Wednesday, August 02, 2006

11 : திரை விமர்சனம் - உயிர்



நடிகர்கள் - ஸ்ரீகாந்த்
நடிகைகள் - சங்கீதா(ரசிகா), சம்வ்ருதா (என்ன பொருளோ?)
இயக்குனர் - சுவாமிநாதன்
இசை - ஜோஷுவா ஸ்ரீதர்

கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணி என்ற ஒரு வரிக் கதைதான் கரு. இயக்குனர் கூற்றுப்படி இது அவர் ஊர்ப்பக்கத்தில் நடந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாம்!

பார்க்கும் போது பெரும் கலாச்சார அதிர்வையெல்லாம் ஏற்படுத்தவில்லை, ஆனால் இணையத்திலும் மற்றும் ஊடகங்களிலும் விமர்சனங்களை படித்தால் மற்றொரு குஷ்பு சமாச்சாரம் புகைக்கப் பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு ஒன்று, சரி நமக்கெதற்கு அரசியல்... படத்திற்கு வருவோம்!

ஸ்ரீகாந்த்துக்கு 'கனா கண்டேன்' போலொரு நிறைவான கதாபாத்திரம், ஆனால் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதிலும் அதே பாணி!

சம்வ்ருதா...குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களை இன்னும் கொஞ்ச காலத்திற்கு நிரப்ப வந்திருக்கும் அழகான புதுவரவு. பாடல்களில் இன்னும் கொஞ்சம் உற்சாகம் காட்டியிருக்கலாம், எனினும் தன் பங்கை நிறைவு செய்திருக்கிறார், தன்னளவில்.

சங்கீதா, பாத்திரத்தேர்வு மிகச் சரி என்று நிரூபித்திருக்கிறார். வெறும் கண்களாலும், எல்லை தாண்டாத கவர்ச்சியிலுமே தன் பாத்திரத்திற்கு மெருகேற்றியிருக்கிறார். எவ்வளவோ வாய்ப்புகள் படம் நெடுக இருந்தும் எல்லை மீறாததற்காகவே இயக்குனருக்கு ஒரு சபாஷ்! (சற்றே கண்ணெரிச்சல் மற்றும் வயிற்றெரிச்சலுடன்)

சம்வ்ருதா மற்றும் ஸ்ரீகாந்த் கான்வெண்ட் பள்ளியில் அக்குழந்தைகள் அறிமுகப்படுத்தி வைக்கும் காட்சியில் வசனகர்த்தாவுக்கு கற்பனை வறட்சி, அதை விஞ்சி நிற்கிறது "கான்வெண்ட் சொல்லித்தரும்... " என்று ஆரம்பிக்கும் பாடல்.

இசை, ஸ்ரீகாந்த் அண்ணன், மற்றும் அந்த நண்பர் குழு இட்டு நிரப்பும் வேலையை மட்டுமே செய்கிறது.

அண்ணன் கதாபாத்திரத்தின் தற்கொலையாலும், தன் மகளின் மேல் வேண்டுமென்றே பால் கொட்டும் காட்சி-கதையமைப்பிலும், 'நான் செத்திருந்தால், என் தங்கச்சிய உங்கண்ணனுக்கு கட்டி வெச்சிருப்பாங்கல்ல' என்ற கேள்வி ஏற்படுத்த வேண்டிய பாதிப்பு சுத்தமாக இல்லாது போய்விடுகிறது. இந்த வசனத்திற்கு அட ஆமாம்ல என்று உறுத்தல் இல்லாமல் சொல்ல முடிவதில் தெரிந்து விடுகிறது நம் சமூக அமைப்பின் 'வள்ளல்'. ஸ்ரீகாந்த் அண்ணன் இயற்கையாக இறந்திருந்து, சங்கீதா இன்னும் பாசமிக்க தாயாகவும் இருந்திருப்பின் அக்கேள்வியின் தாக்கம் முழுமை பெற்றிருக்கலாம்.

