
"எங்க பரம்பரையில ஆம்பளைங்க கூட இம்புட்டு படிப்பு படிச்சதில்ல, எம்பேத்தி எட்டு ஜில்லாவுக்கும் கலெக்டராகப் போறா", பார்ப்போரிடமெல்லாம் சொல்லி சொல்லி மாய்ந்த பாட்டி "மாப்ள சொல்றத கேட்டு நடந்துக்க தாயி" என்றதில் காலம் காலமாய் பெண்கள் கையில் போடப்பட்டிருந்த விலங்கு என் கையிலும் அலங்காரமாய் ஏறியது.
"அம்மா நான் இன்னும் படிக்கணும்" என்றதற்கு "சும்மா கிடடி, நீ படிச்சிருக்ற படிப்புக்கு மாப்ள தேடறதுக்கு முன்னாடி நாக்கு தள்ளுது... இன்னும் படிக்கப் போறாளாம் படிக்க..." அவள் காலைச் சுற்றியிருந்த சங்கிலியின் கண்ணிகள் என் கால்களையும் இணைத்துக் கொண்டது.
"அம்மாடி கல்யாணி, அப்பா இந்த வருஷத்தோட ரிடையர்ட் ஆகப்போறேன், வர்ற பணத்துல உன் கல்யாணத்தை பண்ணி வைச்சுட்டன்னா என் கடன் தீர்ந்துரும்"
"இல்லப்பா, நான் வேலைக்கு போறேன், அப்படியே நான் ஆசப்பட்ட ஆராய்ச்சிப் படிப்பையும் படிச்சிடறேன்ப்பா...அதுக்கப்புறம் கல்யாணத்த பத்தி யோசிக்கலாமே?"
"இல்லம்மா அதெல்லாம் சரிவராது, வயசாச்சி...நாலுபேர் நாலு விதமா பேசிடுவாங்க", என்று தலைகோதி சொன்னதில், முகம் தெரியாத சமூகத்தின் போலி சட்டதிட்டங்கள் முன் என் நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் தலைகுனிய வேண்டியதாயிற்று.
அதுவும் அமெரிக்க மாப்பிள்ளை என்றதும் என் பேச்சைக் கேட்க ஆளே இல்லை, "ஏங்க நான் மேற்கொண்டு இங்க படிக்கட்டுமா..." கேள்வி முடியுமுன்னரே "அதெல்லாம் காசுக்குப் பிடிச்ச கேடு... படிச்சு என்ன செய்யப் போற... ஆச்சு, அடுத்த வருஷமெல்லாம் குழந்தை குட்டின்னு, உனக்கு வீட்ட பாத்துக்கறதுக்கே நேரமில்லாமல் போய்டும் பாரேன்". எனக்கிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் தீய்ந்து போனது அவனுக்கெப்படி தெரியும்.
"ஏய் அடுப்புல ஏதோ தீஞ்சு கருகுது பார்... கவனமெல்லாம் எங்க இருக்கு", ஆதிக்க உணர்வின் கோரவிரல்களில் நகங்கள் படுவேகமாக வளர்ந்தன. வலுக்கட்டாயமாய் உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டு ரசித்து ரசித்து சமைத்துப் போட்டாலும், டி.வியில் ஒரு கண் வைத்துக்கொண்டே பொங்கலா, கிச்சடியா என்றுகூட தெரியாமல் சாப்பிட்டுப் போகையில், சமைக்கும்போது பட்ட தீக்காயம் இன்னும் கொஞ்சம் எரிகிறது.
இதோ, இன்று அடிவாங்காத குறையும் தீர்ந்துவிட்டது. எவ்வளவு முயற்சி செய்தும் வழிந்தோடும் கண்ணீரை மட்டும் நிறுத்த முடியவில்லை. கண்ணாடி முன் நின்று என் கன்னங்களை தடவுகையில் அவன் விரல் தடங்கள் என் விரல் பட்டதும் தேக்கி வைத்திருந்த அத்தனை கண்ணீரும் அணை உடைத்து என் கன்னங்கள் வழியே வழிந்தோடுகிறது.
