66 : சொல்லாத வார்த்தை - 3
வரமாட்டாயோவென பயந்தேன் என்றாய்
புரியாமல் புருவம் உயர்த்தினேன்
கண்கள் அழுதது போலிருந்தது
புன்னகையால் உடனே பூசி மழுப்பினாய்
இருந்தும் ஒரு துளி உருண்டோடியது
துடைக்க வந்த விரலை
தூரத்திலேயே நிறுத்தினாய்
அந்த
மௌனம் ஒரு பேரிரைச்சல்
நொடி ஓர் ஊழிக்காலம்
கைப்பை திறந்து
"என் மணப் பத்திரிக்கை" என்றாய்
வாங்கத் தயங்கிய என் கையில்
உருண்டோடியது உதிர்ந்தது
நொறுங்கிய இதயத்தில்
ஆணின் அழுகையாய்
கசிந்தது காதல்
நீ வந்து சென்றபோதெல்லாம்
பூக்கள் முளைத்த புற்கள் - இன்று
பொசுங்கிப் போயிருந்தன
ஏன் என்ற கேள்வியொன்று
நெஞ்சாங்கூட்டை தாண்ட வில்லை
வீண் என்று நினைத்தாயோ
நொடி தாண்டி, நீயங்கே இல்லை
காலடியில் ஓர் காகிதம்
என் இதயம் போலே படபடத்தது
எடுத்தேன் ; லேசாய் மலர் வாசம் கசிந்தது
பிரித்தேன் ; ஒரு கவிதை இருந்தது
உறக்கம் பறித்த காதல் பற்றி...
உன்னைத் திருடிய என்னைப் பற்றி...
(முடிந்தது!)
எப்பவோ சோகத்துல எழுதினது! இப்போ பிரிச்சு வைக்க மனசே இல்லைங்க... யாராவது இன்னும் கொஞ்சம் தொடர்ந்து 'சுபம்' போடுங்களேன்...