குறைந்த பட்சம், "நீ நீயா இருந்திருந்தின்னா பிரச்னையே இல்லைய்யா...நம்ம காதலிக்கும்போது இத அத சொல்லி என்னை ஏமாத்திட்டியே..." என்ற ரீதியில் சங்கீதா பேசும் வசனத்திற்கு பதில் அதை இன்னும் விரிவாக காட்சிப் படுத்தியிருக்கலாம்

இன்னும் கொஞ்சம் சிரத்தையெடுத்து, நடுநிலை வழுவாமல், தனி மனித உணர்ச்சிகள் மற்றும் உறவுமுறைகளூடான சிக்கல்களை பிம்பப்படுத்தியிருந்தால் ஊடகங்களில் இதையொற்றிய ஆரோக்கியமான விவாதமொன்றை இப்படமே துவங்கி வைத்திருக்கும்.

மொத்தத்தில், நம் சமூக அமைப்பின் உறுதூண்களாக விளங்கும் உறவுமுறைகளுக்கெதிராக, தனி மனித உணர்ச்சிகள் எழுப்பும் கேள்வியே உயிர். கலாச்சாரக் காவலர்கள் அஞ்சும் விளைவுகள் இந்த படத்தை பார்ப்பதால் மட்டுமே நேர்ந்து விடாதென்றே நினைக்கின்றேன்!

24 comments:

சிறில் அலெக்ஸ் said...

//பார்க்கும் போது பெரும் கலாச்சார அதிர்வையெல்லாம் ஏற்படுத்தவில்லை, ஆனால் இணையத்திலும் மற்றும் ஊடகங்களிலும் விமர்சனங்களை படித்தால் மற்றொரு குஷ்பு சமாச்சாரம் புகைக்கப் பட்டிருக்கிறது. //

சரியாச் சொன்னீங்க

VSK said...

நான் இன்னும் பார்க்கவில்லை.
ஆனால், விவாதங்களால், சற்றே ஈர்க்கப்பட்டிருந்தேன்.
உங்கள் விமரிசனம் மிக நேர்மையாக எழுதப்பட்டிருப்பது போல் உணர்கிறேன்.
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் ஆழமான நோக்கும் வியக்க வைக்கிறது!
ஏதேனும் படம் டைரக்ட் பண்ணப் போறீங்களா? !
:)

நாமக்கல் சிபி said...

நன்கு விமர்சித்துள்ளீர்கள் ராசுக் குட்டி!

கதிர் said...

உக்கிரபுத்தனுக்கு ஒரு விளம்பரம் கிடைச்சுருச்சுய்யா!!

நானும் படம் பாத்தேன் அவ்வளவு மோசம் இல்லை.

கலாசாரம் கெட்டு போவுதாமே. எங்கய்யா கெட்டு போகுது, வெட்டறதும் குத்தறதும் பாக்கும்போது கெட்டு போகாத மக்கள் இதை பார்த்த உடனே கெட்டு போயிடுவாங்களா?

Anonymous said...

இப்பொழுது அண்ணி பற்றி படம் எடுத்தார்கள்.நாளை அம்மா பற்றி படம் எடுப்பார்கள்.கேட்டால் ஊர்ல நடக்காதையா நாங்கள் படம் எடுத்தோட்டோம் என்று சாக்குபோக்கு கூறுவார்கள்.இதையும் ஆதாரித்து ஒரு கும்பல் கிளம்பும்.

//பார்க்கும் போது பெரும் கலாச்சார அதிர்வையெல்லாம் ஏற்படுத்தவில்லை//
தனியா பார்த்தால் எப்படிங்க,உங்க அண்ணி,அம்மா அல்லது மகள்கூட சேர்ந்து பார்ங்க...

VSK said...

How is it this one is in Thenkuudu pOtti?
Is it because of talking about various 'uRavukaL'??!!
:))

ராசுக்குட்டி said...

நன்றி சிறில்,
SK -> படமா...இயக்கமா முடிச்சிக் கட்டிருவீங்க போல... மற்றொரு கேள்விக்கு என் பதில் ஆம்!

பேருக்கேத்த மாதிரி அப்பாவியாதான் இருக்கிங்க...

