Friday, November 17, 2006

55 : இலவசங்களின் விலை - தேன்கூடு போட்டிக்கு

Photobucket - Video and Image Hosting

என்ன பெரிய கருப்பா அடுத்த மாசம் பட்ஜெட் தாக்கல் பண்ணனும் எல்லாம் ரெடி பண்ணிட்டியா... எதிர்க்கட்சி காரனெல்லாம் கண்ல வெளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டு காத்துருக்கானுங்க என்ன குத்தம் கண்டு பிடிக்கலாம்னு

என்னங்கய்யா இப்படி சொல்லிட்டிங்க என்ன நம்பி எவ்வளவு பெரிய பொறுப்ப ஒப்படச்சுருக்கிங்க...துண்டு விழாத அளவுல பட்ஜெட் போட்ருக்கங்கய்யா விவரம் எல்லாம் இந்த ஃபைல்ல இருக்கு பார்த்துட்டு சொல்லுங்க

மந்திரிங்க கணக்க காமிச்சு மத்தில இருந்து ஒரு ஆயிரம் கோடி வாங்குனோம் ஆனாலும் பத்தாதேய்யா எப்படி சமாளிச்ச

கஷ்டமாத்தான் இருந்துச்சுங்கய்யா... போன வருஷம் இலவச வேஷ்டி சேலை குடுத்த வகையிலயே ஒரு 500 கோடி துண்டு விழுந்துச்சு. 1000 கோடிய குடுத்துட்டு டில்லிக்காரன் கூட்டு வரிய அமுல் படுத்தனும்னுட்டான் அதுல ஒரு 1300 கோடி துண்டு விழுந்துச்சு ஆனா 1000 கோடி மானியம் கிடைச்சது அப்படி இப்படின்னு ஒரு 800 கோடி துண்டு விழறாப்ல இருந்துச்சு அப்புறம்தான் அரிசி கொள்முதல் விலைல கிலோவுக்கு 6ரூபாயும் கரும்புல டன்னுக்கு 400 ரூபாயும் குறைச்சு எடுத்தோம் அதுல கணக்கு நேராகி 1118 கையிருப்பு இருக்கு

பிரமாதம்யா... எட்டாங்கிளாஸ் படிச்சவனா இருந்தாலும் எடுத்துக்காட்டா ஒரு பட்ஜெட் குடுத்துருக்க...

***

செட்டியாரய்யா நம்ம ரேஷன் கார்ட குடுத்தீகன்னா நாளைக்கு மந்திரி வேஷ்டி சேலை தர்றாராம் வாங்கிட்டு தந்துருவனுங்க

காளி அந்த சிவப்பு கலர் பேரேட எடு... முனியா பழைய பாக்கி 350 இருக்கு இப்ப ஒம் மச்சான் செத்தாம்னு கணக்குல சேந்தது ஒரு 400 இருக்கு எப்ப அடைக்கப் போற அந்தக் கணக்க எல்லாம்

ரெண்டு மாசத்துல அறுவடை இருக்குங்கய்யா அதுவரைக்கும் வாய்தா குடுங்க அறுவடைல எப்படியாச்சும் அடச்சுப்புடறேன். அப்புறம் எழவுக்கு வந்த துணிமணியே நெறய இருக்குங்கய்யா... என் கார்டுக்கும் என் தங்கச்சி கார்டுக்குமா சேத்தின்னா 2 வேஷ்டி 2 சேலை வருமுங்க மந்திரிமார் குடுக்கறத அப்படியே இங்கன கொண்டாந்து குடுக்கறேன், வரவு வச்சிக்கங்கய்யா

எப்படில ரெண்டுரெண்டு வரும் ஓ இன்னும் ஒம் மச்சான் செத்தது கணக்குல வரலயாக்கும்... பெரிய ஆளுதாம்ல நீயி. சரி சரி இந்தா ரேஷன் கார்டு... இலவச வேஷ்டி சேலை என்ன எதுனா மட்டமான சரக்கா கொண்டு வந்து தருவானுங்க சரி அத இங்க கொண்டாந்து காளிகிட்ட கொடுத்திடு ஒரு நூறு ருபா வரவு வச்சிக்குவான்... உன் சொமை குறையுமேன்றதுக்காக சரின்னு சொல்றேன்

எலேய் காளி சாயங்காலம் நூறு ருபா வரவு வச்சுக்கிட்டு முனியண்ட்ட இருந்து ஞாபகமா ரேஷன் கார்ட வாங்கி வச்சுக்கனும் சரியா நான் MLA வீட்டுக்கு போய் மந்திரிய பாத்துட்டு வந்தர்றேன்

