04 : உதிர்ந்த சிறகும்... ஒட்டிய வண்ணமும்!
முன்குறிப்பு : பயணக்கட்டுரைகள் பிரிதொரு சமயம்... இப்போதைக்கு ஒரு சிறுகதை?!


எல்லாம் சரியா, தவறா? எச்சில் கூட்டி, எச்சில் விழுங்கி, எச்சில் விழுங்கி தயக்கக்கூடு எனைச் சூழ்கிறது. உன்னிடம் நான் சொல்லாத வார்த்தைகளெல்லாம் ஒன்று சேர்ந்து எனை மிரட்டுகின்றன.


அருகில் செல்வாய்... உயரப் பறந்து உச்சிக் கிளையமரும்.
அங்குமிங்கும் அலைக்கழிக்கும்...
சலித்துப்போய் வந்தமர்வாய்... உனை உரசிக் கொண்டு பின்னாடியே வந்து நிற்கும்.
பிடித்தேயாக வேண்டுமென்று ஆசை மறுபடியும் துளிர்க்கும்.
மறுநாள் எல்லா நோட்டுப் புத்தகங்களும் அவரவர் மேஜை மேல் பிரித்து வைக்கப் பட்டிருந்தது. முன் வரிசையிலிருந்து ஒவ்வோர் நோட்டுப்புத்தகமாக பார்த்து வந்தவர், மலர்விழியின் அருகில் வந்ததும் நின்றார். "எந்திரி" என்றார் அதட்டும் குரலில், நடுங்கியபடியே எழுந்து நின்றாள் அவள். "என்ன இது?" கேள்விக்கே மிரண்டு பின் வாங்கினாள். அவர் காண்பித்த நோட்டில் ஒரு வண்ணத்துப் பூச்சியின் படம் அழகாக வரையப்பட்டு பாகம் குறிக்கப்பட்டு இருந்தது.
"கைய நீட்டு", என பிரம்பை கையிலெடுத்தார். புறங்கையில் நட் நட்டென்று... ஒவ்வோர் அடிக்கும், கை உதறி, தொடை நடுவே வைத்து, கண்களில் நீர் தேக்கி பின்னும் கை நீட்டும் துடிப்பில் ஏதோவொன்று என் மனசு பிசைந்தது.
என் வீடு இருக்கும் அதே தெருவில்தான் மலர்விழியின் வீடும். மதிய இடைவேளையின் போது, "பட்டாம்பூச்சி புடிக்க தெர்லன்னா என்னை கேட்டுருக்கலாம்ல" என்றேன் கொஞ்சம் கழிவிரக்கத்துடன்.
"இல்லடா... புடிச்சேன், ஆனா கொன்னு நோட்ல ஒட்ட மனசே வரல அதான்... அழகாதானேடா வரஞ்சுருக்கேன் நீயே பார்" என்றாள். சிவந்து லேசாக வீங்கிய புறங்கையில் ஊதி, "வலிக்குதா" எனக் கேட்கையில் என் கண்ணீல் துளிர்த்த கண்ணீரின் காரணம் இன்றுவரை எனக்கு விளங்கவில்லை.
நான் வண்ணத்துப்பூச்சி பிடிக்கையில் உதிர்ந்த சிறகும், என் விரலில் ஒட்டிய வண்ணமும் நினைவுக்கு வந்து இம்சித்தன. நான் கொன்ற வண்ணத்துப் பூச்சிக்கு அவளிடம்தான் மன்னிப்புக் கேட்டேன். பிராயச்சித்தமாய் என் வீட்டுத் தோட்டத்தில் மேலும் ஒரு ரோஜாச்செடி நட்டு வளர்க்கச் சொன்னாள்.
இயற்கை ரசிக்க, உயிர்களிடத்தில் அன்பு செய்ய, கருணை வழிய, கவிதை பொழிய எனக்கு கற்றுத் தந்தாள் மலர்விழி. தவளை அறுப்பதை தவிர்க்கவே உயிரியல் தவிர்த்து கணிணியல் பயின்றோம். பள்ளி இறுதியாண்டு வரை அவளின் அருகாமை சாத்தியப்பட்டது. பட்டப்படிப்பு படிக்க அவள் சென்னை செல்ல, பக்கத்து ஊர் கல்லூரிக்கு நான் சென்றேன். தீபாவளி, பொங்கல், கல்லூரி விடுமுறை மாதங்கள் மலர்விழி வரவால் இன்னும் விசேஷமாகும்.