உண்மைதான் தம்பி...

அனானி -> சிந்திக்க வைத்த கேள்வியை கேட்டு இருக்கிறீர்! நண்பர்களுடன்தான் பார்த்தேன் எனவேதான் அதிர்வொன்றும் தெரியவில்லையோ...யாமறியேன், ஒருவேளை, என் அம்மாவுடன் பார்க்கையில்..."சவத்துமூதி...கூட்டு வந்துருக்கான் பாரு படத்துக்கு" னு பாதியிலே கிளப்பியிருந்தாலும் கண்டிப்பாக இப்பதிவை இட்டிருப்பேன் என்ன... அதில் என் அம்மாவின் பார்வையையும் சொல்லியிருப்பேன். அதே குடும்பமாக உட்கார்ந்துதான் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கிறார்கள்... K.பாலச்சந்தர்...சுவாமிநாதன் வகையறா மிச்சம் வைத்த உறவுமுறைகள் கூட அங்கே மிஞ்சவில்லையாமே? :(

Anu said...

Arya nadichha oru padam
peer nyabagam illa
aduvum kittathatta indha madiri oru kadaidane
rasu
kavidhai katturainnu mattumdan nenachen vimarsanamum super.

Anonymous said...

உயிர் படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனாலும்

//நம் சமூக அமைப்பின் உறுதூண்களாக விளங்கும் உறவுமுறைகளுக்கெதிராக, தனி மனித உணர்ச்சிகள் எழுப்பும் கேள்வியே உயிர். கலாச்சாரக் காவலர்கள் அஞ்சும் விளைவுகள் இந்த படத்தை பார்ப்பதால் மட்டுமே நேர்ந்து விடாதென்றே நினைக்கின்றேன்!//
போன்ற விமர்சனங்கள் வாசிக்கக் கிடைப்பது மிகவும் குறைவு. இந்த ரீதியில் உங்கள் திரை விமர்சனங்களை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

நாமக்கல் சிபி said...

//Arya nadichha oru padam
peer nyabagam illa
//

கலாபக் காதலன்!

நாமக்கல் சிபி said...

சிந்திக வேண்டிய கேள்வியைக் கேட்ட அனானிக்கும் சிறப்பாகவே பதிலளித்துள்ளீர்கள்.

யாத்ரீகன் said...

படம் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.. சரியான விமர்சனம்.. படத்தையும், வடிவேலுவையும் பற்றியும்...

கிரி படம் மட்டுமல்ல.. சந்திரமுகியில் கூட வடிவேலுவின் ஆபாச காமெடி (?) கள்.. கண்டு முகம் சுழித்த பலர் உள்ளனர்.. யாரை துரத்தி அடிக்கவேண்டும்..

Muse (# 01429798200730556938) said...

HBO is showing its own film known as "Strip Search", which I find a beautiful political movie.

Requesting your review on that film.

சீனு said...

எனக்கு ஒன்னு தான் புரியல. இதைப் பற்றின படங்களை செல்வா போன்றவர்கள், தனுஷ் போன்றோரை வைத்து எடுக்கும் பொழுது, ஏன் அவர்கள் வீட்டில் உள்ள பெண்களை கதாநாயகியாக போட்டு எடுக்க மாட்டேன் என்கிறார்கள்?

"Closed to reality" அவங்க வீட்டுக்கு மட்டும் இல்லையா?

சிறில்,

நீங்க சொன்னபிறகு, அந்தப் படத்தை பார்த்தேன். கொஞ்சம் decent-ஆ தான் இருந்துச்சு. Just படம்ன்னு பார்த்தா, நல்ல திரைக்கதை.

சிறில் அலெக்ஸ் said...

என்னைவிட என் மனைவி இந்தப்படத்தை விரும்பி பார்த்தார். (நல்ல வேளை எனக்குத் தம்பி இல்லை :) )

ராசுக்குட்டி said...

நன்றி சிபி...

