Wednesday, September 13, 2006

38 : கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

Photobucket - Video and Image Hosting

மச்சான் இந்த பிரின்சி ஓவர் ஆட்டம்டா

ஏன்டா சந்துரு என்னாச்சு

காட்டுக்குள்ளாற கொண்டு போய் காலேஜ கட்டிருவானுங்க, பஸ் பாஸ்லயும் கொள்ளை அடிப்பானுங்க, 5 நிமிஷம் வெயிட் பண்ணவும் மாட்டாரு இந்த டிரைவரு

ஏய் விஷயத்த சொல்லுடான்னா...இன்னாடா பஜன பண்ற

அதில்லட நம்ம இந்த பாலத்துல இருந்து காலேஜ் போறதுக்கு லிஃப்ட் எடுத்துதானே போவோம்... இனிமே அப்டிலாம் போகக்கூடாதாம்.

யார் சொன்னா...

பிரின்சிதான்... போயி பயோ-டெக் க்ளாஸ்-ல சொல்லிருக்கான்... நம்ம க்ளாஸ்ல சொல்லி இருந்தா அடி கிழிஞ்சுருக்கும்ல

ஏன் என்னவாம்...

இந்த ஷார்ப் மோட்டார்ஸ் மானேஜர் இருக்காரில்ல அவர் போட்டுக் குடுத்துதான் இப்டின்னு நம்ம கதிர் சொன்னாண்டா

டேய் அவரா, வழக்கமா நிறுத்தி லிஃப்ட் குடுப்பாரு நமக்கெல்லாம். நேத்தும்கூடி நிறுத்தி நம்ம பசங்கெல்லாம் ஏத்திட்டு போனாரே, ராசு நீ கூட நேத்து போனியேடா, அவர் ஏன் இப்படியெல்லாம் பண்ணப் போறாரு - இது கதிர்.

நான் போனதுனாலதான் பிரச்னையே,

ராசு, என்ன சொல்ற

பின்ன என்ன, போன வாரம் ஒரு நாள் பஸ் கிளம்பிடுச்சு, நான் இங்கன காத்துகிட்டு இருக்கேன், அந்தாளு நிக்காம போய்ட்டான், மத்தியானம் அய்யன் கடைல ஒரு தம் போட்டுகிட்டு இருக்கும்போது வந்தாரு. ஏய்யா நிறுத்தாம போய்ட்ட அப்டின்னு கேட்டா அதுக்கு சொல்றான் நீ காலேஜ் பையன் மாதிரி டீசண்டா டக்-இன் பண்ணாம இருந்த... உன்ன எப்படி ஏத்திக்கறதுன்றான் வெறு....தி!

சரி அதுக்கு நேத்து நீ என்ன பண்ண

முந்தாநேத்து மழை பேஞ்சு இருந்துச்சுல்ல, ரோட்ல ஓரமா கொஞ்சம் சேறு இருந்துச்சு, நல்லா ஷூ நெறய அப்பிட்டு போய் கார்-ல ஏறி நாஸ்தி பண்ணிட்டேன்.

அடப்பாவி, உனக்கு ஏண்டா புத்தி இப்டிலாம் போகுது

அடிங், பிரின்ஸியே என்ன ஒரு கேள்வி கேக்க மாட்டான், இவன் யார்றா. ஏய் கதிரு இவந்தான் போட்டுக்குடுத்தானாடா நேத்து, உண்மைய சொல்லு, எம்பேரக்கீது சொன்னானா?

உம்பேரெல்லாம் சொல்லலிடா பொதுவா பசங்களுக்கு கொஞ்சம் ஒழுக்கம் சொல்லிக் குடுங்கன்னுட்டுருந்தான், விஷயத்த கேட்டதும் பிரின்ஸி இன்னும் கொஞ்ச நாளைக்கு யாருக்கும் லிஃப்ட் குடுக்காதீங்க, அப்பதான் பசங்களுக்கு புத்தி வரும்னு சொல்லிட்டு, லெக்சரர் எல்லார்க்கும் ஒரு அறிக்கையும் அனுப்பி வச்சுட்டாரு காலேஜ் பஸ்தான் வருதில்ல, அதனால் யாரும் பசங்களுக்கு லிப்ட் குடுக்காதீங்கன்னு

அப்படியா விஷயம், சரி டேய் நம்ம யாருன்னு அந்த பிரின்சிக்கு காமிப்போம்டா, BBA பசங்க எல்லாம் நம்ம பக்கம்தானே நிப்பானுங்க.