***ooOoo***
ஹாய் சந்துரு
ஹேய் கல்ஸ், நியூயார்க் நகரம்.. உறங்கும் நேரம்... என்ன பண்ற?
ஹா ஹா, ரமேஷ் இன்னும் வேலையில இருந்து இன்னும் வரல, அதான் அதுவரைக்கும் நெட்ல மேயலாம்னு பாத்தா நீ இருந்த ஆன்லைன்ல... கூப்ட்டேன், சரி நீ என்ன பண்ற
நான்கு சுவற்றுக்குள்ளே... நானும் கொசுவத்தியும் கொடுமை கொடுமை ஓ, கொசு, கொடுமை கொடுமை ஓ!
ஹே... கத்தாதடா... உன் பாட்டுதான் கொடுமையா இருக்கு... இன்னும் அப்படியேதாண்டா இருக்க நீ எப்பப் பாத்தாலும் கடிச்சுக்கிட்டு
சரி உன் சிலோன் பொண்டாட்டி எப்படி இருக்கா
என்னமோ ஊர் ஊருக்கு பொண்டாட்டி வச்சுருக்றா மாதிரி சிலோன் பொண்டாட்டி எப்படி இருக்கான்ற... ம்ம்.. சூப்பரா இருக்கா ரெண்டு பேரும் இந்தியா வந்திருக்கோம்... ரெண்டு வாரமாச்சு
ஓ கிரேட்... போன ரெண்டு வாரமாத்தான் ஊருக்குள்ள சிக்-குன் குனியான்னு சொன்னாங்க... பொறு எதுக்கும் மதுரை முனிசிபாலிடிக்கு ஃபோன் பண்றேன்.
பாத்தியா வார்ற... அப்புறம் எப்படி இருக்கு அமெரிக்க வாழ்க்கை... சொல்ல மறந்துட்டனே சுலோவுக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு தெரியுமா
ம்ம்... தெரியும்டா, போன வாரம் அவ எனக்கு ஃபோன் பண்ணி கல்யாணம்ன்னா... சந்தோஷந்தான், அமெரிக்கா மாப்பிள்ளைன்னு சொல்லும்போது ஃபோன்ல கூட அவ பூரிப்ப மறைக்க முடியவில்லை. எனக்குன்னா தாங்க முடியாத ஆத்திரம், அடியே ஒத்துக்காதடி! அமெரிக்கா.. அமெரிக்கான்னு இங்க வர்றதுக்கு முன்னாடிதான் அடிச்சுக்கும்... வந்த பின்னாடிதான் தெரியும்னு, எல்லாத்தையும் கொட்டிடனும் போல அப்படி ஒரு படபடப்பு வந்திடுச்சு. எப்படியோ சமாளிச்சிக்கிட்டு சந்தோஷம்னு சொல்லி ஏதோ ஒப்பேத்தி வைச்சேன். ஒரு வேளை அவ திருமண வாழ்க்கை சந்தோஷமா அமைஞ்சா என்னால கெட்டுப் போனதா இருக்க வேண்டாமே!
ஆரம்பிச்சிட்டியா உன் புலம்பல... நல்ல வேளை சுலோவ குழப்பாம இருந்தியே...
ஹேய் நான் இங்க கிட்டத்தட்ட சிறையில இருக்கேன் தெரியுமா, என் கஷ்டத்த சொல்லி புலம்பறதுக்குக் கூட ஒரு ஜீவனும் கிடையாது இங்கே. இதுலேர்ந்து எப்படா விடுதலை கிடைக்கும்னு இருக்கேன். அது சரி உனக்கெங்கே தெரியப் போகுது எங்களோட வலியைப் பற்றி, நீயும் ஒரு MCPதானே
என்ன, மேல் சாவனிஸ்ட் பிக்-ன்றியா... நீ என்ன வேணும்னா திட்டு, உன் கனவை பாதுகாக்க, செயல்படுத்த உனக்குத் தெரியல, ஊர்ல இருக்ற எல்லார் மேலயும் கோபப்படுற...