எண்ணமெனது, பொறுக்கி, யாத்திரீகன், சீனு... வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

muse -> நமக்கு இங்கிலிபீசு எழுத படிக்க மட்டும்தான் தெரியும்... எனவே நீங்களே பார்த்து ஒரு பதிவப் போடுங்க... நான் வேணும்னா வந்து ஒரு பின்னூட்டம் போட்டு முறை செஞ்சுடுறேன்!

பொன்ஸ்~~Poorna said...

சீனு,
//இதைப் பற்றின படங்களை செல்வா போன்றவர்கள், தனுஷ் போன்றோரை வைத்து எடுக்கும் பொழுது, ஏன் அவர்கள் வீட்டில் உள்ள பெண்களை கதாநாயகியாக போட்டு எடுக்க மாட்டேன் என்கிறார்கள்?
//
அவங்க வீட்டுப் பெண்கள் திரையுலகத்துக்கு வரணுமா வேண்டாமான்னு நீங்களோ அவங்களோ முடிவு செய்ய முடியும்னு நினைக்கிறீங்களா? செல்வா, தனுஷ் தவிர வேறு யாரும் வராதது அவங்க தவறா? இந்தக் கேள்வி அபத்தமாத் தெரியுது..

ராசுக்குட்டி, விமர்சனம் நேத்து படிச்சேன்.. ஏதோ பத்தவைக்கப் போறீங்கன்னு தோணிச்சு.. ஆனா அந்த அனானிக்குப் பதில் சொன்னீங்க பாருங்க.. நச்சுன்னு சொல்லிருக்கீங்க.

படத்துக்கு வடிவேலுவை வச்சு விளம்பரம் தேடுறாங்களோ என்னவோ..

ராசுக்குட்டி said...

சிறில் என்னது இது சிறுபிள்ளத்தனமா இருக்கு... உண்மைய இம்புட்டு பட்டவர்த்தனமாகவா சொல்வது ;)

பொன்ஸ்--> "அவங்க வீட்டுப் பெண்கள் திரையுலகத்துக்கு வரணுமா வேண்டாமான்னு நீங்களோ -->அவங்களோ<-- முடிவு செய்ய முடியும்னு நினைக்கிறீங்களா?" thats பொன்ஸ் டச்! தனுஷ், செல்வா கூட அந்த முடிவெடுக்கக்கூடாது சம்பந்தப்பட்ட பெண்ணே முடிவு செய்ய வேண்டிய விஷயம்தான் அது!

டிஸ்கி : நான் பரட்டை அல்ல!

G.Ragavan said...

ராசுக்குட்டி....வாலி படம் வந்தப்ப இந்தக் கலாச்சாரக் காவலர்கள் எங்கு போனங்க? ஆக ஆம்பளைங்க எது செஞ்சாலும் யாருக்கும் உறுத்தலை.

இந்தப் படம் சொல்ல வந்தது சரி அல்லது தவறு என்று சொல்ல வரவில்லை. ஆனால் எதையும் சொல்லவே கூடாது என்று சொல்வது தவறு.

இத்தனை பேசுகிறாரே வடிவேலு....அவருடைய கேவலமான பல நகைச்சுவைக் காட்சிகளை என்ன சொல்வது? சந்திரமுகி படத்தில் இவர் ஒரு வேலைக்காரியின் பின்னால் போவாரே....அதே போல கோவை சரளாவை வைத்து ஒரு வேலைக்காரன் பின்னால் போவது போல எடுத்திருந்தால் பலருக்குத் தமிழ் பண்பாடு நினைவுக்கு வந்து விடும்.

துளசி கோபால் said...

இந்தப் படத்தை நானும் பார்த்தேன்.

ஆபாசமான காட்சிகள் வைக்கச் ச்சான்ஸ் இருந்தும்
அதை வைக்கலைன்றது ஒரு ப்ளஸ் பாயிண்ட்டா இருந்துச்சு.