B.Com, Bio-Tech விட்டுடலாம், பூச்சிப் பசங்க.

மறுநாள் பிரின்சி அவரோட லொட லொடா வெஸ்பாவில் வர, பாலத்திலிருந்து 20 அடிக்கு ஒருவர் என கல்லூரிக்கு சற்று முன் வரை வரிசையாக நின்றிருந்த 50 பேரும் ஒவ்வொருவராக கேட்டோம், சார் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா!

*****

ஏய்...ஏய் வித்யா... நிறுத்து நிறுத்து...

ஹேய் வண்டிக்குள்ளாற விழுந்துடாதடா என்ன விஷயம்

வீட்டுக்குதான போற... நானும் வர்றேன் என்ன ஹோப்ஸ்-ல இறக்கி விட்டுரு

சரி உக்காரு

இல்ல வண்டிய என்கிட்ட கொடு... நீ பின்னாடி உக்காரு

ஏய் இது என் வண்டிடா

பெரிய வண்டி...ஒன்ரயணாவுக்கு ஒரு கைனடிக் ஹோண்டா... ஹட்... பின்னாடி போய் உக்காரு

ஒரு பொண்ணுக்கு பின்னாடி உக்காந்துகிட்டு வரக்கூடாதோ... எல்லாம் ஈகோ... ஆம்பளைங்க எல்லாம் MCPsதானே இந்தா புடி

உன் ஓட்ட வண்டில பின்னாடி உக்காந்துகிட்டு எங்க பிடிச்சுக்கறது... உன்ன புடிச்சிக்கலாம்னா கோவப்படுவ

கஷ்டகாலம்...ஏண்டா நீ இப்டி இருக்க.. அப்புறம் எங்க வண்டி தேர் மாதிரி தெரிஞ்சுக்கோ

தேரா அடேங்கப்பா, அது சரி அதென்ன MCP... எங்களுக்கெல்லாம் McD தான் தெரியும்...

நீ திருந்தவே மாட்டடா.. சரி எங்க போற

ராகம்-ல காமசூத்ரா பாக்க போறோம் நீயும் வர்றியா

வேணாண்டா ராசு ஏங்கிட்ட இப்டிலாம் பேசிப் பழகாத... (அவள் குரல் லேசாக உடைந்து ஒலித்தது)

*****

ஹேய் ராசு என்னடா பைக் புதுசா இருக்கு

புதுசல்லாம் இல்லீடா அய்யன் இன்னிக்கு வேலைக்கு போவல அதான் நான் தூக்கிட்டு வந்துட்டேன்

அப்ப சரி இன்னிக்கு எதுனா படத்துக்கு போயிடலாமா... மத்தியானம் எல்லாம் ப்ராக்டிகல்ஸ்தான் 2 மணிக்கு அப்படியே நழுவிடுவோம் என்ன சொல்ற... ஹேய் வித்யா நம்ம ராசு பைக்-க பார்த்தியா

என்ன சார் புதுசா... கலக்கறீங்க நமக்கு கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா

அதெல்லாம் ஒண்ணும் கிடைக்காது உங்க தேர்லயே வாங்க... போய் ஒரு படத்த பார்த்துட்டு வருவோம்

(பொண்ணுங்கல்லாம் பின்னாடி வர்றாங்கன்ற மிதப்புல, பேருந்து ஒன்றை முந்தலாமென்று முயற்சிக்கையில் எதிர்த்து வந்த வண்டியில் மோதி... வித்யா உட்பட எல்லாரும் ரத்தம் குடுத்து காப்பாத்தி... ஹ்ம்... அது பெரிய கதை)

*****

ராசு இந்தாடா... இந்த புக்-ல இருக்கற எல்லா கணக்கையும் போட்டு பார்த்துரு... இதுல இருந்துதான் எல்லாக் கேள்வியும் வருதாம். மொத சுத்து மட்டும் தாண்டி வந்துருடா அப்புறம் நம்ம நண்பர் ஒருத்தர்தான் இந்த நேர்முகத் தேர்வெல்லாம் நடத்தறாரு... சொல்லி எதுனா பண்ணலாம்

