்சி, அதை விஞ்சி நிற்கிறது "கான்வெண்ட் சொல்லித்தரும்... " என்று ஆரம்பிக்கும் பாடல்.

இசை, ஸ்ரீகாந்த் அண்ணன், மற்றும் அந்த நண்பர் குழு இட்டு நிரப்பும் வேலையை மட்டுமே செய்கிறது.

அண்ணன் கதாபாத்திரத்தின் தற்கொலையாலும், தன் மகளின் மேல் வேண்டுமென்றே பால் கொட்டும் காட்சி-கதையமைப்பிலும், 'நான் செத்திருந்தால், என் தங்கச்சிய உங்கண்ணனுக்கு கட்டி வெச்சிருப்பாங்கல்ல' என்ற கேள்வி ஏற்படுத்த வேண்டிய பாதிப்பு சுத்தமாக இல்லாது போய்விடுகிறது. இந்த வசனத்திற்கு அட ஆமாம்ல என்று உறுத்தல் இல்லாமல் சொல்ல முடிவதில் தெரிந்து விடுகிறது நம் சமூக அமைப்பின் 'வள்ளல்'. ஸ்ரீகாந்த் அண்ணன் இயற்கையாக இறந்திருந்து, சங்கீதா இன்னும் பாசமிக்க தாயாகவும் இருந்திருப்பின் அக்கேள்வியின் தாக்கம் முழுமை பெற்றிருக்கலாம்.

குறைந்த பட்சம், "நீ நீயா இருந்திருந்தின்னா பிரச்னையே இல்லைய்யா...நம்ம காதலிக்கும்போது இத அத சொல்லி என்னை ஏமாத்திட்டியே..." என்ற ரீதியில் சங்கீதா பேசும் வசனத்திற்கு பதில் அதை இன்னும் விரிவாக காட்சிப் படுத்தியிருக்கலாம்

இன்னும் கொஞ்சம் சிரத்தையெடுத்து, நடுநிலை வழுவாமல், தனி மனித உணர்ச்சிகள் மற்றும் உறவுமுறைகளூடான சிக்கல்களை பிம்பப்படுத்தியிருந்தால் ஊடகங்களில் இதையொற்றிய ஆரோக்கியமான விவாதமொன்றை இப்படமே துவங்கி வைத்திருக்கும்.

மொத்தத்தில், நம் சமூக அமைப்பின் உறுதூண்களாக விளங்கும் உறவுமுறைகளுக்கெதிராக, தனி மனித உணர்ச்சிகள் எழுப்பும் கேள்வியே உயிர். கலாச்சாரக் காவலர்கள் அஞ்சும் விளைவுகள் இந்த படத்தை பார்ப்பதால் மட்டுமே நேர்ந்து விடாதென்றே நினைக்கின்றேன்!

Tuesday, August 01, 2006

10 : சமீபத்தில் நாங்கள் பார்த்த திரைப்படங்கள்


ஆறு இண்டெர்வெல், ஒரு கைமுறுக்கு தேங்காய் பர்பியோடு மண்ணு குவிச்சு டூரிங் டாக்கிஸ்-ல படம் பாக்றதுல ஆரம்பிச்சு, ஆர்த்தி.. ஆர்த்தி... ஆர்த்தி-ன்ரச்ச கை தட்டி வந்துருக்ற அம்முணிங்கள குஷிப் படுத்திட்டு படம் பார்க்கிற கோவை தொட்டு, தாம்பரம் வித்யா, குரோம்பேட்டை வெற்றி ராகேஷ், பல்லாவரம் ஜனதா, லட்சுமி... அபூர்வமா தேவி..அதவிட அபூர்வமா சத்யம்-னு கலைச்சேவை செஞ்ச காலத்துலயும் (மணீஸ்... ஜோதி-லாம் போனதில்லீங்னா, நல்ல பசங்க நாங்க)... அதுக்கப்றம் போனா க்ளாஸான தியேட்டர்க்குதான் மச்சி போகனும்னு பூனே ஐனாக்ஸ், கோவை செந்தில்-குமரனில் கிங்-ஸ், சிங்கையில் யிஷுன் அப்டின்னு தேடி தேடி போன நேரங்களிலும்... ச்சீ எல்லாம் குப்ப படம்டா இனிமேல் CD எடுத்தே பார்த்துக்கலாம்-னு முடிவெடுத்த கணங்களிலும் எங்ககிட்ட மாறாம இருந்த ஒரே விசயம், படம் பார்க்கின்ற ஆர்வம்!