கறுப்பு செய்தியுடன் விடிந்த அந்த நாளை எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவள் மரணச் செய்தி கேட்டு ஊரே துடித்துப்போனது. ஈவ் டீசிங் என்றார்கள். ஆணினமாய் பிறந்ததற்கு முதன்முதலாய் வெட்கினேன். அவள் சிறகு பிய்த்தவனை கொன்று விட மனது துடித்தது. ஜெயிலுக்கே சென்றேன் அந்த மிருகத்தை சந்திக்க.
"நான் அவளை மனசார காதலிச்சேன் சார்... அவளுக்கு என்னை பிடிக்கல, எனக்கு அவள விட மனசில்ல... தொடர்ந்து துரத்தினேன்... விட்ருக்கனும் சார்... பிடிக்கலன்ன உடனே விட்ருக்கனும்... தப்பு பண்ணிட்டேன். எனக்கு மன்னிப்பு உண்டா, அவகூட பழகுன ஒவ்வோர்த்தர்ட்டயும் மன்னிப்பு கேட்கனும்... எங்க எங்கம்மாவே என்னை மன்னிக்க மாட்டேன்னுட்டாங்க... நீங்களாவது மன்னிப்பீங்களா" என்று அழுதான். ஜெயில் வாழ்க்கை அவனை ஞானியாக்கி விடலாம். எனினும் முடியும்போது ஒரு ரோஜாச்செடி வளர்க்கச் சொல்லி வந்தேன்.
ஆறாத அந்த காயத்தின் எச்சரிக்கையுணர்வையும் மீறி என்னுள் காதல் வளர்ந்து விட்டது. என் தயக்கங்களை துடைத்தெறிய நான் தயார். எனினும் வண்ணத்துப்பூச்சி பிடிக்க எனக்கு மனதில்லை. உதிர்ந்த சிறகையோ ஒட்டிய வண்ணத்தையோ காண எனக்கு சக்தியில்லை. ரோஜாச் செடியொன்று கணக்கை நேர் செய்துவிடும் என்றெனக்கு தோன்றவில்லை.
என் கையில் மலருடன் காதல் சொல்லி காத்திருப்பேன். எனைப் பிடிக்குமாயின் வந்து காதல் தேன் அருந்து அல்லது உதிராத உன் வண்ணச் சிறகுடன் என்னைக் கடந்து போ.
5 comments:
Rasu
idhula anda butterfly samabavam mattum un lifela nadandha unmai kadainu ulagukku eppa terivikka pora
உண்மைக் கதையா ராசு? நல்லா சொல்லி இருக்கீங்க..
இப்போ தான் மரணம் என்னும் தலைப்பில் போட்டிகள் முடிஞ்சது.. இதையும் போட்டிருக்கலாம்..
அதுக்குதான் முயற்சி பண்ணினேன் பொன்ஸ், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பதிவாகவில்லை. சிபியார் மற்றும் உங்கள் புண்ணியத்தில் இப்போதாவது வந்திருக்கிறதே!
கொஞ்சம் உண்மை...கொஞ்சமே கொஞ்சம் கற்பனை!
அனிதா.. உண்மையா கற்பனையான்றது தெரிவதினால் எதுவும் மாற்றமிருக்க போகிறதா என்ன?
ராசு, உதிர்ந்த சிறகும் ஒட்டிய வண்ண்மும் நல்லா சொல்லி இருக்கீங்க. அதுவும் கவித்துவமாக...நிறைய எழுதுங்கள். எதிர்பார்க்கிறோம். முடிந்தால் தனிமடலிடுங்கள். கதைப்போம்.
கதையை வாசித்த போது என் மனதில் ஏதோ ஓர் சோகம் ஒட்டிக் கொள்கிறது.
ம்... நன்றாக எழுதி இருக்கின்றீகள். வாழ்த்துக்கள்.
Post a Comment