ம்...சரிடா கதிர்... அப்புறம் ஒரு நூறு ருபாய் கேட்டுருந்தனே நாளைக்கு தாம்பரத்துல வேறொரு நேர்முகத் தேர்வு இருக்கு

என் கிட்ட அம்பதுதான் இருக்கு... இந்தா வச்சுக்க சரி நாளைக்கு நல்லதா டிரெஸ் பண்ணிட்டு போ... போன தடவ மாதிரி கருப்பா கட்டம் போட்ட சட்டைலாம் போட்டுட்டு போவாதா

இல்லடா அங்க தேச்சு வச்சுருக்கேன் பாரு வெள்ளை-ல கோடு போட்டு... அப்புறம் சந்துரு கிட்ட 'டை' கேட்ருக்கேன்

ம்... ஓ.கே ஆனா 'ஆப்டிட்யூட் டெஸ்ட்'க்கே 'டை'யோட போய் உக்காராத... மடிச்சு சட்டை பைக்குள்ள வச்சுக்க... நான் தூங்கப் போறேன் அப்புறம் நாளைக்கு 'ஆல் தி பெஸ்ட்'
:
:
:
ஹேய் ராசு வாடா நான் உன்ன தாம்பரத்துல வுட்டர்றேன்

நான் போய்க்குவேண்டா சந்துரு... நீ ஆபீஸ் போ... தாம்பரம் போய்ட்டு போகணும்னா உனக்கு பயங்கர சுத்து

அதெல்லாம் பரவாயில்ல வா வா வந்து உக்காரு சீக்கிரம்... எல்லாம் எடுத்துகிட்டில்ல

ம்...

ஓ.கே டா... டெஸ்ட் முடிச்சிட்டு என்ன ஃபோன்ல கூப்பிடு... ஆல் த பெஸ்ட்...ஹே ஏண்டா ஒரு மாதிரி இருக்க

இல்லடா அபீஸ பாத்தாலே பயமா இருக்கு... சரி சரி நீ கெளம்பு நான் பாத்துக்கறேன்
:
:
:
ராசு...இங்க...ம்... டெஸ்ட் எப்படி பண்ணின

சந்துரு இன்னும் என்ன இங்க இருக்க... ஆபீஸ் போகலயா

இல்லடா ஃபோன் பண்ணி லீவ் சொல்லிட்டேன்... நீ வேற ஒரு மாதிரியா போனியா உள்ளாற... சரி டெஸ்ட் எப்படி பண்ணின

(நன்றாக செய்திருக்கிறேன் என்று தலையாட்டத்தான் முடிந்தது... உணர்ச்சிவயப்படும்பொழுது வார்த்தைகள் கரைந்து போய் விடுகின்றன... அன்று முழுவதும் என்னுடன் இருந்தான் சந்துரு. தொழில்நுட்பத்தேர்வு, நேர்முகத்தேர்வு என்று கடைசி கட்டம் வரை உடனிருந்து உற்சாகமூட்டினான். பொது அறிவு வினாக்கள், பல்வேறு தேர்வுகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், சம்பளமாக எவ்வளவு கேட்பதென்பது வரை பல விஷய நுணுக்கங்கள் சொல்லித்தந்தான்.

நான் தேர்வானதிற்கு அவர்களிருவரும் எனக்கு விருந்தளித்து கொண்டாடினார்கள்... கைதூக்கி விட நண்பர்களிருக்கையில் எனக்கென்ன மனக்கவலை)


*****

ஹலோ வித்யா-வா...
ஆமா நேத்துதான் சென்னையில இருந்து வந்தேன்...
ம் தேங்க்ஸ்...
நாலு மாசம் ஆச்சு...
எல்லாம் சந்துருக்கும் கதிருக்கும்தான் நன்றி சொல்லணும்...
ட்ரீட் தானே... இன்னிக்கு சாயங்காலம் தந்தா போச்சு...
இல்லல்ல சனி ஞாயிறு ரெண்டு நாள்தான் லீவு..
5 மணிக்கு 'க்ளேசியர்ஸ்' போலாம் அங்க இருந்து கொஞ்ச நேரம் பேசி இருந்துட்டு நான் அப்படியே சென்னை கிளம்பிக்கறேன்
:
:
:
ஹேய் ராஜ்... எப்படி இருக்க... என்னடா சென்னை போனதும் பயங்கர ஸ்மார்ட் ஆயிட்ட

