Wednesday, October 11, 2006

50 : வாழ்க்கை சிகரெட் - காதல் நெருப்பு #1

Photobucket - Video and Image Hosting

குளிர்கால இரவது
என் கம்பளி ஜில்லிட்டுக் கிடக்கிறது

கலைந்த என் தூக்கமங்கே
நெளிந்து புரள்கிறது

பரிதாபப்பட்ட முட்டாள் இயற்கையோ
பனிப்போர்வை போர்த்திச் செல்கிறது

நுரையீரலையாவது கதகதப்பூட்டலாமென்று
தேடியதில் கிடைத்தது
தீக்குச்சியில்லா தீப்பெட்டியும்
கன்னித் தன்மையோடு ஓரு சிகரெட்டும்

தீப்பொறியாய் உதிர்ந்த நட்சத்திரமொன்று
என் கை சேரும்முன்னே அணைந்து போயிற்று

நெருப்பின்றி புகையாதே - பனிப்புகை பார்த்தேன்
நிச்சயம் நெருப்பிருக்கும் மேலே

விழுகின்ற வெண்பனி விழுதேறி
விண்ணுச்சி அடைந்தேன் சிகரெட்டோடு

மேகக் கிளைகள் ஒதுக்கினேன்
சில நட்சத்திரப்பூக்கள் உதிர்ந்தன

அதிர்ந்த நீ நிமிர்ந்து பார்த்தாய்
அட, தீப்பொறி தேடிவந்தால், தேவதை

உன் கையில் நிலாக் கண்ணாடி
எனக்கிப்போது இரு நிலவுகள் தெரிந்தன

உச்சிக் கிளையிலிருந்து உன்னருகே குதித்தேன்
பதறிய நீ, உதறியதால் சிதறியது, நிலாக்கண்ணாடி
விண்வெளியெங்கும் நீ, நான் இறைந்து கிடந்தோம்

உதயசூரியனின் சாயமெடுத்து,
பூசிக்கொண்ட உதடசைத்து
என்ன வேண்டுமென்றாய் நீ

என் சிகரெட் பற்ற வைக்க
கொஞ்சம் நெருப்பு வேண்டுமென்றேன்

சிக்கி-முக்கி கல்லாய் உரசிக்கொண்டோம்
தெறித்த பொறியொன்று வெறிகொண்டெரிந்தது.

இந்த வாரம் தமிழோவியத்தில் வெளிவந்திருக்கிறது. நான் எழுதியதில் எனக்கு மிகப் பிடித்த கவிதை.

இதற்கு முந்தைய தேவதைக் கவிதை இங்கே!

12 comments:

கதிர் said...

அட ஐம்பதாவது பதிவு ஒரு அம்சமான கவிதையோடு!
அட்டகாசமான கவிதை ராசுக்குட்டி!

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்!

ராசுக்குட்டி said...

வாங்க தம்பி வாங்க, ஐம்பத முன்னிலைப்படுத்தனும்னுதான் நம்பர் போட ஆரம்பிச்சேன்...அதுவே பெரிய படுத்தலா போச்சு.

உங்களுக்கும் கவிதை பிடிச்சிருந்ததா... எனக்கு இப்போ பயங்கர சந்தோஷம்! வாழ்த்துக்களுக்கும் நன்றி!

நாமக்கல் சிபி said...

கவிதை அருமை...
50ஆவது பதிவா??? வாழ்த்துக்கள்...

இன்னும் பல பதிவுகளையும், பல வெற்றிகளையும் பெற வாழ்த்துக்கள்!!!

ராசுக்குட்டி said...

நன்றி பாலாஜி, பலப்பல யோசனைகளுக்கு அப்பால போட்ட பதிவு அது, வாழ்த்துக்களுக்கு நன்றி பாலாஜி... நீங்கெல்லாம் எப்பயோ சைலன்டா 50 போட்ருப்பீங்க நமக்கு விளம்பரம் இல்லாம எதயும் செய்றதுக்கு பிடிக்கமாட்டேங்குது! ;-)

சென்ஷி said...

அருமையான கவிதை

செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள்

சென்ஷி

ராசுக்குட்டி said...

நன்றி காண்டீபன், அடிக்கடி வாங்க இந்த பக்கம்

ஆவி அண்ணாச்சி said...

50 க்கு வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

//நீங்கெல்லாம் எப்பயோ சைலன்டா 50 போட்ருப்பீங்க நமக்கு விளம்பரம் இல்லாம எதயும் செய்றதுக்கு பிடிக்கமாட்டேங்குது! ;-)
//
நீங்க ஆரம்பிக்கறதுக்கு கொஞ்சம் முன்னாடிதான் நானும் பிளாக் ஆரம்பிச்சேன்...

50 இப்பதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி போட்டேன்... அதுல நான் எழுதறதுக்கு உதவியவர்களுக்கு நன்றி சொல்லி அப்படியே ஆறு விளையாட்டையும் சேர்த்துக்கிட்டேன் ;-)

ராசுக்குட்டி said...

நன்றி சென்ஷி, 50 அடிக்கவே நமக்கு நாலு மாசமாயிப் போச்சு...செஞ்சுரி போட இன்னும் எத்தன காலமோ அது வரைக்கும் தாங்குவேனோ??

ராசுக்குட்டி said...

ஆவியண்ணாச்சி நன்றிங்கோ... என் மூதாதையர் ஆசி எனக்கு எப்பவும் உண்டுன்னு எனக்கு நல்லாத் தெரியும்.

ராசுக்குட்டி said...

//50 இப்பதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி போட்டேன்... அதுல நான் எழுதறதுக்கு உதவியவர்களுக்கு நன்றி சொல்லி அப்படியே ஆறு விளையாட்டையும் சேர்த்துக்கிட்டேன் ;-) // ரொம்ப நல்ல விஷயமப்பு

ஆவி அண்ணாச்சி said...

//என் மூதாதையர் ஆசி எனக்கு எப்பவும் உண்டுன்னு எனக்கு நல்லாத் தெரியும்//

நம்பிக்கைக்கு நன்றி!

நாங்க இங்க கும்மியடிக்கிறோம் நீங்களும் கலந்துக்குங்க!