Saturday, February 03, 2007

62 : அறுபது ஆயிருச்சு, மணிவிழா முடிஞ்சிருச்சு... ஆனாலும்!

Photobucket - Video and Image Hosting

வணக்கம் மீண்டும்!

ஹேப்பி பொங்கல் சொல்லியிருக்கலாம்... குறைந்த பட்சம் !! குடியரசு வாழ்த்துக்களையாவது சொல்றேன் பேர்வழின்னு ஒரு ஆஜர் போட்டிருக்கலாம். கொஞ்ச நாளா எதுவுமே எழுதலதான், ஒத்துக்கறேன் என் தப்புதான், அதுக்காக ராசுக்குட்டின்னு ஒரு ஜீவன் உயிரோட இருக்குன்றதையே மறந்துட்டா எப்படி? அதான் திரும்ப வந்துட்டேன்! அட ரெண்டு பதிவு போட்ட பிறகும் போதிய கவனிப்பு இல்லல்ல அதான் திரும்ப, திரும்ப... திரும்ப வந்துட்டேன்னு ஊர்ஜிதப்படுத்த வேண்டியதா இருக்கு.

என் அம்மத்தா மற்றும் தாத்தாவின் 61-வது கல்யாண நாள் வாழ்த்துக்களை இந்த வலைப்பூவின் வாயிலாக அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அட நெஜமாத்தாங்க... நக்கலா நோ நோ! இந்தப் பதிவு அவர்களுக்கான "வாழ்த்த வயதில்லை... வணங்குகிறோம்" பதிவுதான். இன்னும் குறிப்பா சொல்லணும்னா இது 60-ம் கல்யாணம் இல்லை, 60க்கு 60, 80க்கு 80 எல்லாம் முடிஞ்சு 60 வெற்றிகரமான கல்யாண நாட்களை கடந்து விட்டார்கள்.

அதுவும், என் சித்தியை பெறும் வேளையில் நடந்த பிரசவக் கோளாறுகளில் தன் கண் பார்வையை இழந்த அம்மத்தா, அவர்களை இன்றுவரை கவனித்துக் கொள்ளும் தாத்தா இருவருக்கிமிடையே இருக்கும் அந்த அன்பை, அந்நியோன்யத்தை நான் பல வேளைகளில் குறுநகையுடன் ரசித்திருக்கிறேன்.

என் பள்ளி விடுமுறைகள் பொதுவாக அவர்கள் வீட்டில்தான் செலவழியும், அப்போது நான் அந்த அன்பின் அதிர்வலைகளை உணர்ந்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு ஒரு பெரிய கனவு இருந்தது, பெரிய பணக்காரனாகி("நல்லா படிச்சு, பெரிய டாக்டராயி" அப்டின்னு கனவுல கூட வந்ததில்ல நம்ம படிப்பு லட்சணம் உணர்ந்து), எங்க அம்மத்தாவிற்கு கண் அறுவை சிகிச்சை செய்வித்து அவர்கள் கண் பார்வையை மீட்டெடுக்க வேண்டும் என்று. ஒருமுறை என் தாத்தாவிடம் இதை சொல்லிவிட, "போடா கோட்டிக்காரப் பயலே... பெரிய சீமையில இல்லாத பணம்! எல்லா டாக்டரையும் பாத்தாச்சு... அவளுக்கு கண் பார்வை தர்றதா ஒரு பய சொல்லியிருந்தாலும் ஏந்தலைய (என் தலையை) அடமானம் வச்சாவது பாத்துருக்க மாட்டேன்" என்று கோபமாக கர்ஜித்து விட்டு "இந்தா காலணா, ஓடிப்போயி தாத்தாவுக்கு ஒரு பொடி மட்டை வாங்கிட்டு வா பாப்போம்" என்று முடித்து வைத்தார் என் கனவை.

என் பதின்ம வயதில் என் அப்பாவுடன் நடந்த ஒரு சிறு உரையாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. என் அம்மத்தா-தாத்தாவுக்கு எட்டு குழந்தைகள் இதில் மூன்று குழந்தைகள், அம்மத்தாவின் கண் பார்வை போன பிறகு பிறந்தவர்கள். நான் இதைக் குறிப்பிட்டு, "கண்பார்வை போன பிறகாவது தாத்தா சும்மா இருந்திருக்கலாம்... அதுக்கப்புறம் 3 குழந்தைகள்னு படுத்தியிருக்காரே" என்றேன். அதற்கு அப்பா "அப்படியில்லடா... கண்பார்வைதான் போச்சேன்னு ஒதுக்கி வைக்காம எல்லா விதத்திலயும் முன் போலவே நடத்தியிருக்காரே நாம அதத்தான் பாக்கணும். இப்போ கூட எல்லாருக்கும் கல்யாணம் பண்ணி தனிக்குடித்தனம் வச்சுட்டு அவர்தானே அவுங்கள பாத்துக்கறாரு... எந்த மருமகள்க கிட்டயும் விடலயே அதப்பாரு" என்று தெளிவு படுத்தினார்.