போதும் போதும் ஓவரா புகழாத... ஆனா நீ இன்னும் அப்படியே உவ்வேக்-ன்னுதான் இருக்க

அய்யே...நெனப்புதான் சரி எங்க பேக் எதுவும் காணோம்

ஏறுனா காந்திபுரம்...இறங்குனா தாம்பரம் ரெண்டு நாள் வந்துட்டு போறதுல பொட்டி படுக்கை எல்லாம் எதுக்கு... நம்மள்லாம் சுதந்திரப் பறவை

ரொம்ப பேசற நீ சரி சரி எனக்கு ஒரு வெனிலா சொல்லிடு...
:
:
நீ என்ன சொன்ன...


அல்மண்ட் சாக்கோலேட்

நீ எப்பவும் பட்டர்ஸ்காட்ச் தானே சொல்வ...

சொல்வேன், அப்புறம் நீ, ஒரு பொண்ண பக்கத்துல வச்சுகிட்டு ஸ்காட்ச் சாப்பிடலாமான்னு கலாசுவ எதுக்கு வம்பு

அடேங்கப்பா எங்க பேச்சுக்கெல்லாம் எப்ப நீ பயப்பட ஆரம்பிச்ச... சரி நீ வேலை செய்யற இடத்துல பொண்ணுங்கள்லாம் எப்படி...

அப்படியே இருந்துட்டாலும்... நம்ம ராசி எல்லா இடத்துலயும் ஒரே மாதிரிதானே இருக்கும்...
:
:
:
சரி போலாமா

சார் கொஞ்சம் இங்க வாங்க...

வித்யா நீ முன்னாடி போய்ட்டு இரு... என்னன்னு கேட்டுட்டு வந்தர்றேன்

சார் உங்க ஃஜிப் போடல

(ஆ... கொஞ்சம் மறைவான இடத்தில் நின்று கொஞ்ச நேரம் போராடினேன்... 500க்கு 3 ன்னு மட்டமான பேண்ட் வாங்கினா இதுதான் தொல்லை... காதல் கோட்டை கரண் வசனமெல்லாம் வேறு நினைவிற்கு வந்தது... மேலே இழுக்க இழுக்க பிரிந்தபடியேதான் இருந்தது இன்னிக்குன்னு பார்த்து ஷார்ட் ஷர்ட் வேறு... ஒருவாறு சமாளித்து... வித்யா பாத்துருக்க மாட்டாளே... கடவுளே!)

வா வித்யா போலாம்...

சரி நான் உன்ன பஸ் ஏத்திவிட்டுட்டு அப்படியே வீட்டுக்கு போயிக்கறேன்

இதுவேறயா... சரி சரி வா சீக்கிரம் லேட் ஆய்டுச்சு

இந்தா சாவி... நீ ஓட்டு... என் பின்னாடிதான் உட்கார மாட்டியே நீ

(இருட்டுதான் ஆனாலும் எவனாவது சிக்னல் கிட்ட வெளிச்சத்துல பாத்துட்டான்னா வம்பா போயிரும்... ஜிப் தான் இன்னும் சரியாகலையே)

இல்லல்ல நீயே ஓட்டு... நான் ஒண்ணும் MCP இல்லண்ணு நீ புரிஞ்சிக்கணுமே

சரிங்க சார்...(நக்கலா சொன்னாலா நார்மலா சொன்னாளான்னே தெரியலயே) பின்னால உக்காரு ஆனா கொஞ்சம் தள்ளியே உக்காரு (தெரிஞ்சிருச்சோ)
:
:
:
ஏய் ஏய் இங்க ஏன் நிறுத்தற...பெட்ரோல் தீர்ந்து போச்சா என்ன

முதல்ல இறங்கு, போ உள்ள போய் நல்லதா ஒரு பேண்ட் எடுத்துட்டு வா... இப்டியே சென்னை வரை எப்படி போவ
(அடிப்பாவி தெரிஞ்சேதானா?)