படம் எடுத்த இயக்குனர், தயாரிப்பாளராலேயே பாதி படத்துக்கு மேல் உக்கார முடியாத படங்களைக் கூட 'விக்கோ' பூசுமஞ்சள் தூள் விளம்பரத்திலிருந்து வணக்கம்/சுபம் போடும் வரை உட்கார்ந்து பார்க்கும் ரசிக சிகாமணிகள் நாங்கள். சில படங்களை பார்த்த பிறகு நாங்கள் பேசிக் கொள்வது இப்படித்தான் இருக்கும்

"யப்பா பின்னிட்டாண்டா டைரக்டர்... என்னா ஸ்கிரிப்ட்... "
"ஆர்டிஸ்ட் செலக்க்ஷன சொல்டா... இவந்தான் இந்த கேரக்டருக்குன்னு எப்டிதான் ஃபிக்ஸ் பண்றாய்ங்களோ"
"ம்யூசிக்... படத்துல ஃபர்ஸ்ட்-ல வர்ற பாட்ட சும்மா ஒரு நூறு தடவ கேட்ருப்பமா...இன்னும் சலிக்கல பாரேன்"
"ஓடற எல்லா தியேட்டர்லயும் 100-150 ன்னு வருஷக் கணக்கெல்லாம் தாண்டி ஓடுதுன்னா சும்மாவா"
"மவனே கேமரா பத்தி சொல்லாம விட்ருவ... ஹீரோயின் ஆப்பிள் கடிக்கும்போது அந்த பல் வரிசை-ய எடுத்துருப்பான் பாரு...ம்ம்மா அல்ட்டிடா"
"கரும்ப பல்லாலயே கடிக்கிற ஃபைட் சீன் கூட சூப்பர்ரா... ஆனா எத்தன பேர் இந்த ஷாட்-லாம் இப்டி அனுபவிச்சு பார்த்துருப்பான்ற"
"கரெக்ட்றா ஃகன்ஸ்(Gans)... பேசாம செகண்ட் ஷோ இருந்து அந்த விக்கோ வஜ்ரதந்தி விளம்பரத்த மட்டும் பார்த்துட்டு போயிரலாம்... என்ன சொல்ற"
"போன ஷோவிலயே அப்டி போயிருந்தோம்னு வை அடுத்து வந்த அந்த கொடுமையில இருந்து தப்பிச்சிருக்கலாம்... சரி வா வா..."

ஆனாலும் அடுத்து அதே இயக்குனர் (அ) நடிகரின் படத்துக்கு கொஞ்சம் கூட கூச்சமில்லாம போய்ட்டு வருவோம்... இப்டியாப்பட்டவங்களோட விமர்சனத்தையும் நீங்க படிப்பிங்கன்னா... பின்னூட்டத்துல சும்மா ஒரு ;-) போட்டுட்டுப் போங்க

சமீபத்தில் நாங்கள் பார்த்த திரைப்படங்கள்
---------------------------------------

  1. இம்சை அரசன் 23ம் புலிகேசி
  2. பாரிஜாதம்
  3. நாளை
  4. புதுப்பேட்டை
  5. திருட்டுப் பயலே
  6. பட்டியல்
  7. அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது
  8. பச்ச குதிர
  9. திருப்பதி
  10. கொக்கி
  11. உயிர்
  12. ஜெர்ரி
  13. சித்திரம் பேசுதடி

09 : கவித(ா)ய்



என் கவிதைகள் என்றுமே
உன் ரசிப்பிற்குரியவை
வியப்பொன்றுமில்லை எனக்கு
உன்னால் உருவானவைதாமே அவை

தாய்க்குப் பிடிக்காதா தன் மழலை!