Monday, August 07, 2006

16 : பாதுகாப்பு உறவு - போதும் காப்பு உதறு

பாதுகாப்பு உறவு - போதும் காப்பு உதறு

Photobucket - Video and Image Hosting

மு.கு : உறவுகள் பற்றி அம்மா-மகள் இடையே நடக்கும் உரையாடல்

மலையேறிப் போனாலும்
மச்சினமார் ஒறவு வேணும்

தாலி எடுத்துக் கொடுக்கவேனும் - அவந்
தங்கச்சிங்க தயவு வேணும்

ஒதவிக்கு யாரிருக்கா, அவசர உலகமிது
ஒறவு தான்டி பாதுகாப்பு


ஒறவுன்னா பறக்க வைக்கும் சிறகு இன்னீங்க
சருகாகிப் போனதெல்லாம் எங்க சொன்னீக

சொந்தமுன்னா சொமதான
பந்தமுன்னா பளு தான

-#-

சமஞ்ச சிறுக்கி உனக்கு
குச்சுக் கட்டி குடிவச்சானே
எங்கண்ணம்பய ஒம் மாமந்தானே


அவம் டவுசர புடிக்கிததுக்கே
டவுனுல ஆள் புடிக்கனும்

மூக்கொழுக்கி நின்ன பய - மொகரைய நான்
முழுசாக்கூட பாக்கலயே
-#-

ஒறவுன்னா வரவுதானே
மொய்க் கணக்க யோசிச்சுப் பாரேன்


மொய் வச்சு மொய் எடுக்கும்
பொய்க் கணக்க சொல்லித் தாரேன்

அன்பளிப்பு இன்னு சொல்லி
அன்பழிப்பு நடக்கு தங்கே
-#-

மாமம் மவம்மேல மஞ்சத் தண்ணி
ஊத்துனவதான நீ உறவ எண்ணி

காதலெல்லாம் தனி உறவு
கணக்குல சேக்காதீக

வாக்கு கொடுத்தேன்னு வாழ்வழிச்ச கதநூறு
வயிறெரியுது, என்னெதுவும் கேக்காதீக
-#-

புகுந்தவீடு புது உறவும்
புருசன்காரன் புன்சிரிப்பும்
புடிக்கலயா சொல்லு புள்ள


விளக்கேத்த வந்தவள, மாமியா மவராசி
நெருப்பேத்தி கொன்னுருப்பா

மச்சினஞ் சீரு கொண்டு வந்தான் எந்தம்பி
மறு சென்மம் கண்டு வந்தேன் தலைதப்பி
-#-

ஒங்கொழந்த பொறந்தப்போ
சீர் செனத்தி தந்ததாரு
சேன தொட்டு வச்சதாரு


பாலுக்கழுதவன பகாசூரன் இன்னு சொன்னா
காலுல சலங்கைகட்டி சண்டைக்கு வந்து நின்னா

பாதகத்தி ஓரகத்தி - இந்த
வங்கொடுமை எதுல சேத்தி

-#-
அழுதா தாங்காதே
அவங்கண்ணு தூங்காதே
அரவணச்சு காத்து நிக்கும்
அண்ணங்காரன் ஆவலியோ


பாசமலர் பரம்பரையில்
நேசங் கொறையாம நின்னவந்தான்

மதினியிட்ட மந்திரமோ
மாமஞ் சீர் செய்யலியே

-#-

சொக்கட்டான் ஆடினாலும்
அக்காகிட்ட தோத்து நிப்பா
எங்கக்கா போல உண்டா
எட்டூரு சொல்லி வப்பா

தங்கச்சி எளம் பிஞ்சு
தப்புன்னு என்ன செஞ்சா?

எவளும் எடம் கொடுக்காட்டி
எம் புருசன் ராமந் தான்

சமஞ்ச சிறுக்கியவ
சந்தைக்கெல்லாம் எதுக்கு வாரா
சக்களத்தியா வருவாளோ
சந்தேகம் வந்து நிக்கி

முழுச்சீல கட்டுறப்போ முடிஞ்சாக்க சொல்லி விடு
கலியாணம் காதுகுத்து கண்டிப்பா நான் வாரேன்!