*****


ஹலோ சந்துரு இருக்கானுங்களா...
ஹே நீதானாடா... குரல் வித்தியாசமா இருந்துச்சு
ம்ம் ஆமாம் நேத்துதான் வந்தேன்
அமெரிக்காவுக்கு என்னடா நல்லாத்தான் இருக்கு
சரி இன்னிக்கு 3 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்துரு
என்ன விஷயமா... நம்ம காலேஜ் வரைக்கும் போய்ட்டு வரணும்... சொல்லியிருந்தேன்ல ஏற்கனவே
ஆமாமாம்... ஒரு வாரம்தான இருக்கு
:
:

வாப்பா சந்துரு... ராசு வந்தாதான் எங்க வீட்டுக்கெல்லாம் வழி தெரியும் உனக்கு இல்ல

எங்கம்மா நானே எங்க வீட்டுக்கு விருந்தாளியாத்தான் வர்றேன்... நேரமே கிடைக்கிறது இல்ல... அப்புறம் கல்யாண வேலையெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு

அதுக்கென்ன தீராம வந்துகிட்டே இருக்கு... சரி நீ எப்ப கல்யாண சாப்பாடு போடப் போற

பாத்துகிட்டு இருக்காங்கம்மா... ராசுவுக்கு அமஞ்ச மாதிரி நல்ல பொண்ணா அமஞ்சா உடனே கல்யாணந்தான்

எம்மா அவனுக்கு ஒரு காஃபி குடுங்க... நான் 'தோ வந்தர்றேன் (மேலிருந்து என் குரல்)

டேய் ராசு எப்பப்பாரு தாமசமாத்தான் கிளம்புவியே... சீக்கிரம் வாடா மாப்ள பையா

வந்தாச்சு வந்தாச்சு... டேய் குடிச்ச வரைக்கும் போதும் வா... அம்மா நானும் சந்துருவும் ராத்திரி சாப்பிட வந்துருவோம் சேத்தே செஞ்சுருங்க
:
:
(கற்க கற்க... லேசாக அதிர கல்லூரி நோக்கி பயணித்தோம் நானும் சந்துருவும்)


கதிர் எப்படிடா இருக்கான்... நீயும் அவனும் அடிக்கடி பார்த்துப்பீங்களா

நான் விஸ்கான்ஸின்ல இருக்கேன், அவன் நியூயார்க்ல, நெறய பாத்துக்க முடியாது... ஆனா ஃபோன்ல பேசிக்குவோம் தினமும்...உனக்கு எப்படி போய்ட்டு இருக்கு வேலையெல்லாம்

வேலையெல்லாம் ஓ.கே தான் என்ன ஒரு on-siteதான் கிடைக்க மாட்டேங்குது

வரும்டா கவலைப்படாத எங்க போயிரப்போகுது... ஓ.கே ஒன்னு செய் உன் ரெஸ்யூமே எனக்கு அனுப்பி விடு எங்க project ல அடுத்த மாசம் மேய்க்கிறதுக்கு ஆள் வேணும்னாய்ங்க முயற்சி செஞ்சு பாப்போம்

ம்... சரிடா மண்டபம் எல்லாம் சொல்லியாச்சா...

அதெல்லாம் தம்பி ஏற்கனவே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டான்... நம்ம மக்களுக்கு பத்திரிக்கை வைக்கிற வேலை ஒண்ணுதான் பாக்கி

உனக்கும் வித்யாவுக்கும் கல்யாணம்னா நம்ம செட்-ல பாதி பேரு நம்ப மாட்டேய்ன்றாய்ங்க

அது சரி எப்ப பாத்தாலும் அவள சீண்டி சண்டை போட்டுகிட்டே இருப்போம்... எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கும் சில சமயம் நினைக்கும் போது

க்ரீச்...

என்னடா நிறுத்திட்ட

இங்க ஓரமா நிக்றது... சார் வணக்கம்... நல்லாருக்கிங்களா

வணக்கம் நீங்க....

சார் நான் ராஜ்... 7 வருஷத்துக்கு முன்னாடி உங்க காலேஜ்-லதான் படிச்சேன்

வணக்கம் சார் நான் சந்துரு... இந்த காலேஜ் பர்ஸ்ட் செட்

ம் ஞாபகம் இருக்கு மறக்க முடியுமாப்பா... எல்லாம் நல்லா இருக்கீங்கள்ள

ம் இருக்கோம் சார்... எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கு... உங்களுக்கு பத்திரிக்கை வைக்கணும்னுதான் காலேஜ் போய்ட்டு இருக்கறேன்... வழியிலேயே உங்கள பாத்துட்டேன்

ரொம்ப சந்தோஷம்பா... எப்ப கல்யாணம்... எங்க வச்சு...