***

என்ன கணபதி செட்டியார் எப்படி இருக்கிங்க

வாங்க ரெங்கசாமியண்ணே... MLA ஐயா எப்படி இருக்காரு

ஐயா நல்லா இருக்காரு சரி வர்ற 19ம் தேதி அமைச்சரய்யா முதல்வர் எல்லாம் வரப் போறாங்க தெரியுமில்ல

அப்படியா ரொம்ப சந்தோஷம்... நம்ம பையன் வேலை விஷயத்தையும் அப்படியே காதுல போட்டு வைங்கண்ணே இந்த சமயத்துல

செஞ்சிரலாம் செஞ்சிரலாம்... உங்களுக்கில்லாமலா அப்புறம் 50 நோட்டுக்குள்ள 500 வேஷ்டி 500 சேலை ரெடி பண்ணிக்கங்க MLA ஆபிஸ்ல 50க்கு பில் குடுத்துட்டு நாளைக்கு செக் வாங்கிக்கங்க. செக் வந்ததும் வழக்கம் போல நம்ம கணக்குல 10 வரவு வச்சிக்கங்க. தீபாவளி பாக்கி நேராயிடும்ல...

அதுக்கென்னண்ணே பண்ணிக்கிரலாம்... பையன் வேலை விஷயம் மட்டும் மறந்துராதீங்க

சரி சரி நான் மறக்கல.. இளைஞரணி வரும்போது 2000-மாவது எழுதுங்க அப்படின்னாதான் ஐயாகிட்ட பேசவாவது முடியும் வரட்டுமா.

***

ஹலோ MLA சந்தானம் பேசறேன்

யோவ் நான் அமைச்சர் பெரிய கருப்பன் பேசறேன். உன் தொகுதில என்னய்யா நடக்குது... இன்னிக்கு தலைவர் கூப்ட்டு எகிறு எகிறுன்னு எகிறிட்டாரு.

என்ன விஷயம் அண்ணாச்சி...

நம்ம சாதிக்காரன்னு உன்ன MLAவாக்கி அழகு பாத்தா... பட்டினி சாவு நெறய ஆகிப்போச்சாம்லய்யா... மாத்து துணி கூட இல்ல, அவன் அவன் மருந்தக் குடிச்சிட்டு செத்துப் போறாம் அரசாங்கம் என்ன பண்ணுதுன்னு நெற்றிக்கண்ல கிழிகிழின்னு கிழிச்சுட்டாம் அதுலயும் உன் தொகுதிலதான் நெறயன்னு என்ன புடிச்சி வறுத்துட்டாரு

அமைச்சரே... என்ன சொல்றீங்க, நீங்க சொன்னீங்கன்னுதானே..

அதெல்லாம் பேசிக்கிட்டு இருக்காத... என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது எதயாவது செஞ்சு நம்ம கட்சி பேரக் காப்பாத்து முக்கியமா தலைவர் மனசு குளிர்ற மாதிரி எதாவது செய். அவ்ளோதான் சொல்வேன்

சரிங்கய்யா

பி.ஏ ரெங்கசாமிய கூப்பிடய்யா... யோவ் அமைச்சர்ட்ட பேசி முதல்வர் அப்பாயிண்ட்மெண்ட் புக் பண்ணிக்க. நெற்றிக்கண்ல ஒரு பக்க விளம்பரம் ஒண்ணு ரெடி பண்ணிக்க முதல்வர் தலைமையில் இலவச வேஷ்டி சேலை வழங்கறதா செய்தி பண்ணிக்க துயர் துடைக்க வந்த தூயவனே அது இதுன்னு நாலஞ்சு பஞ்ச் வச்சுக்க சரியா

அப்புறம் 500 வேஷ்டி சேலை ரெடி பண்ணிக்க தொகுதி நிதிலருந்து 50,000 எடுத்துக்க. இளைஞரணிட்ட சொல்லி விழா செலவுக்கு 15,000 வசூல் பண்ணிக்க சொல்லு

****
என்னடா காளி இன்னிக்கு மதுரைல இருந்து சரக்கு வந்துருச்சா... சரி விலை எழுதி வில்லையெல்லாம் ஒட்டிரு

என்ன விலை எழுதட்டுங்கய்யா

என்னடா வேலைக்கு சேந்து ஆறுமாசம் ஆச்சு இன்னும் இதப் போயி எங்கிட்ட கேட்டுகிட்ட இருக்க? சரி அந்த ஃபைல எடு