பின்னொரு சமயம் என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது இந்தப் பேச்சு வந்த பொழுது மிகச் சாதாரணமாய் சொன்னார்கள் "பிரசவத்துல போன பார்வை பிரசவத்துலயே வந்துரும்னு கூட நெனச்சுட்டுருந்துருப்பாரு". இந்த விஷயத்தில் எது உண்மை என்பதை விட நான் என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் யோசித்தேன்.

பழுத்த இந்த வயதிலும் மாறாத பேரண்பு நிறைந்த அவர்களின் வாழ்நாள் நீண்டு, எங்கள் அனைவருக்கும் அன்பை அன்போடு எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள இன்னும் இன்னும் கற்றுத் தர வேண்டும், வாழ்வின் ரகசியங்களை வாழ்ந்தளிக்க வேண்டும், என்ற என் ஆசையை மட்டுமே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மேலும், நெருங்கிய சொந்தங்கள் இறந்த போது உணர்ச்சி வயப்பட்டிருக்கிறேனே ஒழிய கொஞ்சமே கொஞ்சம் யோசித்து கண்தானம் அளித்திருந்தால் இது போன்ற இருவர் வாழ்வில் இன்னும் கொஞ்சம் சந்தோஷத்தை அளித்திருக்கலாமே என்ற குற்ற உணர்வு அப்பிக் கிடக்கிறது என் மனமெங்கும். இனி எனக்குத் தெரிந்து ஒரு ஜோடிக் கண்கள் கூட மண்ணுக்குள் போகக் கூடாது, தீக்குமிரையாகக் கூடாது என்று ஒரு உறுதியுமெடுத்திருக்கிறேன். நீங்களும் யோசியுங்கள்.

இப்போதைக்கு வ்வ்வ்வ்வ்வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா!

8 comments:

இராம்/Raam said...

இராசு,

என்னமோ தெரியலைங்க... இதை படிச்சவுடனே கண்கள் பனித்தது. அம்மத்தாவே நல்லா பார்த்துக்க சொல்லுங்க தாத்தாவே....

வல்லிசிம்ஹன் said...

கண் தானத்தைவிட பெரிய உதவி எது.
தாத்தாவுக்கும் பாட்டிக்கும் வணக்கங்கள்.

கதிர் said...

படித்தவுடன் நெகிழ்ச்சியாக இருந்தது நல்ல பதிவு ராஸ்குட்டி!

நல்ல தாத்தா பாட்டிகள்!

என் தாத்தா பாட்டி இருவரும் அவர்களுக்குள் பேசி நான் பார்த்ததே இல்லை. தாத்தா ஒருவேளை சாப்பிடலன்னாலும் எல்லார்கிட்டயும் சொல்லுவாங்க, ஏன் சாப்பிடலன்னு கேளுடா கேளுடான்னு. தாத்தா மேல நிறைய பாசம் எங்க பாட்டிக்கு அதே அளவு கோவமும்.

அவங்க ரெண்டு பேருக்கும் மீடியேட்டர் நான் ஆனா அவங்க ரெண்டு பேரும் சாகிற வரைக்கும் பேசிக்கவே இல்ல.

வெட்டிப்பயல் said...

ஆஹா... தாத்தா பாட்டிக்கு என் வாழ்த்துக்கள்!!!

கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு!!!

ராசுக்குட்டி said...

கண்டிப்பா சொல்றேன் இராம்!
அவங்கள அவர விட நல்லா யார் பாத்துக்க முடியும்...

(இப்டி சொல்லியே நாங்கள்லாம் எஸ்கேப் ஆயிடறோம்னு நினைக்கிறேன்)

ராசுக்குட்டி said...

உண்மைதான் வீண் செண்டிமெண்ட் பேசி செய்ய முடியக்கூடிய காரியங்களை கூட செய்யத் தயங்குகிறோம் பொதுவாகவே...

உங்கள் வணக்கங்களுக்கு நன்றிகள் பல!

ராசுக்குட்டி said...

தம்பி,

உங்களுக்கு ரெண்டு பேரையும் கேலி பண்ணி நல்லா பொழுது போயிருக்கும்னு நினைக்கிறேன். இதுவும் ஊடல் தான்... ஆனால் சந்தோஷமே "ஊடியபின் கூடிப் பெரின்" தானே... கொஞ்சம் பிடிவாதத்தை தளர்த்தியிருந்தா இன்னும் நிறைய சந்தோஷத்தை அனுபவித்திருக்கலாம்... சரிதானே!

ராசுக்குட்டி said...

உண்மைதான் வெட்டி... அவங்க அளவுல பாதி அளவு கமிட்மெண்ட் காமிச்சாலே நம்ம சிறந்த கணவன்/மனைவி ஆயிடுவோம்னு நினைக்கிறேன்!