இங்க கோயமுத்தூர்லதான் சார்... நீங்க கண்டிப்பா வரணும்

ம்... அதுக்கென்னப்பா வந்துட்டா போச்சு

சரி சார் வர்றோம், அப்புறம் இங்க நின்னுகிட்டு இருக்கிங்களே... யாருக்காகவாவது காத்துகிட்டு இருக்கிங்களா

இல்லப்பா என் வண்டி திடீர்னு மக்கர் பண்ணி நின்னுருச்சு... என்ன பண்றதுன்னு யோசனையா நின்னுகிட்டு இருக்கேன்

நம்ம வண்டில ஏறிக்கோங்க சார்... காலேஜ்-ல விட்டர்றேன்!

(சந்துரு ஏன் என்னை ஒரு மாதிரி பார்த்து குறும்பாக புன்னகைக்கிறான் என்று யாராவது சொல்லுங்களேன்!)


கவனிக்க: உரையாடுவோர்

ராசு

சந்துரு

வித்யா

கதிர், ஐஸ்கிரீம் கடைக்காரன், ராசுவின் அம்மா, பிரின்சி என்று இடம் பொருளறிந்து ஊகித்துக் கொள்ளவும்!

9 comments:

ராசுக்குட்டி said...

என்னடா ஒரே கதைய திரும்ப திரும்ப போடறானேன்னு பாக்கறீங்களா... மன்னிச்சுக்கங்க. நீளம் கருதி தனித்தனியா எழுதுனா வெவ்வேறு நேரங்களில் படிப்பவர்கள் அவற்றை தனித்தனி கதை என்று நினைத்து சாரம் கெட்டு விடுகிறது.

மேலும் ஓட்டு வாங்கறதுக்குன்னு ஒரே பதிவா இருக்கணும் இல்லயா அதுக்காகத்தான் இங்கே முழுதாக கொடுத்து விட்டேன், ஏற்கனவே படித்துபிடித்திருந்தால் தாண்டிச் செல்லலாம்... இல்லைன்னா கொஞ்சம் நேரம் ஒதுக்கி படித்து உங்கள் கருத்துக்களை சொன்னால் மகிழ்வேன்!

Anonymous said...

எலேய் ராசு, கல்லூரியில நடந்த கலாட்டாக்கள், நண்பர்களோடு கிடைத்த தருணங்கள், நம் வாழ்வில் பல விஷயங்களை அசை போட வைச்சுடுச்சு இந்தக் கதை...

போகுமிடத்திற்கு ஏற்ப வளைந்தும், வேகமெடுத்தும், தெளிந்தும், கொட்டியும், பெருக்கெடுத்தும் ஓடும் ஆறு போல இருக்கும் கதைப்போக்கு, அருமை..

ஒரு ஒன் லைன்ல மனசில பட்டதை சொல்லிருக்கேன். இங்கே...

வெற்றி பெற வாழ்த்துக்கள் !

ராசுக்குட்டி said...

நன்றி அபி,

முரட்டுக்காளை - ரொம்ப வேகமாத்தானய்யா இருக்கீரு, ஒரு வரி விமர்சனம் கலக்கல், அதுவும் அத்தனை படைப்புக்கும் ஒரே நேரத்தில்... ம் ..ம் அசத்தல்!

Anonymous said...

ராசுக்குட்டி, இப்பதான் முடிவுகள் பார்த்தேன் ! கலக்கிட்டீங்க.. ! இந்த முறையும் வெற்றி பெற்றதிற்கு வாழ்த்துக்கள் !

இன்பா (Inbaa) said...

வாழ்த்துக்கள், வெற்றிப் பயணம் தொடரட்டும்....

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் ராசுக்குட்டி! உங்கள் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்

லிவிங் ஸ்மைல் said...

தேன்கூடு போட்டியில் வெற்றி பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்..

தொடர்ந்து வெற்றி பெறவும்..

கதிர் said...

ராசுக்குட்டிக்கு வாழ்த்துக்கள் :)) _/\_

காதுல புகையுடன் தம்பி

ராசுக்குட்டி said...

நன்றி முரட்டுக்காளை, உங்கள் விமர்சனமும் ஒரு காரணமே.

இன்பா, இளா, லிவிங் ஸ்மைல் -> அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி

தம்பி -> வாழ்த்துக்களுக்கு நன்றி, But Y காதுல புகை, எனக்கே இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சிதான்