நம்ம பாலச்சந்தர் கணேசன் பதிவிலும் 'விதவைக்கு வாழ்வு கொடுக்கறது'ன்னுசிலர் பின்னூட்டம் போட்டுருந்ததையும்
பார்த்தேன். அண்ணி அவுங்க எப்படி, ஏன் விதவை ஆனாங்க?
கடைசிக் காட்சியிலும், நாயகனின் காதலியைத் தள்ளிவிட முயற்சி செஞ்சு, இவுங்களே கால் தவறி
விழுந்துடறாங்கதானே. மனம் திருந்திட்டாங்கன்னு முடிக்கச் சான்ஸ் இருந்தும் அப்படி முடிக்கலை.
அப்படி இருந்துருந்தா கொஞ்சம் அபத்தமா இருந்திருக்கலாம். இவ்வளோ தீவிர வெறியில் இருந்தவங்க,
'டக்'ன்னு ஒரு நொடியிலே திருந்தறது.....?

ஆனா.... இது சினிமா. எதுவும் நடக்கலாம்தானே.

சீனு said...

/////

//இதைப் பற்றின படங்களை செல்வா போன்றவர்கள், தனுஷ் போன்றோரை வைத்து எடுக்கும் பொழுது, ஏன் அவர்கள் வீட்டில் உள்ள பெண்களை கதாநாயகியாக போட்டு எடுக்க மாட்டேன் என்கிறார்கள்?
//
அவங்க வீட்டுப் பெண்கள் திரையுலகத்துக்கு வரணுமா வேண்டாமான்னு நீங்களோ அவங்களோ முடிவு செய்ய முடியும்னு நினைக்கிறீங்களா? செல்வா, தனுஷ் தவிர வேறு யாரும் வராதது அவங்க தவறா? இந்தக் கேள்வி அபத்தமாத் தெரியுது..

/////

பொன்ஸ்,
பின்ன யாரு முடிவு செய்யனும்? தனுஷை நாம முடிவு செஞ்சா ஸ்டார் ஆக்கினோம். விஜய்-ன் முதல் பத்து படங்கள் பார்த்தீங்கன்னா கேவலமா இருக்கும். ஆனா, இப்போ அவர் அடுத்த ஸ்டார் ஆகலையா?

நான் அவங்க வீட்டு பெண் இப்படி வரனும்ன்னு சொல்லலை. ஆனா, தன் வீட்டுப் பெண் என்றால் ஒரி நியாயமும், அடுத்தவர் என்றால் ஒரு நியாயமும்-னு இருக்கிறதை தான் சுட்டுகிறேன்.

ராசுக்குட்டி said...

சீனு, ஒரு குவார்ட்டர் செஞ்சுரி போட்டு இத முடிச்சிக்கலாமே - இதில் எந்த விஷயங்களையும் நாம் பொதுமைப் படுத்த முடியாது

துளசி...உங்கள் பார்வை அலசலும் அருமை... துளசிதளத்திற்கு நானும் வாசகனே!

இந்த பதிவைப் போட்டதில் ஒரு நன்மை... வந்திருந்த எல்லோரில் வலைத்தளத்திற்கும் போய் வந்தேன்...நிறைய தெரிந்து கொண்டேன்!

பினாத்தல் சுரேஷ் said...

நல்ல விமரிசனம் ராசுக்குட்டி.

எனக்கும் படம் பார்த்த போது தோன்றியது, அண்ணனின் தற்கொலைக்குத் தூண்டுதல், குழந்தை மீது பால் கொட்டுவது இதெல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் அந்த வசனத்தின் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும். சாதாரண வில்லியாக்கி சாதாரணப்படம் ஆக்கிவிட்டார்கள். மற்ற துறைகளும் டுபாக்கூர்தான். பரபரப்பு மட்டுமே ஏற்படுத்திய படம்:-((

ராசுக்குட்டி said...

//சாதாரண வில்லியாக்கி சாதாரணப்படம் ஆக்கிவிட்டார்கள். மற்ற துறைகளும் டுபாக்கூர்தான். பரபரப்பு மட்டுமே ஏற்படுத்திய படம்:-(( // உண்மைதான் சுரேஷ், சொல்ல வந்த கருத்தை படம் கடந்து சென்று விட்டதாகவே உணர்ந்தேன், படம் பார்த்ததும்