எடுத்தியா... வீனஸ் வேஷ்டிக்கு நேரா என்ன போட்ருக்கு

50 எண்ணம் 980ன்னு இருக்குங்கய்யா

சரி பூனம் சேலைன்னு போட்டு அதுக்கு எதுத்தாப்ல என்ன இருக்கு

100 எண்ணம் 2520ன்னு இருக்குங்கய்யா

அந்த லாரிக்கார கிருஷ்ணம்பய இத குடுத்துட்டு எவ்வளவு வாங்கிட்டுப் போனான்

அம்பது ருபா வாங்கிட்டுப் போனான்

நீ ஒரு வெவரங்கெட்டவன் நாப்பது ரூபாதான்னு அடிச்சுப் பேச வேணாமா...நீயெல்லாம் எப்படித்தான்... சரி சரி வேஷ்டிக்கு 45ரூபான்னு எழுதிக்கோ சேலைக்கு 65ன்னு போட்டுக்கோ

அப்படியே கல்லாப் பெட்டிலருந்து ஒரு பத்து ருவா எடு. முனியன் வீட்டு கேதத்துக்கு போய்ட்டு வந்தர்றேன். நீ கடையப் பூட்டி சாவிய ஆச்சிக்கிட்ட குடுத்திடு. ஆமாம் இன்னிக்கு அவன் கணக்குல எவ்வளவு பற்று.

3 சேலை, 3 வேஷ்டி-துண்டு எடுத்தான் 420 வந்துச்சு 20 தள்ளி 400 எழுதிருக்கேங்க.

***
அம்மா... செட்டியாரய்யா... இருக்காகளா

என்ன முனியா காலங்காத்தால வந்துருக்க...

இல்லம்மா, வீட்ல ஒரு காரியம்... ம்... வந்து... ஐயா இருக்காகளா

யார் இறந்தது...

என் மச்சினந்தானுங்கம்மா... கரும்பு போட்ருந்தான், அறுப்பு முடிஞ்சதும் மில்லுல ரேட்ட கொறச்சுட்டாங்க அறுப்பு கூலிகூட கட்டலன்னு பூச்சி மருந்த எடுத்துக் குடிச்சிட்டாம் பாவிப்பய... பச்சப் பச்சப் புள்ளைங்கம்மா... எந்தங்கச்சிய கண் கொண்டி பாக்க முடியல... சொல்லும்போதே துண்டெடுத்து வாய் பொத்தி குலுங்க ஆரம்பித்தான் முனியன்.

ஏங்க... இங்க செத்த வந்துட்டு போங்க

கேட்டுகிட்டுதான் இருந்தம்டா முனியா... சாயந்தரம்தான தூக்குவீங்க வந்தர்றேன்... இப்ப எதுனா வேணுமா

கேதத்துக்கு கோடித் துணி எடுக்கணும்ங்கய்யா அதுக்குத்தான் இத்தனை காலையில எழுப்ப வேண்டியதா போச்சு...

சரி சரி காசு எதுவும் வச்சுருக்கியா

இல்லங்கய்யா... ரேஷன் கார்டு எடுத்துட்டு வந்திருக்கேன்

***

(இந்த கதைய கடைசி பகுதில இருந்து கூட மேல படிச்சிகிட்டு போகலாம்...பெரிசா ஒண்ணும் மாற்றம் இருக்காது)

3 comments:

கதிர் said...

அட இன்னொரு முகமா!!

இது கதையே இல்ல. ஊருக்கு ஊரு நடக்குற கொடுமைதான்.

நான் ஸ்கூல் படிக்கையிலே ஒரு ஆள் கோவணத்தை மட்டுமே கட்டிகிட்டு வேப்பங்குச்சியோட ஏரிக்கர பக்கமா வருவாரு.

இப்ப அவரு ரேஞ்சே வேற.

அம்மா ஆட்சியில ஒரு மூணு மாசம் அமைச்சரா இருந்தாரு.

பணத்த பாத்தவுடனே பஞ்சத்துல இருந்தவனும் ஒரே மாதிரிதான் ஆகிறான், மஞ்சத்துல இருந்தவனும் ஒரே மாதிரிதான் ஆகிறான். ஒரு சிலரே தப்பி போயிடறாங்க.

ஏண்ணே ஊருலருந்து வந்துட்டோம்னு ஒரு பதிவ போட்டு அலர்ட் பண்றதில்லயா?

கதிர் said...

பதிவ போட்டுட்டு எஸ்கேப்பா?

Anonymous said...

Nalla kathai, vaashthukkal vetri pera ;)