-#-

ஏட்டி கருவாச்சி...
பாட்டி மேல என்ன கோவம்


வெத்தல கேட்டு வந்தா
வேத்தாளா பாத்து நிக்கா

பாடையில போகையிலும்
பாம்பட மெனக்கு இல்லங்கா

-#-

தாயேன்னு நீ சொன்னா
கலங்கி நிக்கும் எங்கண்ணு

அதாவது உறவுதானா
அதுவுங் கொஞ்சம் கொறவுதானா


புள்ள வலி யெடுக்கையில
பொறந்த வழி நானறிஞ்சேன்

அம்மான்னு

எம்மவஞ் சொல்லையில
எம்மா ஒன் ஞாபகந்தான்

எந்தாயே நீ மட்டும்

எப்போதும் விதி விலக்கு - ஒன்ன
ஒறவுன்னாலும் கொறவுதாண்டி
உசுருன்னாலும் கொறவுதாண்டி!

12 comments:

நாமக்கல் சிபி said...

கலகுங்க ராசுக்குட்டி!


//அதாவது உறவுதானா
அதுவுங் கொஞ்சம் கொறவுதானா//

அருமையான சொல்லாடல்!
பாராட்டுக்கள்!

கப்பி | Kappi said...

கலக்கல் ராசுக்குட்டி...

வாழ்த்துக்கள்

செல்வநாயகி said...

நிறைய விடயங்களை ஞாபகப் படுத்தி விட்டீர்கள் ராசுக்குட்டி. நாட்டுப்புறங்களின் வாழ்வியலைச் சொல்லும் எத்தனையோ பாடல்கள் இதே மொழியில் உண்டு. கேட்டபோது பெரிதாகத் தெரியாதவை இன்று கேட்கவேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகின்றன. நன்றி.

ENNAR said...

கிராமத்துக் குட்டியா? ராசுக்குட்டி
//மலையேறிப் போனாலும்
மச்சினமார் ஒறவு வேணும்//
அதெல்லாம் அந்த காலமுங்க
அதுவும் கிராமத்தில் இப்பவெல்லாம் கிடையாதுங்க

Anonymous said...

EXCELENT RASUKUTTY..

KRISH

Anu said...

Rasu
romba nalla irundhuchu
amma magal uravu magaloda kalayanatthukku appuram..innume valuvagum

Anonymous said...

கலக்கீட்டீங்கன்னா!!! வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

ராசுக்குட்டி,

அம்மாவையாவது ஒத்துக் கொண்டாளா அந்தப் பெண்.?
உண்மை உண்மை அத்தனையும்.

ரொம்ப நல்லா இருக்கணும் உங்கள் கவிதைகளும் நீங்களும்.
வாழ்த்துக்கள்.

ராசுக்குட்டி said...
This comment has been removed by a blog administrator.
ராசுக்குட்டி said...

நன்றி சிபி முதல் பின்னூட்டத்திற்கும் தொடர்ந்து உற்சாகப்படுத்துங்கள்.

கப்பி பய -> நன்றி

செல்வநாயகி -> கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது, நாட்டுப்புற பாடல்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும்

என்னார் -> எங்க ஊர்ப்பக்கம்லாம் இன்னும் இப்டிதானுங்க இருக்கு!

க்ரிஷ் -> நன்றி

அனிதா -> உண்மை, கருத்துக்கு நன்றி

டெமிகாட் -> வாழ்த்துக்களுக்கு நன்றி

மனு -> //ரொம்ப நல்லா இருக்கணும் உங்கள் கவிதைகளும் நீங்களும்.
வாழ்த்துக்கள். // என்ன சொல்றதுன்னு தெரியலங்க ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு... கவிதை அதன் கடமையை செய்து விட்டது!

மதுமிதா said...

///
புள்ள வலி யெடுக்கையில
பொறந்த வழி நானறிஞ்சேன்

அம்மான்னு
எம்மவஞ் சொல்லையில
எம்மா ஒன் ஞாபகந்தான்
///

நன்று ராசுக்குட்டி

ராசுக்குட்டி said...

நன்றி மதுமிதா!