எல்லாருமா சேர்ந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க... இப்போ என்ன விட்டுட்டு ஓடிடுன்றியா
உடனே அந்தக்கரைக்கு தாவினா எப்படி கல்யாணி, விடுதலைன்றது விட்டுட்டு ஓடறதுல இல்ல. உன் ஆசைகள் மேல உனக்கில்லாத அக்கறை, அதைப் பற்றி கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் கூட தெரியாத உன் கணவனுக்கு இருக்கனும்னு எதிர்பார்க்கிறது நியாயமா?
என்னடா படிக்கணும்னு ஆசப்படறேன் அது தப்பா, இதக்கூட புரிஞ்சிக்க முடியாதா
எனக்குத் தெரிஞ்சு நிறைய பேர், சும்மா பேருக்கு, அமெரிக்காவில் படித்தேன் அப்டின்ற பெருமைக்கு படிப்பாங்க உன்னையும் அவர் அப்படி நினைத்திருக்கலாம்ல... உன் ஆசைல நீ எவ்ளோ தீவிரமா இருக்கன்றத செயல்ல காமி, ரமேஷே புரிஞ்சிப்பான், நான் பேசின வரைக்கும் அவன் ரொம்ப நல்லவனாத்தான் தெரியறான்.
ம், செயல்ல காமிச்சா மட்டும், அப்பயும் எதுனா நொண்டிச்சாக்கு சொல்வீங்க... ஏதோ மனைவி ஆசைய அப்படியே நிறைவேத்தறா மாதிரி
கல்ஸ் இப்போ நாங்க எதுக்கு இந்தியா வந்திருக்கிறோம் தெரியுமா? ராமேஸ்வரத்துல இருக்ற அகதி முகாம்ல சேவை செய்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்திலொன்றில் பொறுப்பெடுக்க வந்திருக்கிறோம். உனக்கே தெரியும் ஸ்ரீலங்கா நிலைமை, குமுதினிக்கு அவங்க ஊர் மக்களுக்கு எந்த விதத்திலாவது உதவணும்னு ஆசை, நான் கூட முதல்ல புரிஞ்சிக்கல. இத்தனைக்கும் எங்களோடது காதல் கல்யாணம். ஆனா அவ சும்மா இல்ல கனடாவிலிருந்து சுனாமி, பூகம்பம்னு ஒவ்வொன்னுக்கும் நிதி திரட்டிக் குடுப்பா. கலை நிகழ்ச்சிகள் ஒருங்கிணைத்து அதன் மூலமும் உதவிக்கிட்டுருந்தா.
இப்போ போர்மேகம் சூழ்ந்து நிறைய பேர் வெளியேறிக்கிட்டிருக்ற இந்த சூழ்நிலையில இன்னும் நிறைய பண்ணனும்னு ஆசைப்பட்டா, இவளோட உறுதியப்பார்த்துட்டு என் வேலையை நான் மதுரைக்கு மாத்திக்கிட்டேன். சம்பளம்னு பார்த்தா மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான் ஆனா குமுதினி முகத்தில் தெரியும் நிம்மதிக்காக நானும் இப்போல்லாம் வார இறுதிகள்ல அங்க போயிடறேன். விடுதலை, விடுதலைன்னு சொல்றியே, நீ இவங்க கிட்ட எதை விடுதலையா நினைக்கிறாங்கன்னு கேட்டீன்னா, வாழ்க்கை பற்றிய நமது பார்வையே மாறிடும்னு நினைக்கிறேன்.
என்னடா என்னை என் விடுதலைக்காக விட்டுட்டு ஓடாம போராடுன்ற... அங்க போராடாம ஓடி வர்ற அகதிகளுக்காக சேவை செய்யப் போறேன்ற
கல்ஸ், என்னைக் கேட்டா அகதிகளைக் கூட விடுதலைப் போராளிகள்னுதான் சொல்லுவேன், போரின் குரூர நியதிகளை வெறுக்கும் போராளிகள்தான் அகதிகளா வெளியேர்றதுக்கு துணியறாங்கன்றது என்னோட கருத்து. சொந்த மண்ணை பிரிவது எவ்வளவு வேதனையான விஷயம் தெரியுமா? மேலும் எந்த இடத்தில் நடக்கும் போராக இருந்தாலும் அதன் பின்னே ஒளிந்திருக்கும் அரசியல் விளையாட்டு மிருகத்தனமானது.
உன்னோட விஷயம் அப்படியில்லை வானம் கூட உனக்கு எல்லை இல்லைன்றத நீ புரிஞ்சிகிட்டாலே போதும். உன்னை யாரோ கூண்டுல போட்டிருக்கிறதா நீயே நினைச்சுக்கிட்டு உனக்கு சிறகு இருப்பதையே மறந்துட்டன்னுதான் சொல்வேன்.
ம்ம்... ஏதோ சொல்ற, புரிஞ்சா மாதிரி இருக்கு... யோசிக்கிறேன். அப்புறம் கார் சத்தம் கேக்குது, ரமேஷ்தான் வர்றாருன்னு நினைக்கிறேன்... பசியில வருவான், உன் கூட அப்புறமா பேசறண்டா சந்துரு... சொல்ல மறந்துட்டனே நீயும் குமுதினியும் ரொம்ப நல்ல காரியம் பண்றீங்கடா...உங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிய கண்டிப்பா பண்றேண்டா... வர்றேன் அப்புறமா கண்டிப்பா பேசுவோம்...பை பை டாட்டா!
***ooOoo***
அக். 16, 2006 அன்றைய கல்யாணியின் டைரி குறிப்புகள்
......
...
.
.
விரல் தடம் பட்ட இடங்களிலெல்லாம் நான் மறுக்க மறுக்க முத்தமிட்டான் ரமேஷ். நான் நினைத்தது போலில்லை அவனுக்கு காதலிக்கவும் தெரிந்திருக்கிறது, வேலையினாலெல்லாம் அன்று அவனுக்கு தாமதமாகவில்லை. எனக்கொரு பரிசு வாங்கவென்று அலைந்து, எனக்கு மிகவும் பிடித்த காதல் பறவைகள் ஒரு ஜோடி வாங்கி வந்தான். 'என்னை மன்னிப்பாயா' என ஒரு அட்டையும் தந்து ரோஜாப்பூவொன்றோடு என் முன்னே மண்டியிட்டான்.
.
.
...
......
ஹலோ இது என்னோட டைரிங்க... நான் என் ஃபிரெண்டோட நெட்ல பேசினத கேட்டுட்டிங்க, என் டைரியப் படிச்சுட்டிங்க, இதுக்கு மேலயும் சின்னஞ்சிறுசுங்க இருக்ற இடத்துல இப்படி விவஸ்தையில்லாம நிக்கிறதா....
சரி சரி போகும் முன் அதுக்கப்புறம் நடந்ததயும் கேளுங்க. மொத்தம் மூணு விஷயம் பண்ணினேன்-னோம்.
நான் ஆராய்ச்சி உதவியாளராய் வேலைக்கு சேர்ந்து விட்டேன், வீட்ல இருந்தபடியே வேலை செய்யலாம், எனக்கும் ரமேஷுக்கும் மிக்க மகிழ்ச்சி.
சந்துரு-குமுதினி சேவை செய்யும் தொண்டு நிறுவனத்தின் நியூயார்க் நகர கிளை இனிதே தொடங்கப்பட்டது ரமேஷ்-கல்யாணி இருவரையும் இணைத்துக் கொண்டு.
மறுநாள் காலையிலேயே அருகிலிருந்த பூந்தோட்டத்திற்குப் போய் ரமேஷ் வாங்கி வந்திருந்த காதல் பறவைகளை வானில் பறக்க விட்டோம், வானத்தை விட அழகிய இல்லம் பறவைகளுக்கு ஏது?